ஒகேனக்கல்: நான் தவறு செய்துவிட்டேன்-ரஜினி

Subscribe to Oneindia Tamil
Rajini
ஹைதாராபாத்: ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.

குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.

நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய மாட்டேன்.

இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.

சிக்கல் தீருமா?:

இருப்பினும் ரஜினியின் மன்னிப்பை ஏற்க கன்னட அமைப்புகள் மறுத்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறுகையில், ரஜினிகாந்த் கர்நாடகத்திற்கு வர வேண்டும். 5 கோடி கன்னட மக்களிடமும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரது படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.

எனவே திட்டமிட்டபடி குசேலன் நாளை கர்நாடகத்தில் திரைக்கு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

பெங்களூரில் 14 தியேட்டர்களில் குசேலன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடக வர்த்தக சபையின் தலைவர் நடிகை ஜெயமாலாவுக்கும் ரஜினி கடிதம் எழுதினார். அதில், கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் எதையும் கூறவில்லை. குசேலன் படம் ரிலீஸ் தடையால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று ரஜினி கூறியிருந்தார்.

அந்தக் கடிதத்தை ஜெயமாலா இன்று வெளியிட்டார். ரஜின புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் பேசவில்லை. அவருக்கு கர்நாடகாவும், தமிழகமும் ஒன்றுதான் என்று ஜெயமாலா கன்னட அமைப்புகளிடம் சமரசம் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற