• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனோஜ்....... நீ என்ன சொல்றே? ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (9)

|

- ராஜேஷ்குமார்

செல்லின் மறுமுனையில் இருந்த மனோஜ் அபுபக்கரிடம் கேட்டான்.

" ஸார்.....உங்களுக்கு எதிரில் யாராவது உட்கார்ந்துட்டு இருக்காங்களா ?"

" இல்லை.... ரூம்ல நான் மட்டும்தான். டி.வியில் நியூஸ் பார்த்துட்டிருக்கேன். என்ன விஷயம் மனோஜ் ?"

" ஸார்..... ! தமிழ்நாட்ல போலீஸ் டிபார்ட்மெண்ட்ன்னு ஒண்ணு இருக்கு. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா ? "

" என்ன மனோஜ்...... எதுக்காக இந்த கேள்வி ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 9

" பின்னே என்ன ஸார்..... எந்த விஷயம் வெளியே தெரிய வாய்ப்பில்லைன்னு நினைச்சோமோ அந்த விஷயம் வெளியே வந்து ஆக்டோபஸ் மாதிரி எல்லாம் பக்கமும் எட்டிப் பார்த்துட்டிருக்கு" மனோஜ் சொன்னதைக் கேட்டு அபுபக்கர் திடுக்கிட்டார்.

" மனோஜ்....... நீ என்ன சொல்றே ? "

" அந்த "விஷம்" சம்பந்தப்பட்ட விஷயம் வெளியே எப்படியோ வந்துடுச்சு ஸார் "

" எந்த விஷம் ? "

மனோஜ் செல்போனின் மறுமுனையில் லேசாய் எரிச்சல்பட்டான்.

" என்ன ஸார்...... ! நீங்க இப்ப நிதானத்துலதான் இருக்கீங்களா ..... இல்ல கையில் ஷீவாஸ் ரீகல் இருக்கா ? "

" அதெல்லாம் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல ஈஸ்வரோட ஃபார்ம்ஹவுஸ்லதான். இப்ப நான் தெளிவாத்தான் இருக்கேன். விஷயம் என்னான்னு சொல்லு மனோஜ் "

" ஸார்..... உங்க பார்ட்னர் ஈஸ்வர் கடந்த நாலு வருஷங்களில் நடத்தி வெச்ச இலவச திருமண ஜோடிகளில் அஞ்சு ஜோடி தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போனது இப்போ ஒரு பெரிய பிரச்சினையா மாறும் போலிருக்கு "

அபுபக்கரின் உடம்பில் பதட்டம் பரவியது.

" எப்படி சொல்றே ? "

" இன்னிக்கு சாயந்தரம் ஆறுமணிக்கு அந்த வளர்மதி என்னைப் பார்க்க என்னோட ஃபாரன்ஸிக் ஆபீஸீக்கே வந்துட்டா. வந்தவ கேஷீவலா பேச்சை ஆரம்பிச்சு ரிசின் விஷம் பற்றிய விபரங்களை கேட்டா. நான் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்திக்காமே அவ கேட்ட தகவல்களுக்கெல்லாம் பதில் சொன்னேன் "

"எதுக்காக இந்த விசாரணைன்னு நீ அவகிட்டே கேட்கலையா ? "

" கேட்காமே இருப்பேனா ..... கேட்டேன் "

" என்ன சொன்னா ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 9

" தற்கொலை பண்ணிட்டு செத்துப்போன ஐந்து ஜோடிகளில் ஒரு பொண்ணு பேர் பூங்கோதை. அந்தப் பொண்ணு அரவணைப்பு என்கிற அநாதை காப்பகத்தில் வளர்ந்தவ... அதனால் இந்த விஷயத்துல வளர்மதி அக்கறை காட்டி ஒரு விசாரணையை ஆரம்பிச்சுட்டா. அஞ்சு ஜோடிகளும் ஒரே மாதிரியான விஷத்தை அதாவது ரிசின் சாப்பிட்டு தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போயிருக்காங்க என்கிற உண்மையையும் கண்டுபிடிச்சுட்டா. ரிசின் விஷத்தைப் பத்தின அதிகப்படியான விபரங்களை கலெக்ட் பண்ண நேரா என்கிட்டே வந்துட்டா. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் டேஸ்ல சோசியல் ஆக்டிவிடீஸ்ல ஈடுபாட்டோடு இருந்ததுதான் காரணம் "

" அந்த ஒரு பாயிண்ட்டை வெச்சுகிட்டு உன்கிட்டே வந்திருக்கா ? "

" ஆமா "

" அவளுக்கு உம்பேர்ல எந்த சந்தேகமும் வரலையே ? "

" அவளுக்கு என்மேல சந்தேகம் வர எந்த ஒரு முகாந்திரமும் இல்லை... இந்தக் கேஸை கண்டுபிடிக்கிற விஷயத்தில் என்னையும் அவ ஒரு பார்டனராய் சேர்ந்துகிட்டா ..... இனிமே அவ அடிக்கடி என்னைப் பார்க்க வருவா ? "

" என்னோட பேரையோ ஈஸ்வரோட பேரையோ உன்கிட்ட சொன்னாளா ? "

" பேரைச் சொல்லலை ஸார். பர்சன்ஸ் இப்போதைக்கு யார்ன்னு சொல்லமுடியாதுன்னு சொல்லிட்டா "

" இந்த விஷயத்தை ஈஸ்வருக்கு போன் பண்ணிச் சொன்னியா ? "

" இல்லை ஸார்..... உங்க்கிட்ட பேசிட்டு அப்புறமா ஈஸ்வர் ஸார்கிட்டே பேசலாம்ன்னு "

" சரி..... ஈஸ்வர்கிட்டே நான் பேசிக்கிறேன். இந்த விஷயத்துல வளர்மதியை நாம எப்படி டீல் பண்ணப் போறோம் மனோஜ் ? "

" ஸார்..... தெரிஞ்சோ தெரியாமலோ வளர்மதி என்னைப் பார்க்க வந்ததின் மூலமாய் நம்ம வளையத்துக்குள்ளே மாட்டிகிட்டா. இனிமேல் அவ என்ன செஞ்சாலும் எனக்குத் தெரிஞ்சுடும். அவளோட நடவடிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி நாம செயல்பட்டாலே போதும். நாம இந்த விஷயத்துல ஒரு நிதானமான போக்கைத்தான் கடைபிடிக்கணும். ஏன்னா வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மர். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற ஹை அஃபிஷியல்ஸ் யாரோ அவளுக்கு கொடுத்திருக்கிற ஒரு அசைன்மெண்டாகக்கூட இது இருக்கலாம் "

" டில்லி சி.பி.ஜ.யிலிருந்து சில்பா என்கிற பேர்ல ஒரு ஜ.பி.எஸ் ஆபீஸர் வேற வந்து தமிழ்நாட்ல ஏதோ ஊர்ல ரகசியமான முறையில் தங்கி தமிழ்நாட்டு போலீஸாலே கண்டுபிடிக்க முடியாத ஏழு கேஸ்களை மறுபடியும் ஸ்க்ரூட்னைஸ் பண்ணி குற்றவாளிகளை கண்டுபிடிக்கப் போறதா உளவுத்துறையில் இருக்கிற நமக்கு வேண்டிய தினகர் ஒரு அதிகாரப்பூர்வமான தகவலைக் கொடுத்திருக்கார். அந்த ஏழு கேஸ்ல நம்ம கேஸூம் ஒண்ணுன்னு நினைக்கும்போது அடிவயித்தைக் கலக்குது "

" ஸார்...... நமக்கு இப்படியொரு சிக்கல் வர என்ன காரணம் தெரியுமா ? "

" என்ன ? "

" நான் ஒரு விஷயம் சொல்லியும் நீங்க ரெண்டுபேரும் பிடிவாதமாய் அதை கேட்காமே போனதோட விளைவுகள் இது "

" நீ என்ன சொல்லி நாங்க கேட்காமே போனோம் ? "

" அந்த அஞ்சு ஜோடியையும் தீர்த்துக்கட்ட நீங்க ரெண்டுபேரும் முடிவு பண்ணி என்கிட்ட யோசனை கேட்டப்ப போலீஸூக்கு அந்தத் தற்கொலைகளில் வராமே இருக்கணும்ன்னா அவங்க தற்கொலை செய்துக் கொள்கிற முறைகள் வெவ்வேறு விதமாய் இருக்கணும்ன்னு நான் சொன்னேன். ஆனா நீங்க ரெண்டுபேரும் கேட்கலை. விஷத்தை குடிக்க வெச்சே தற்கொலை பண்ணிக்க வைக்கலாம்ன்னு சொன்னீங்க. நானும் நீங்க தர்ற பணத்துக்கு ஆசைப்பட்டு வேற வழியில்லாமே தலையாட்டி வெச்சேன். ரிசின் என்கிற பாய்ஸனையும் உங்களுக்கு கொடுத்தேன். பொதுவாய் ரிசின் சாப்பிட்டு செத்தவங்களோட உடம்பை போஸ்ட்மார்ட்டம் பண்ணினால் ஏதோ ஒரு விஷம் சாப்பிட்டு இருக்காங்கன்னு தெரிய வரும் தவிர சாப்பிட்ட விஷம் ரிசின்தான் என்கிற உண்மை வெளியே வராது. ஆனா போலீஸூக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டு இறந்தவங்களோட குடல் பாகத்தை மும்பையில் இருக்கிற ரசாயன கூடத்துக்கு அனுப்பி அது எது மாதிரியான விஷங்கிறதை கண்டுபிடிச்சுட்டாங்க "

மனோஜ் பேசப் பேச அபுபக்கர் இடைமறித்து கேட்டார்.

" இனி போலீஸோட நடவடிக்கை எது மாதிரியாய் இருக்கும்ன்னு நினைக்கிறே மனோஜ் ? "

"போலீஸூக்கு இந்நேரம் அது தற்கொலைகள் இல்லை கொலைகள்தான் என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கும். அதை தொடர்ந்து இறந்துபோன அந்த ஐந்து ஜோடிக்கும் ரிசின் விஷத்தைக் கொடுத்தது யார் என்கிற கோணத்தில் ஒரு மறைமுகமான விசாரணையும் ஆரம்பிச்சிருப்பாங்க..... அதனோட அடையாளம்தான் வளர்மதி. ஈஸ்வர் ஸாரை தேடிவந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும், இன்னிக்கு என்னைத் தேடிவந்து ரிசின் விஷம் பற்றிய விபரங்களைக் கேட்டதும் "

" மனோஜ் ! நீ பேசப் பேச பயம் வருது. இனி நம்ம நடவடிக்கைகள் எப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறே ? "

" பயப்படாதீங்க ஸார்..... போலீஸோட இன்வெஸ்டிகேஷன் இன்னமும் எல்.கே.ஜி. லெவல்லதான் இருக்கு. எல்லாத்துக்கும் மேலாய் வளர்மதி என்னோடு தொடர்பில் இருக்கிறதால போலீஸோட நடவடிக்கைகள் நமக்கு டி.வி.பார்க்கிற மாதிரி தெரியும். இருந்தாலும் இனி வரப் போகிற நாட்களில் நாம கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கணும்.... இப்ப போன்ல உங்க்கிட்டே பேசினதையெல்லாம் ஈஸ்வர் ஸார்கிட்டே சொல்லிடுங்க நான் மறுபடியும் நாளைக்குக் காலையில் போன் பண்றேன் "

மனோஜ் மறுமுனையில் செல்போனை அணைத்துவிட அபுபக்கர் வியர்வை பிசுபிசுக்கும் முகத்தோடு தளர்ந்து போன உடம்போடு சோபாவுக்கு சாயந்தார்.

--------

போலீஸ் கமிஷனர் அலுவலகம்

காலை பதினோரு மணி சி.பி.ஜ.யை சேர்ந்த ஸ்க்ரூட்னைஸின் ஆபீஸர் சில்பா போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு முன்பாய் ஒரு ஃபைலை பிரித்து வைத்துக் கொண்டு மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.

" மேடம், ஹாஸ்பிடலில் இருந்து என்னிக்கு டிஸ்சார்ஜ் ஆனீங்க... நவ் ஹெள ஈஸ் யுவர் ஹெல்த் ? "

திரிபுரசுந்தரி மென்மையாய் புன்முறுவல் பூத்தாள்.

" நவ் அயாம் ஆல்ரைட் மிஸ் சில்பா. ஐ வாஸ் சப்பரிங் ஃபரம் ஏ சிவியர் வைரல் ஃபீவர். நேற்றைக்கு ஈவினிங்கே டிஸ்சார்ஜ் ஆயிட்டேன். நோ இஷ்யூ அபெளட் மை ஹெல்த் .....நாம தாராளமாய் பேசலாம் "

" வெரி நைஸ் டூ ஹியர் திஸ்..... பை த பை டெல்லி சி.பி.ஜ. ஆபீஸிலிருந்து உங்களோட தனிப்பட்ட பார்வைக்கு வந்த இந்த ஃபைலோட காப்பியில் இருக்கிற எல்லா விபரங்களையும் படிச்சுப் பார்த்தீங்களா ? "

" ம்..... படிச்சுட்டேன் "

" அது சம்பந்தமாய் ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்களா ? "

" அந்த ஃபைல் வர்றதுக்கு முன்னாடியே எனக்குக் கிடைச்ச ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்படி ஒரு போலீஸ் இன்ஃபார்மரை வெச்சு ஈஸ்வரை உரசிப் பார்த்துட்டேன் "

" யார் அந்த போலீஸ் இன்ஃபார்மர் ? "

" எனக்கு தெரிஞ்ச பெண். பேரு வளர்மதி. ஹவுஸ் ஒய்ஃப். சோசியல் சர்வீஸ் ஆக்டிவிடீஸ்ல ரொம்பம் ஆர்வம். போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போகவே போலீஸ் இன்ஃபார்மராய் ஒர்க் பண்ணிட்டிருக்கா, அப்படி வளர்மதி ஒர்க் பண்றது அவ வீட்ல ஹஸ்பெண்ட்டுக்கோ, மத்தவங்களுக்கோ தெரியாது "

" அது ரொம்பவும் ரிஸ்க் இல்லையா ? "

சில்பா திகைப்போடு கேட்க, திரிபுரசுந்தரி புன்முறுவல் பூத்தாள்.

" நானும் இதைத்தான் வளர்மதிகிட்டே சொன்னேன். அந்தப் பெண் கேட்கிற நிலைமையில் இல்லை "

" சரி ஈஸ்வரைப் போய்ப் பார்த்த வளர்மதிக்கு ஏதாவது உபயோகமான தகவல் கிடைச்சுதா ? "

" ஈஸ்வரோட பிறந்தநாள் அன்னிக்கு அவர்க்கு வாழ்த்து சொல்கிற மாதிரி போய் ஈஸ்வர் நடத்தி வெச்ச இலவசத் திருமணங்களைப் பாராட்டியிருக்கா. இது முதல் சந்திப்பு. வளர்மதியால எதையும் தீர்மானிக்க முடியலை. ஆனா வளர்மதி எப்படியம் உண்மைகளைக் கண்டுபிடிச்சுருவா என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு "

" அந்தப் பெண்ணை நான் பார்க்கணுமே ? "

" இன்னிக்கு ஈவினிங் எப்படியும் வளர்மதி என்னைப் பார்க்க வருவா... நான் வேணும்ன்னா அவளுக்கு தகவல் கொடுத்து உங்களை வந்து பார்க்கச் சொல்லட்டுமா ? "

" ஷ்யூர்.... நான் அந்த பொண்ணுகிட்டே பேசணும்... சில விஷயங்களை அவகிட்டே நான் ஷேர் பண்ணிக்கணும்.... அதுல ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா மேடம் ? "

" என்ன ? "

" ஈஸ்வர் லட்சக்கணக்கான ரூபாயை செலவு பண்ணி இலவசத் திருமணங்களை நடத்தி வைக்கிறதுக்குப் பின்னாடி ஒரு பெரிய விபரீதம் உறைந்து போயிருக்கு மேடம் "

" எ....எ....என்ன அது ? "

" அஞ்சு ஜோடிகள் இறந்து போயிருக்காங்க. அதாவது மொத்தம் பத்து பேர். இந்த பத்து பேர்ல ஆண்களோட மரணத்துல எந்த ஒற்றுமையும் இல்லை. ஆனா பெண்களோட மரணத்துல அந்த விபரீதமான ஒற்றுமை இருந்தது "

" எ....எ....என்ன ஒற்றுமை ? "

"அந்த அஞ்சு பெண்ணுகளுமே மூணு மாச கர்ப்பமாய் இருந்திருக்காங்க!"

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7, பகுதி 8]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X