• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் பெயர்ச்சி : தனுசுவில் குரு உடன் கூட்டணி சேர்ந்த செவ்வாயால் பலன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் பகவான் பூமி காரகன், வலிமையான கிரகம், செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு வீடு மற்றும் வாகன யோகம் அமையும். இதுநாள் வரை விருச்சிகம் ராசியில் சஞ்சரித்த செவ்வாய் இனி தனுசு ராசியில் குரு கேது உடன் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவானின் பார்வை மீனம், மிதுனம், கடகம் ராசிகளின் மீது விழுகிறது. செவ்வாய் பகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாய் ரத்தத்தின் ரத்தமே என்று அழைக்கும் அளவிற்கு பாசமானவர். செவ்வாய் சகோதர காரகன். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றி, செவ்வாயின் நிலைகொண்டே கணிக்கப்படுகிறது. பெண்களின் திருமணத்திற்கும் பூப்பெய்துவதற்கும் செவ்வாயின் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய் போர்க் குணம் கொண்ட ஒரு கிரகம். ரத்தக்காரகன் வீரமான தளபதி செவ்வாய். ஜாதகத்தில் பலம் பெற்ற செவ்வாய், ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தையும், வலுவான உடலையும், உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் தருவார். விளையாட்டு, மருத்துவம் போன்ற துறைகளில் ஒருவருக்கு ஈடுபாடு வரக் காரணம் செவ்வாய்தான்.

ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். தாம்பயத் உறவில் பலத்தையும், நெருக்கத்தையும் வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். சுக்கிரன் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். இவர் ஒரு வைத்தியரும் கூட நோய்களை குணப்படுத்துவதில் வல்லவர். இப்போது செவ்வாய் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு அதிபதி. இதுநாள் வரை எட்டாம் வீட்டில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் குரு கேது உடன் செவ்வாய் சஞ்சரிக்கிறார். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ளுங்கள் பாதிப்புகள் குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. நிநி நிலைமை நிலையாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள். செவ்வாயின் பார்வை விரைய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுகிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

செவ்வாய் பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 8 வது வீட்டில் அமர்ந்துள்ளார். ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக கவனம் தேவை. மன அழுத்தம் கூடும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாகப் போங்க. விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது சிறு சிறு விபத்துகள் ஏற்படும் என்பதால் கவனமாகப் போங்க. அவ்வப்போது ரத்ததானம் செய்யுங்க. செவ்வாயின் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாயின் பார்வை விழுவதால் தைரியம் கூடும். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையான உழைப்பிற்கு ஏற்ப எதிர்பாராத லாபம் கிடைக்கும். காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

மிதுனம்

மிதுனம்

செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். உஷ்ண கிரகம் செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் நேரம் சரியில்லை வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. உங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

ஆறாம் வீடு எதிரி ஸ்தானம், அந்த வீட்டில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. மிதுனம் புதன் வீடு உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் காதலில் வெல்வீர்கள். செவ்வாய் பகவானால் காதலில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான பெயர்ச்சி போட்டி தேர்வுகளில் வெல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவீர்கள். ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு ஐந்தாவது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் கர்ப்பிணிகள் கவனமாக இருங்க. குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். குறுகிய கால முதலீடுகள் வேண்டும். நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க. சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். பணம் வரவு அதிகரிக்கும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். வெள்ளிகிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும். செவ்வாய்கிழமை முருகனை நினைத்து கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும்.

துலாம்

துலாம்

முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீட்டு மனை வாங்குவீர்கள். மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். பத்தாம் வீட்டின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலை கிடைக்கும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் மனைவி நலனில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறிய பயணங்கள் மூலம் உங்களுக்கு நன்மையை தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, இது ராள் வரை உங்கள் ராசியில் இருந்த ராசி அதிபதி செவ்வாய் இனி உங்க ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கண்களில் பாதிப்பு வரலாம் கவனமாக இருக்கவும். சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், சிலர் புதிய வீடு ஏன் ஊர் கூட மாற வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படும். உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நன்மைகள் நல்லதே நடக்கும். ம்.

தனுசு

தனுசு

விரைய ஸ்தான அதிபதி செவ்வாய் உங்கள் ராசிக்குள் குடியேறியுள்ளார். ஏற்கனவே குரு, கேது உங்க ராசியில் சஞ்சரிக்கின்றனர். உங்களின் அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும் கூடவே கோபமும் வரும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதே போல வேலையிலும் பளு கூடும். அதைப்பற்றி கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.உங்கள் கருத்துக்கு மதிப்பு மரியாதை கூடும். அப்பா உடனான உறவில் பாசம் கூடும். பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்

மகரம்

செவ்வாய் உங்கள் ராசியில் 12 வது வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் மூத்த சகோதரர்களால் ஆதாயமும் லாபமும் உண்டு. வருமானம் அதிகரிக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். எதையும் சட்டப்பூர்மாக செய்யுங்கள். மருத்துவ செலவுகள் வரும். வெளிநாடு தொடர்புகள் மூலம் வருமானம் வரும். நீங்களும் வெளிநாடு செல்வதற்கான யோகம் கூடி வருது. இந்த கால கட்டத்தில் சின்னச் சின்ன பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். வீண் செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

கும்பம்

கும்பம்

லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை. செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் திடீர் யோகம் அமையும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். சுக்கிரன் உங்க ராசியில் உச்சம் பெற்றிருக்கிறார். செவ்வாயின் பார்வை உங்க ராசியின் மீதும் சுக்கிரன் மீதும் விழுவதால் தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். பழனி மலை மேல் இருக்கும் முருகனை பயபக்தியோடு வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.

English summary
Mars is a powerful planet.Before the big solar eclipse, which will take place on February 8, Mars transited to Dhanusu which is again, a powerful planet. The influx of the two, will stay the same till February 8, 2020 to 22nd March 2020 in Sagittarius Sign. Mars denotes strong powerful desires and emotions planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X