For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்னியில் நேற்று 22 தமிழர்கள் பரிதாப சாவு

By Sridhar L
Google Oneindia Tamil News

killed Tamils in shelling
வன்னி: இலங்கையின் வன்னிப் பகுதியில் இரவு நேரத்தில் ராணுவம் நடத்திய தொடர் பீரங்கித் தாக்குதலில் 22 தமிழர்கள் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் இலங்கைப் படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கினர்.

இதில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில், 4 தமிழர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களினால் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகளோ, மருந்துகளோ இல்லை. தெருவோரங்களிலும், மரங்களுக்குக் கீழும்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது.

ஐ.நா. கடும் கோபம்

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் தேவையில்லாமல் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகி வருவதாக ஐ.நா. கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. கூறுகையில், தேவையில்லாமல் அப்பாவிகள் உயிரிழப்பது பெரும் வேதனையாக உள்ளது. இரு தரப்பும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அது கூறியது.

16 நோயாளிகள் குண்டு வீச்சில் பலி

இதற்கிடையே, புதுமாத்தளன் என்ற இடத்தில் சாலையோரம் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது இலங்கைப் படையினர் குண்டு வீசித் தாக்கியதில் 16 நோயாளிகள் உயிரிந்து விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரிவு தலைவர் பால் காஸ்டெல்லா கூறுகையில், நோயாளிகளுக்கு சரியான மருத்துவ வசதி இல்லை. மருத்துவமனைகளும் இல்லை. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.

240 நோயாளிகள் வெளியேற்றம்

இதற்கிடையே, சிகிச்சை பெற வழியில்லாமல் தவித்து வந்த 240 நோயாளிகளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு படகுகள் மூலம் வெளியேற்றியுள்ளது.

சிறு படகுகள் மூலம் நோயாளிகளை ஏற்றி, செஞ்சிலுவைச் சங்கத்தின் "ஓசின்" எனும் கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதாக செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசி விஜசிங்கே கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நோயாளிகளால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை. உட்கார வைத்தால் கீழே விழுந்து விடுகிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்றார்.

19 அப்பாவிகள் பரிதாப சாவு

இந்த நிலையில் உடையார்கட்டு பகுதியில் நடந்த சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக உயிரிழந்தனர்.

இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியுள்ளார். தமிழர்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், இவ்வாறு விடுதலைப் புலிகள் சுடுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு தாங்கள் காரணமல்ல என்று விடுதலைப் புலிகள் தரப்பு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X