For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்தால்.. நினைத்தால்... இறந்தால் முக்தி அளிக்கும் சிவ ஆலயங்கள் - ஆலய தரிசனம்

நாம் பிறப்பு என்னும் பற்றறுத்து முக்தி என்னும் வீடுபேறு நிலையை அடைவதற்கு என்றே சில ஆலயங்கள் உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வீடுபேறு என்னும் முக்தி பெற வேண்டி சில சிவாலயங்கள் உள்ளன. அவற்றை முக்தி ஸ்தலங்கள் என்று சான்றோர்கள் அழைக்கின்றனர். அவைகள் திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வாரணாசி, சிதம்பரம், மதுரை, திருமறைக்காடு, அவிநாசி முறையே பிறக்க, வாழ, நினைக்க, இறக்க, தரிசிக்க, சொல்ல, தீர்த்தமாட, கேட்க என்று அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வைணவ மார்க்கத்தில் பரமபதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருவடியை அடைய 108 திருப்பதிகள் உள்ளனவோ, அது போலவே சைவ மார்க்கத்தல் சிவபெருமானின் திருவடி என்னும் சத்திநி பாதத்தை அடைந்து சத்துநிபாதம் எனும் சிவபெருமானின் அருளைப் பெறவேண்டி எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் சமயக்குரவர்கள் என்னும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகப் பெருமான் என நால்வராலும் பாடல் பெற்ற ஆலயங்கள் 274 சிவாலயங்கள் அதிக சிறப்பு பெற்றதாக விளங்குகின்றன.

நாம் இந்த புண்ணிய பூமியில் பிறந்து வாழ்ந்து இல்லற சுகங்களை அனுபவித்த பின்பு, பிறவிச் சாக்காடு என்னும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்தி என்னும் இறைவனின் திருவடியை அடைய வேண்டும் என்பது இந்து சமயச் சான்றோர்களின் வாக்காகும். அவ்வாறு நாம் பிறப்பு என்னும் பற்றறுத்து முக்தி என்னும் வீடுபேறு நிலையை அடைவதற்கு என்றே சில ஆலயங்கள் உள்ளன.

பிறக்க முக்தி-திருவாரூர்

பிறக்க முக்தி-திருவாரூர்

பஞ்சபூத சிவாலயங்களில் பிருத்வி என்னும் பூமியைக் குறிக்கும் தலம் என்ற சிறப்போடு, சப்தவிடங்க தலங்கள் என்னும் ஏழு சிவாலயங்களில் வீதி விடங்க தலமாகவும் விளங்குவதோடு, திருவாரூர் நகரில் ஒருவர் பிறந்துவிட்டாலே முக்தியடைந்து விடலாம் என்ற சிறப்பும் கொண்ட தலமாக உள்ளது. இந்தத் திருவாரூர் மண்ணில் ஒரு ஜீவன் பிறந்தாலே நிச்சயமாக அந்த ஜீவனுக்கு முக்தி கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு.

வாழ்ந்தால் முக்தி-காஞ்சிபுரம்

வாழ்ந்தால் முக்தி-காஞ்சிபுரம்

கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்பு பெயரைக் கொண்ட காஞ்சிபுரம், பஞ்சபூத தலங்களில் பிருத்வி தலமாகவும் விளங்குகிறது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல், திரும்பும் திசையெல்லாம் கோவில்களாகவே காட்சியளிப்பதால், கோவில்கள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் தான் காஞ்சி மாநகரத்தை நகரேஷு காஞ்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர் பாரவி பாடியிருக்கிறார். "புஷ்பேசு ஜாதி புருஷேசு விஷ்ணு, நாரீஷு ரம்பா நகரேஷு" காஞ்சி என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. அதாவது மலர்களில் ஜாதி மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் ஸ்ரீமகாவிஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, அதேபோல் நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று மகாகவி காளிதாசர் பாடியிருக்கிறார். இன்னும் எவ்வளவோ சிறப்புகள் காஞ்சி மாநகருக்கு உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் வாய்ந்த காஞ்சியில் வாழ்ந்தாலே ஒரு ஜீவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

தரிசிக்க முக்தி-தில்லை

தரிசிக்க முக்தி-தில்லை

பஞ்ச பூத திருத்தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்ச சபைகளில் பொன் சபையாகவும் விளங்குவது சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பாலயம் என்று திருமந்திரம் அருளிய திருமூலதேவர் சொன்னதைப் போல் மனித உடம்பும், கோயிலும் ஒன்றே என்பதை காட்சிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்முடைய உடம்பானது, அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து வகையான கோசங்களைக் கொண்டது. அதை உணர்த்தும் விதத்தில் இக்கோயிலும் ஐந்து திருச்சுற்றுக்களை கொண்டுள்ளது.

மனிதனின் இதயத்துடிப்பானது எப்போதும் துடித்துக்கொண்டே இருப்பதை உணர்த்தவே, ஆடல் வல்லான் என்றழைக்கப்படும் நடராஜர் ஆடும் திருக்கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆங்கிலத்தில் GOD என்பதற்கு Generator, Operator & Destroyer என்று சொல்வார்கள். அதையோ நம் முன்னோர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் படைத்தல், காத்தல், அழித்தல் என்று சொல்லிவிட்டு போயிருக்கின்றனர். சமயக்குரவர்கள் நால்வரில் மாணிக்கவாசகர் இத்தல இறைவனின் கருவறையில் நுழைந்து இறைவனோடு ஐக்கியமானார் என்பது சிறப்பாகும். நவீன விஞ்ஞானத்தின் அத்தனை ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து தரிசித்த உடனேயே முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும்.

நினைக்க முக்தி-திருவண்ணாமலை

நினைக்க முக்தி-திருவண்ணாமலை

படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது, சிவபெருமான், தானே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டி நெருப்பு பிளம்பாக தோன்றி காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை ஆகும். பஞ்சபூத தலங்களில் தேயு என்னும் நெருப்பு தலமாக விளங்குகிறது. சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக மலை உருவில் காட்சியளிக்கும் இங்கு ஏராளமான சித்தர்கள் இன்றைக்கும் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தல இறைவனை தரிசிக்க நாம் இங்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அண்ணாமலைக்கு அரோகரா என்று இருக்கும் இடத்தில் இருந்து பக்திப் பெருக்கோடு வேண்டிக் கொண்டாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்வது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

தீர்த்தமாட முக்தி-திருமறைக்காடு

தீர்த்தமாட முக்தி-திருமறைக்காடு

சமயக்குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் தேவரப் பாடல் பெற்றது இங்குள்ள திருமறைக்காடார் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரைக் கோயில்களில் 125ஆவது கோயிலாகும். சப்தவிடங்க தலங்களில் புவனவிடங்க தலம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டி விட்ட எலிக்கு, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்க இறைவன் அருளிய தலமாகும். இதனால் தான் இக்கோயிலுக்கு "வேதாரண்யம் விளக்கழகு" என்ற பெருமையும் உண்டு.
வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவினை திருநாவுக்கரசர் பதிகம் பாடி திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அடைக்கப்படவும் பெருமை பெற்ற தலமாகும். இவ்வூரின் இன்றைய பெயர் வேதாரண்யம் என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் ஆகும். நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து காரணத்தால் இத்தல இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும் தீர்த்தத்திற்கு வேத தீர்த்தம் என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே, இங்கு வந்து இத்தீர்த்தத்தில் நீராடினாலே நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சொன்னால் முக்தி-திருவாலவாய்

சொன்னால் முக்தி-திருவாலவாய்

மதுரை நகரின் மற்றொரு பெயர் திருவாலவாய் ஆகும். இந்நகரின் சிறப்பைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஒரே நகரம் இதுதான். மதுரை மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது அன்னை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் ஆலயம். அன்னை மீனாட்சியம்மனை இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார மக்கள் அனைவரும் தங்களின் அன்னையாகவே கருதி வழிபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாவை மதுரை நகர மக்களோடு சுற்றுவட்டார மக்கள் அனைவரும் சேர்ந்து தங்களின் வீட்டு விசேஷமாக கொண்டாடி வருகின்றனர்.

இக்கோயிலுக்கு வந்த சமயக்குரவர் நால்வரில் முதல்வரான திருஞானசம்பந்தர்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்தர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயன் திருநீறே!

என்று தேவரப் பதிகம் பாடி மதுரை மன்னன் கூன் பாண்டியனுக்கு திருநீறு பூசி வெப்பு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக ஆக்கிய பெருமை பெற்ற தலமாகும். எனவே தான், இங்கு வந்து இக்கோயிலில் உள்ள அரச மரத்தை 108 முறை வலம் வந்து, திருவாலவாய சுவாமியை மனதில் நினைத்து மனமுருகி வேண்டினால் மரண பயம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

கேட்க முக்தி-அவினாசி

கேட்க முக்தி-அவினாசி

தேவரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு சிவாலயங்களில் முக்கியமான தலம் அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம். அவிநாசி என்பதற்கு என்றும் அழியாத என்று பொருள். இத்தல இறைவனை மனமுருகி வேண்டிக் கேட்டால் நாம் கேட்கும் வரத்தை தருவார் என்பது ஐதீகம். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை மனமுருகி வேண்டி கேட்க, அதனால் மனம் உருகிய இறைவன், முதலை விழுங்கிய சிறுவனை மீட்டுக் கொடுத்த தலம் ஆகும். எமன் வாயில் சென்றவனைக் கூட இத்தல இறைவன் மீட்டுத் தருவார் என்பதால், நாம் கேட்கும் வரத்தை அளிக்கும் முக்தி தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இறக்க முக்தி – வாரணாசி

இறக்க முக்தி – வாரணாசி

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டது, காசி என்னும் வாரணாசி நகரம். இந்நகரத்தை சிவபெருமானே உருவாக்கினார் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கையாகும். வருணா-ஆசி என்னும் இரண்டு நதிகள் சங்கமமாகும் இடம் என்பதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. காசி என்றால் ஒளி என்று அர்த்தம். நாம் வாழும் போது மட்டுமில்லாமல் நாம் இறந்த பின்னும் பிறவா நிலை என்னும் முக்தியை அளிக்கும் நகரமாக அமைந்துள்ளது. காசியில் இறந்தால் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். அதனால் இங்கு இறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும்போது சிவபெருமானே அவற்றின் காதுகளில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இக்கோயிலை கால பைரவரே காவல் காத்து நிற்கிறார்.

English summary
There are some Shiva temples in Tamil Nadu for the Mukthi tarum Siva temple. Witnesses call them places of salvation. They are called Thiruvarur, Kanchipuram, Thiruvannamalai, Varanasi, Chidambaram, Madurai, Thirumaraikadu, Avinashi respectively to be born, to live, to think, to die, to visit, to tell, to settle, to hear. You can see about them here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X