ஓவியம்-தேவா
1
சிறுவன் ததாதிதீ
இப்போது வளர்ந்து விட்டார் நோயுறும் காலங்களில் பருகும் கசப்பு மருந்துக் கலவைகளை அழுகையும் முகச்சுளிப்புமின்றி பருக தேறிவிட்டார். உறக்கம் தெளிந்த நிசிகளில் கண் மிரட்டும் பைசாசங்களேதும் இப்போது அவர் எதிர்வருவதில்லை சங்குப் பூக்களும் நெல்லி மரங்களும் அடர்ந்த எதிர்வீட்டு பூச்சாண்டியும் மீசைக்கார அரக்கனும் தங்கள் கொம்புகளையும் கோர பற்களையும் இழந்து மனிதக் கிழடாகி விட்டார்கள். ஞாயிறு மாலைகளில் அவர் நெஞ்சை குடையும் மறுநாளைய பள்ளி குறித்த கவலைகள் ஏதும் தற்போது இல்லை என்றபோதும் சிறுவன் ததாதிதீ மகிழ்ச்சியாகவும் இல்லை மேலும் சிறுவன் ததாதிதீ வளர்ந்ததால் இழந்தது மேற்சொன்னவைகளை மட்டுமல்ல. 2
குடிகாரனான நமது யாத்ரீகன்
தன் பயணத்திற்கான வரைபடத்தை வரும் வழியில் சூதாடி இழந்து விட்டதால் கால்மாறிப் போய் காற்று உறைந்து கொண்டிருக்கும் நகரத்திற்குள் நுழைந்தான் வீடுகளில், முற்றங்களில், கோயில்களில், பூங்காக்களில் எங்கும் எங்கும் கூழாங்கல்லைப் போல் குவிந்து கொண்டிருந்தது உறை காற்று. கவனிக்க நேரமற்ற நகரவாசிகள் தங்கள் பணிகளில் மூழ்கிக் கிடக்க கூழாங்கல்லை போன்ற அதன் வடிவில் வசீகரிக்கப்பட்ட குழந்தைகளும் பித்தர்களும் அதை வாயில் இட்டு அதக்கிக் கொண்டனர். காற்று உறைதலால் முதியவர்க்கும், குழந்தைகட்கும் பலகீனர்கட்கும் நேரும் சுவாசவாதை குறித்து புரிய நேர்ந்தவன் காற்று உருக்கும் கூடங்களின் அவசியத்தை பிரச ங்கிக்கத் துவங்கிய போது ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றறிவிக்கப்பட்டு நாடு விரட்டப்பட்டான் குடிகாரனான நமது யாத்ரீகன். 3
நினைவுதப்பி மதுவிடுதியிலேயே
விழுந்து கிடப்பவனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறது அவன் தூக்கி வந்த குழந்தை. தன் பெயரும் அறியாத அதன் நடை கனியா பாதங்கள் செல்ல வேண்டிய வழியறியாதவை அவனோ எளிதில் திரும்பவியலா ஒரு தேசாந்திரத்திற்கு வழிநடத்தப்பட்டான் மதுவின் வசியத்தால். நேரம் செல்ல செல்ல பீதியில் அழத்துவங்கிவிட்ட அக்குழந்தையின் அநாதரவு பொருட்டு நீங்கள் செய்யக் கூடியது ஒன்றுமே யில்லை அனுதாபங் கொள்வதும் காத்திருப்பதுந் தவிர. |