For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் என்ன? சரத் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தலைமைச் செயலாளரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியம் என்ன என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஒரு பட்டியலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டது.

பயங்கரவாதிகளையும், தேசவிரோத சக்திகளையும் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச உரிமையை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி தனிமனித உரிமையை பறிப்பதாக ஆவேசக் குரல்கள் அனைத்துத் தரப்பிலும் எழுந்தன. ஆனால் தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் இந்த செய்தியை ஆதாரமற்றது, உள்நோக்கமுடையது, உண்மையற்றது என்று மறுத்தனர்.

ஆனால் இதனை நிரூபிக்கும் விதத்திலும், சவாலாகவும் அதே ஆங்கிலப் பத்திரிகை இன்று தமிழக அரசின்தலைமைச் செயலாளரும், உளவுத்துறையின் உயர்பதவியிலிருக்கும் ஒரு அதிகாரியும் தொலைபேசியில் உரையாடுகிற ஒலிப்பதிவை வெளியிட்டு, தமிழக அரசின் ஒட்டுக்கேட்பு விவகாரம் உண்மையே என்று வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கும் செயல்:

பிறரின் படுக்கையறையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எட்டிப் பார்ப்பதற்கு ஈடான நாகரீகமற்ற இச்செயலை தமிழக முதலமைச்சர் வன்மையாக கண்டிக்காமல், ஓய்வுபெற்ற ஒரு நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை செய்வதாக அறிவித்து நடைபெற்ற இந்த மனித உரிமை மீறல் பிரச்சனைக்கு ஒரு இடைவேளையை ஏற்படுத்தியிருப்பதோடு, ஒருவேளை ஒட்டுக் கேட்டதாய் சொல்லப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் மிக மோசமானவை அல்ல என்றும் அதில் தேச விரோத, சட்ட விரோத விஷயங்கள் ஒன்றும் கிடையாது எனவும், ஆகவே ஒட்டுக்கேட்பது ஒன்றும் தவறில்லை என்கிற தொணியில் முதலமைச்சர் உரைத்திருக்கிறார்.

மேலும் நீதி விசாரணையின் போக்கும், ஒட்டுக்கேட்பு விஷயம் எப்படி பத்திரிகைகளின் கைகளில் சிக்கியது என்பதை கண்டறியும் திசையில்தான் செல்லும் என்றும் தெளிவாக்கி இருக்கிறார். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய விளக்கமாக உள்ளது.

நல்லாட்சியிலும், ஜனநாயகத்திலும் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கும் பலருக்கும் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரமும், அதற்கு ஒத்தணம் கொடுக்கிற முதலமைச்சரின் செயலும் பலத்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மீதான வழக்கை, முனைந்து நடத்த தலைமைச் செயலாளர் கொண்டிருக்கும் சிரத்தையை பார்க்கும் போது அவரை எந்த உள்நோக்கத்தோடு தமிழக அரசு பயன்படுத்துகிறது என்பதும் வெளியிடப்பட்டிருக்கும் ஒலிநாடாக்கள் வாயிலாக தெளிவாகியிருக்கின்றன.

ஒரு வேளை முதலமைச்சர் சொல்வது போல தலைமைச் செயலாளரின் செயல் ஒன்றும் தேச விரோதமல்ல என்று எடுத்துக் கொண்டால் அவர் பேசுவதை அரசே ஒட்டுக்கேட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஒரு வேளை உத்தரவிட்டவர்களுக்கே தலைமைச் செயலாளரின் விசுவாசத்தின் மீது சந்தேகம் வந்துவிட்டதா? என பல கேள்விகள் பதிலின்றி தேங்கி நிற்கின்றன.

மழலைத்தனமாக பதிலளிக்கலாமா?:

தனி மனிதர்களின் சுதந்திரத்திலும், அந்தரங்க வாழ்க்கையிலும் எந்த முகாந்திரமும் இன்றி தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது ஒரு நாகரீகமான அரசாங்கம் செய்கிற செயலா? இதுதான் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை தமிழக அரசு ஆக்கப்பூர்வத்திற்கு பயன்படுத்துகிற காரியமா? தனது பேரக் குழந்தைக் கூட டி.வியை ஆன் செய்து விடுகிறான் என்று ஒரு மழுப்பலான பதிலை மழலைத்தனமாக ஒரு முதிர்ந்த தலைவர் சொல்வது நியாயமா?

இந்தநிலை நீடித்தால் நாம் பேசவிரும்பும் அந்தரங்க விஷயங்களை முக்கியத் தகவல்களை தொலைபேசியில் பேசுவதற்குப் பதிலாக ஏதோ ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று நேரடியாகத்தான் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற கற்காலத்தை நோக்கி தமிழக மக்கள் சென்றுவிடத்தான் வேண்டுமா? என்ற மனக்குமுறல்கள் மக்களிடம் தென்படத் துவங்கி விட்டன.

எனவே தனிமனித உரிமைகளில் அடிப்படைக் காரணங்கள் ஏதுமில்லாமல் அத்துமீறுவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுக்கேட்பு விவகாரங்களுக்கு காரணமான அரசியல், மற்றும் அதிகார காரணிகளை சட்டத்தின் முன் நிறுத்த முன்வர வேண்டும்.

நாகரீகத்தின் ஆணிவேரையே அசைக்கின்ற இந்த தனிமனித உரிமைப் பறிப்பை உடனடியாக கைவிட வேண்டும். அதனை விட்டுவிட்டு நீதி விசாரணை என்னும் போர்வைக்குள் தங்களை ஒளித்துக் கொண்டு பிரச்சனையின் உக்கரத்தை ஒத்திப்போடுவதன் மூலம் மழுங்கடித்து விடலாம் என ஆள்பவர்கள் நினைத்தால் அதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X