பிராமணருக்காக கட்சி துவங்க தயார்-எஸ்.வி.சேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
S V Sekar
சென்னை: "எனக்கு யாராவது பணம் கொடுத்து உதவி பண்ணத் தயாரா இருந்தா பிராமணர்களுக்காக கட்சி நடத்தத் தயார்", என்று நடிகரும் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகி இப்போது தனித்து இயங்குபவருமான எஸ்வி சேகர் கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்

இப்போது எந்தக் கட்சியையும் சாராதவனாகவே நான் உள்ளேன். பல கட்சிகளில் சேருமாறு என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடில்லை.

இப்போது பிராமண சமுதாயத்துக்கு தொண்டு செய்ய புதிய கட்சியைத் துவங்குமாறு பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

நான் தலைமை ஏற்க தயார். ஆனால் கட்சி நடத்துவது சாதாரணமா... அதற்கு தலை இருந்தால் மட்டும் போதாது. பெரிய அளவு பணமும் ஆள் பலமும் தேவை. அதை சமுதாயத்தில் உள்ளவர்கள் செய்து கொடுத்தால் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாராவது பணம் கொடுத்து கட்சி ஆரம்பிக்க பக்கபலமா இருந்தா நான் ரெடி.

புதுக் கட்சிக்கு 'அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்', மற்றும் 'ஆர்ய முன்னேற்ற கழகம்' என இரு பெயர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். கட்சி தொடங்குவதா? இல்லையா? என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.

ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் பிராமணர்கள்:

பிராமணர்கள் என்றாலே, அவங்களுக்கென்ன உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற உணர்வு பலருக்கும். உண்மையில் பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம்.

தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடுவதாக இருக்கும்.

பிராமணர்கள் கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் ஏன் கட்சி தொடங்கப் போகிறோம்.

தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. மீண்டும் சொல்கிறேன், பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.

12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏக்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணக்கமாக செல்வோம்.

எங்களிடம் 20 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. போன தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளின் வெற்றி வித்தியாசமே 15 லட்சம் ஓட்டுகள்தான். பிராமணர் ஓட்டுக்களை ஆதரவு ஓட்டுக்களாக மாற்ற திமுக எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. அதிமுக ஏற்கெனவே அந்த ஆதரவை இழந்துடுச்சி.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கும், உள்ஒதுக்கீடு வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் குறைகளை கேட்க குறைந்தது ஒரு கமிட்டி கூட போடாதது வருத்தம் அளிக்கிறது என்றார் எஸ்வி சேகர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற