ஓகேனக்கல் திட்டம்- பெயரை மாற்ற இல.கணேசன் யோசனை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பிரச்சனை, ஓகேனக்கல் யாருக்கு சொந்தம், கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய மூன்று விஷயங்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாக தோன்றினாலும் இவற்றுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை.
காவிரி பிரச்சனை தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சனை. கர்நாடகத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் இறுதி தீர்ப்பை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது. அதன் தீர்ப்பு வந்த பிறகு தான், கர்நாடக அரசு தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது தெரியும்.
இது ஒருபுறம் இருக்க, எத்தனை அளவு தண்ணீரை திறந்து விட்டாலும் ஜீரோ பாயிண்ட் எனப்படும் பகுதி வரை வரும் தண்ணீர் மட்டுமே கர்நாடகத்திற்கு சொந்தம். அதற்கு கீழ் வரும் ஒவ்வொரு துளியும் தமிழகத்திற்கே சொந்தம்.
பில்லிகுண்டுவில் உள்ள ஜீரோ பாயிண்ட்டிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள காவிரியிலிருந்து நாம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதை கர்நாடகம் ஆட்சேபிக்க முடியாது. ஆனாலும், நாம் தண்ணீர் எடுக்கும் பகுதியில் காவிரி ஒருகரை தமிழகத்தின் பக்கமும், மறுகரை கர்நாடகத்திலும் உள்ளது.
இக்கரை நமக்கு சொந்தம். அக்கரை பற்றி நமக்கு அக்கறை இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் கர்நாடகத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு ஒரு குவளை தண்ணீராவது பாதிப்பு ஏற்படும் என கர்நாடக அரசு நிரூபிக்க முடியுமா?
ஆனாலும், சிலர் ஓகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்று கூறி சில தலைவர்களையும் நம்ப வைத்துள்ளனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மாநில எல்லைகள் பற்றி விண்வெளி கலம் அனுப்பும் புகைப்படங்களில் ஒகேனக்கல் பாறைப்பகுதி கர்நாடக எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெளிவாக தெரிகிறது.
எனவே, இதற்காக மீண்டும் ஒரு முறை நில அளவை மேற்கொள்வது தேவையில்லை.
ஒருக்கால் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயர் குழப்பத்தை உண்டாக்கி இருந்தால் அதை, தர்மபுரி குடிநீர் திட்டம் என்றோ, பெண்ணாகரம் திட்டம் என்றோ அல்லது கூட்டப்பாடி திட்டம் என்றோ மாற்றி அமைக்கலாம் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.