For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராதிகாவுக்கு முக்கியப் பதவி - சரத்; ஏற்கிறேன் - ராதிகா

By Staff
Google Oneindia Tamil News

Sarathkumar with Radhika
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் ராதிகாவுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். கட்சியினரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு, முக்கியப் பொறுப்பு வழங்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சரத்குமாருக்கு தீர்மானங்கள் போட்டு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சரத்குமாரின் வீட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்தனர். ராதிகாவுக்குப் பதவி வழங்க வேண்டும், அவர் நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது ராதிகா வீட்டில் இருந்தார், சரத்குமார் வெளியில் போய் விட்டு திரும்பி வந்தார்.

தொண்டர்களை அமைதிப்படுத்தி அவர்களிடம் சரத்குமார் பேச முயன்றார். ஆனால் ராதிகாவை அழையுங்கள் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து ராதிகாவை வெளியில் அழைத்து தொண்டர்களிடம் பேசுமாறு கூறினார் சரத்குமார்.

ராதிகா பேசுகையில், என் கணவருடன் நான் பணியாற்றி கொண்டு தான் இருக்கிறேன். நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. ஜக்குபாய் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு நல்ல முடிவை அறிவிப்பேன் என்றார்.

பின்னர் சரத்குமார் கூறுகையில், நான் குடும்ப அரசியலை விரும்பாதவன். ராதிகா பரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு முன்பே அவர் அரசியலுக்கு வந்துவிட்டார்.

தமிழக அரசியல் மட்டுமின்றி உலக அரசியலையும் அறிந்தவர். அவர் என்னோடு இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இது குறித்து உயர்மட்டக்குழு கூடி நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை எடுக்கும். வரும் 30ந் தேதி நெல்லையில் நடைபெறும் கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

ராதிகா என்னுடன் இணைந்து பணியாற்றினால் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்றார்.

இதையடுத்து குறுக்கிட்டுப் பேசிய ராதிகா, உங்கள் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழக மக்களுக்காக நான் பணியாற்றுவேன் என்றார். இதன் மூலம் சரத்குமாருடன் இணைந்து ராதிகாவும் நேரடி அரசியலில் ஈடுபடப் போவது உறுதியாகி விட்டது.

ராதிகாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி கிடைக்கும் எனத் தெரிகிறது. சரத்குமாருடன் இணைந்து தமிழகம் முழுவதும் ராதிகாவும் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்த அனுபவம் கொண்டவர் ராதிகா. அப்போது பெரும் கூட்டம் கூடியதை நினைவு கூறும் சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்கள், ராதிகாவின் வருகை தங்களது கட்சிக்கு பெரும் பலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொண்டர்களை சமாதானப்படுத்திய பின்னர் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராதிகாவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தொண்டர்களிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

திமுக-அதிமுக-தேமுதிகவுடன் கூட்டணி இல்லை

திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டேன். மாற்றத்தை நோக்கி செல்ல இருக்கிறோம்.

ராதிகாவுக்கு முக்கிய பதிவு கொடுக்கப்படும். இன்று மாலை கட்சியின் உயர்மட்டக்குழு கூடி இது பற்றி முடிவெடுக்கும். இதில் ராதிகாவும் கலந்து கொள்கிறார்.

இன்னும் 2 மாதங்கள் பொருத்திருங்கள் பரபரப்பான திருப்பங்கள் வரவிற்கிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருந்தால் தற்போது மின்வெட்டு ஏற்பட்டிருக்காது.

கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது என்று பிரதமர் கூறியிருக்கிறது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை காப்பாற்றவும், அங்கு அமைதி ஏற்படவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராதிகாவுடன் 100 நாள் பிரசாரம்

டிசம்பர் 20 முதல் 100 நாட்களுக்கு தமிழக முழுவதும் சுற்றுப்பணம் செய்வதாக இருக்கிறேன். அப்போது மக்கள் குறைகளையும் கேட்க இருக்கிறேன். அப்போது என்னுடன் ராதிகாவும் வரயிருக்கிறார். இது தேர்தல் பிரச்சாரத்திற்கான துவக்கமாக இருக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X