மேரிலாண்டில் ’சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்’ - கவர்னர் மார்ட்டின் ஒ மலே பிரகடனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ் (யு.எஸ்). அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான மேரிலாண்ட்டில் அக்டோபர் 4ம் தேதி ‘ சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நாள்' என்று அனுசரிக்கப்பட்டது.

இதற்கான கவர்னர் மார்ட்டின் ஓ மலே வின் பிரகடனத்தை, துணைச்செயலாளர் ராஜன் நடராஜன் வழங்கினார்.

அனுபவம் புதுமை

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 'அனுபவம் புதுமை' நிகழ்ச்சியில் மேரிலாண்ட் துணைச் செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன். 'சாதனைத் தமிழராக' கவுரவிக்கப்பட்டார். அறக்கட்டளையின் இயக்குனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலட்சி வேலு டாக்டர் ராஜனுக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

சிறப்புரை ஆற்றிய டாக்டர் ராஜன், கவர்னர் மார்ட்டின் ஓ மலேவின் பிரகடனத்தையும் வழங்கினார். 2014 ம் ஆண்டின் அக்டோபர் 4 ம் தேதி, மேரிலாண்டில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நாள் என்று அனுசரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

13 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளி நடத்தி, அமெரிக்க தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தருவதோடு, பண்பாடு, கலாச்சாரத்தை பேணிக்காக்கும் முயற்சிகள், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செய்து வரும் அறப்பணிகளுக்காக இந்த அங்கீகாரத்தை வழங்குவதாக கவர்னர் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவில் தமிழர் அமைப்புக்காக, மாநிலத்தின் ஒரு நாள் அனுசரிக்கப்பட்டது மிகவும் பெருமை வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை அமெரிக்க தமிழ்ச் சமுதாயம்

மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பேணிக்காத்து வருவது போல், அமெரிக்காவிலும் தமிழர் அமைப்புகள் செய்து வரும் பணிகள் மிகவும் பாராட்டுக்குரியது என்று டாக்டர் ராஜன் நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்தார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினர், அடுத்த தலைமுறைக் குழந்தைகளை முன்னிறுத்தி எடுத்து வரும் முயற்சிகள், வருங்கால அமெரிக்கத் தமிழ் சமுதாயத்திற்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். டாக்டர் ராஜனின் மனைவி, அமெரிக்க விவசாயத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் டாக்டர் சாவித்திரி நடராஜனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தமிழ் தொழில் முனைவோர்கள்

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்களின் கடின உழைப்புக்கு பாரட்டுக்களை தெரிவித்த டாக்டர் ராஜன் அவர்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்திலிருந்து, பல்வேறு முயற்சிகள் எடுத்து அமெரிக்காவில் வந்து வேலை பார்ப்பது என்பதே பெரிய சாதனை தான். ஆனால் அத்துடன் அப்படியே இருந்து விடாமல், தொடர் முயற்சிகள் எடுத்து மென்மேலும் புதிய சாதனைகள் படைக்க வேண்டும்.

வாய்ப்புக்களின் பூமி (Land of Opportunities)க்கு வந்துள்ள நாம், அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தொழில் முனைவோராக முன்னேறலாம். வீட்டில் இருவரும் வேலைக்கு செல்பவர் என்றால் ஒருவர் இப்படிப்பட்ட புதிய முயற்சியில் இறங்கலாம். தமிழ் தொழில் முனைவோர்கள் அதிகரிக்கும் போது தமிழ்ச் சமுதாயத்தின் பொருளாதார பலம் கூடும். அது பல வகைகளில் வருங்கால சமுதாய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று டாக்டர் ராஜன் நடராஜன் கூறினார்.

மாற்றத்தை உருவாக்கும் தலைவராக அழைப்பு

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் அங்கமான ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவர்களையும் டாக்டர் ராஜன் சந்தித்து உரையாற்றினார். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், டாக்டர் அப்துல் கலாம், அதிபர் பராக் ஒபாமா போல், மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்று கூறினார்.

அதற்கு மாணவர்கள் Listen, Learn (from Listening) and Lead என்ற மூன்று தாரக மந்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Sastha Tamil Foundation Day at Mariland


கிராமம் முதல் கேப்பிடல் வரை

தமிழகத்தில் பிறந்த நீங்கள் எப்படி மேரிலாண்ட் துணைச்செயலாளர் ஆக முடிந்தது என்ற மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், கல்வி மட்டுமே வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பியதாகவும், அதனால் படிப்பில் கவனம் செலுத்தி படிப்படியாக உயர்ந்ததையும் விவரித்து கூறினார்.

தன்னால் இவ்வளவு உயர முடியும் போது, அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் ஏராளமாக சாதிக்க முடியும். அரசியல், தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அமெரிக்க அரசியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, தக்க தருணத்தில் பயிற்சி அளிக்கவும் உறுதி அளித்தார்.

அடுத்த தலைமுறை இளம்தமிழர்களுக்கு உறுதுணையாக செயல்படும் வகையில், சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் பணிகள் இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தானும் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும், அறக்கட்டளை இயக்குனர் வேலு ராமனிடம் டாக்டர் ராஜன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mariland Governer Martin O'male has announced Sastha Tamil Foundation Day at Maryland state to honour the non profit Tamil foundation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற