For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெக்டேருக்கு ரூ.10,000 இழப்பீடு தர ஜெ கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: வெள்ளத்தால் பயிர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 10,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த இரண்டு வாரங் களாகப் பெய்து வரும் கன மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27க்கும் மேற்பட்ட விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகி உள்ளதாக தெரிய வருகிறது. வீடுகள் இடிந்து விட்டதால் இருப்பிடமின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெருந்துயருக்கு ஆளாகி உள்ளார்கள்.

நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. பலன் தரும் நேரத்தில் நெல் மட்டும் அல்லாது ஏனைய பயிர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாங்க முடியாத இழப்பால் விவசாயப் பெருமக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விரக்தியின் விளிம்புக்குச் சென்று விட்டதால் ஒரு விவசாயி தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். இன்னும் பல விவசாயிகளும் இதே போன்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் கடலோர மாவட்டங்களில் உப்பளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலையின்றி, அன்றாட உணவுக்கும் வழியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத காரணத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரங்களிலும், கிராமங்களிலும் சாலைகள் சல்லடைகளாகி பல இடங்களிலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்ற ஆண்டின் இறுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு பத்து நாட்களாக வெறும் பார்வையாளர்களாக இருந்து விட்டு, இப்போது தான் ஒரு சில பகுதிகளைப் பார்க்க புறப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் மழையாலும், வெள்ளத்தாலும் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தற்போது மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடி மேல் அடி அவர்களுக்கு விழுந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் மாநிலத்தில் ஆட்சியை நடத்திக் கொண்டு, மத்தியில் கூட்டணி ஆட்சியிலும் பங்கு வகித்து வரும் கருணாநிதி, விவசாயிகளை ஏமாற்றும் வகையில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணத் தொகையாக அறிவித்திருக்கிறார்.

எனது ஆட்சி காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி வழிமுறைகளில் குறிப்பிட்ட தொகையை 3 மடங்காக உயர்த்தி, நெற்பயிர், கரும்பு, எண்ணை வித்துப் பயிர்கள், பருத்தி பயறு வகைகள், சிறு தானியப் பயிர்கள், வாழை மற்றும் இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 3,000 வீதம் நிவாரண உதவிகளை வழங்கினேன்.

திமுக அரசு அன்றைக்கும் விவசாயிகளைக் கவனிக்கவில்லை. இன்றைக்கும் விவசாயிகளைக் கவனிக்கவில்லை. ஏதோ கண்துடைப்பாக, ஹெக்டேருக்கு ரூ. 4,000 நிவாரணத் தொகையை அறி வித்திருக்கிறார் கருணாநிதி.

இந்தத் தொகை மிகவும் குறைந்த தொகையாகும். குறைந்தது ரூ. 10 ஆயிரமாவது நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்பது விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மழையாலும், வெள்ளத்தாலும் பொதுமக்கள் இன்னலுற்று வரும் இந்த நிலையில் முன்னேற்பாடாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாகச் செயல்படும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாதிப்புகளுக்கு ஏற்றபடி விவசாயப் பெருமக்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும், மழையால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு உடனடியாக காலம் தாழ்த்தாது, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

முற்றிலும் பயிர்கள் அழிந்து விட்ட நிலையில் விவசாயப் பெருமக்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் அல்லாமல், அவர்கள் தொடர்ந்து பயிர் செய்ய கூட்டுறவு விவசாய வங்கிகள் மூலமாகக் கடனும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X