For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயற்கைச் சுற்றாடலின் சமநிலையைப் பாதுகாப்போம்!

By Staff
Google Oneindia Tamil News

World Earth Day
-புன்னியாமீன் (இலங்கை)

இன்று ஏப்ரல் 22, சர்வதேச புவிதினம்.

மனிதர்களில் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் ஜனத்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையை புவி இழந்துள்ளது. போர்ச் சூழலினாலும் அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

சர்வதேச புவிதினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன் கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியவசியமானவை.

வானம் பூமி வளிமண்டலம் ஆதவனின் ஒளி சந்திரனின் குளிர்ச்சி, மலையின் சிருங்காரம், காலையின் கனிவு, மரம், செடி, கொடிகள், தரை வாழ், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், அத்தனையும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை வளமாக நடத்துவதற்கு அத்தனையும் தேவையானவை .இந்தச் சுற்றாடல் தொகுதி புவியின் சமநிலையைப்பேணி வருகின்றது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

பூமி- மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மண்டல மழைக்காடுகளைக் குறிப்பிடலாம் இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது: ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள்- இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, பிரேசில், கொலம்பியா, பொலிவியா, பேரு, வெனிசுலா, மலேசியா... என்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே மழைக்காடுகள் காணக் கிடைக்கின்றன.

இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில் (இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர - விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில்தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு இந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மலேரியா நோய்க்குரிய ஒரேயொரு தீர்வாக இருந்த 'குயினைன்' பெறப்பட்ட தென் அமெரிக்காவின் சிங்கோனா மரம் தொடங்கி- குருதிப்புற்று நோய்க்கு மருந்தாகும் மடகாஸ்கரின் பட்டிப்பூ ஊடாக- இன்னமும் மனிதனை வதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்பட வேண்டிய ஏராளமான தாவரங்கள் வரையில் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான 'மருத்துவ அலமாரியாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கியிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட 3000க்கும் அதிகமான மூலிகைகளில் 70 சதவீதம் வரை இந்தக் காடுகளிலேயே காணப்படுகின்றன.

உலகம் பூராவும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான இரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் 'சாவி' காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாய்லாந்தின் லுஆ (Lua) பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப் பயிர் வகைகளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகிறார்கள் என்றால் உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்களைக் கற்பனை செய்ய இயலாது.

ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக் காடுகள் நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.

ஆனால், இவ்வளவு இருந்தும் பொன் முட்டையிடும் வாத்தாக மழைக்காடுகள் படிப்படியாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் மனிதன் படிப்படியாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றான்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனிதனின் கொடுரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும்; இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றனவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச் சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.

'பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னால் எப்படிச் சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக்காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்றுவதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' சிந்திக்க வேண்டிய வினா தான். இதே வினாவைத்தான் வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிரேசிலில் 1992ல் நடந்த பூமி உச்சி மாநாட்டிலிருந்து இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமிலப் படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புவி உஸ்ணமடைவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும்.திட்டமிடாத காடழிப்பு மண் அகழ்வு விவசாயத்தில் அளவுக்கதிகமாக நச்சுத்திரவத்தை பயன்படுத்தல் இரசாயனப் பசளைகளைப்பயன் படுத்தல் தொழிற்சாலைக்கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆகிய செயற்பாடுகளால் சூழல் மாசடைகிறது.

மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம்.

இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.அவ்வாறு இல்லாமல் எத்தகைய கோசங்கள் இடுவதாலும், எத்தகைய பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X