For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு முழுக்குப் போட்டார் சோம்நாத்

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: தீவிர அரசியலுக்கு முழுக்குப் போட்டுள்ள லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, கம்யூனிசம் இடதுசாரிகளின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று விளாசியுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரே சபாநாயகர் என்ற பெயரை எடுத்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. லோக்சபாவின் கடைசி நாளில் தான் இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த அவர் அரசியலுக்கும் தற்போது முழுக்குப் போட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு பள்ளி தலைமை ஆசிரியரைப் போல், சபாநாயகர் பணியை சிறப்பாக செய்து இருக்கிறேன். நான் முன்பு சார்ந்த கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை அவர்கள்தான் (மார்க்சிஸ்ட்) கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இதன் மூலம் சபாநாயகராக இருக்கும் என்னை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஆனால், அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பாகவே நான் என் கடமையை சரியாக ஆற்றவேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன்.

இதற்கு முன்பு சபாநாயகராக பதவி வகித்தவர்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் தீவிர உறுப்பினராகவும், கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளையும் எடுக்கும் குழுவிலும் பணியாற்றினார்கள் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதன் மூலம் எனக்கு முன்பு சபாநாயகராக இருந்தவர்களுக்கு எதிராக நான் எந்த குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவரவர் கொண்டுள்ள நிலைப்பாடு வேறு என்பதை தெளிவு படுத்துகிறேன். தவிர, கம்யூனிசம் என்பது தனிநபர் சொத்து அல்ல.

ஊழல்தான் நாட்டில் மிகக் கொடூரமான குற்றம். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவே இதை ஆமோதித்து உள்ளது.

வாக்களிக்க லஞ்சம் வாங்கியது, ஆள்கடத்தல் விவகாரம் ஆகியவற்றில் தொடர்புடைய உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்ட எனது நடவடிக்கை அனைவராலும் பாராட்டப் பெற்றது.

தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் பிரதமர் ஆக முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று அத்வானி கூறியிருக்கும் கருத்து ஏற்புடையது அல்ல. ஏட்டளவில் அது நன்றாக தெரிந்தாலும், நடைமுறையில் அதனால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

பிரதமரின் பணி என்பது அவரது சொந்த திறமையின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, பிரதமர் பணி தொடர்பாக எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை.

பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகளை நாங்கள் பார்த்து விட்டோம். அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பது குறித்து நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். அதில் உறுதியாகவும் இருக்கிறேன்.

தேர்தலின்போது, வாக்களிக்கும் எனது ஜனநாயக கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். யாருக்கு ஓட்டுப்போட்டேன் என்பதை வாக்களித்த பிறகு தெரிவிப்பேன்.

நான் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தபோது பணம் கொண்டு வரப்பட்ட சம்பவம், பாராளுமன்றம் முழுமையான அளவில் செயல்படாதது ஆகியவற்றை துரதிருஷ்டவசமாக கருதுகிறேன். அதேபோல் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதும் வருத்தம் அளிக்கிறது.

இலங்கைப் பிரச்சினை முக்கியமானது:

இலங்கை தமிழர் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் ராணுவ அதிகாரியாகவும், முடிவெடுக்கும் அரசு இயந்திரமாகவும், ஆட்சியாளராகவும் இல்லை. தனிப்பட்ட முறையில், இலங்கை பிரச்சினையில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்தாகும்.

சில நேரங்களில் நான் அரசியல்வாதிகளுக்கு மதிப்பளிப்பேன். அவர்களுக்கு ஓய்வு பெறும் காலவரம்பு கிடையாது என்பதால் நல்ல மனதுடன் சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் விடைபெறுகிறேன் என்றார் சோம்நாத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X