அதிமுகவுடன் இனி எந்த தொடர்பும் இல்லை-எஸ்.வி.சேகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் இனி எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தனிக் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளேன் என்று மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

பாஜகவிலிருந்து வந்த எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அதிமுகவில் சேர்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் விருப்ப வட்டாரத்திற்குள்தான் இருந்தார் சேகர். ஆனால் நாளடைவில் ஜெயலலிதாவின் வெறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்.

அதன் பின்னர் அதிமுகவில் நடந்த செயற்குழு, பொதுக்குழு என எந்தக் கூட்டத்திற்கும் சேகரை அழைப்பதில்லை. ஜெயலலிதாவை சந்திக்கவும் சேகருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டாலும் கூட அதிமுகவிலிருந்து விலகாமலும், எம்.எல்.ஏ. பதவியை கைவிடாமல் தொடர்ந்து சேகர் இருந்து வந்ததால் ஜெயலலிதாவுக்கு பெரும் எரிச்சல்.

இந்த நிலையில் நேற்று சட்டசபையில் எஸ்.வி.சேகர் விவகாரம் பெரிதாக வெடித்தது. துணை முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேச சேகரை சபாநாயகர் அழைக்க அதற்கு எதிராக கொந்தளித்து விட்டனர் அதிமுக எம்.எல்.ஏக்கள்.

போட்டு விடுவேன் என சட்டசபைக்குள்ளேயே சேகரை மிரட்டினார் எம்.எல்.ஏ கலைராஜன். இதையடுத்து சேகருக்கும் அவரது வீட்டுக்கு ஆயுதப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சட்டசபைக்கு வந்த எஸ்.வி.சேகர், இனிமேல் தனக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

அவர் கூறுகையில், நான் கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக தலைமைக்கு 16 கடிதங்கள் கொடுத்துவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. அதிமுக நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைப்பதி்ல்லை. அப்படியிருக்க நான் சட்டசபையில் பேசக் கூடாது என்று கூற அதிமுகவுக்கு உரிமையில்லை.

இனிமேல் எனக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதே நேரத்தில் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் மாட்டேன். தொடர்ந்து மைலாப்பூர் மக்களுக்காக பாடுபடுவேன்.

அதிமுக கட்சித் தலைமையை நான் இனி தொடர்பு கொள்ளப் போவதில்லை. ஆரிய திராவிடக் கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்குமாறு பலரும் என்னை வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் சேகர்.

ஏற்கனவே பிராமணர்களுக்கான இயக்கம் ஒன்றை சமீபத்தில்தான் சேகர் தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம்.

எஸ்.வி.சேகர்-குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே அதிமுகவினர் தன்னை மிரட்டுவதாக எஸ்.வி.சேகர் புகார் கூறியதைத் தொடர்ந்து அவருக்கும் அவரது வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எஸ்.வி.சேகருக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகரின் புதிய புத்தகம்..

வழக்கமாக கையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படம் போட்ட புத்தகமோ நோட்டோ கையில் வைத்துக் கொண்டு அலையும் எஸ்.வி.சேகர் இம்முறை காஞ்சி சங்கராச்சாரியாரின் படம் போடப்பட்ட நமது இந்தியா என்ற புத்தகத்துடன் சட்டசபைக்கு வந்தார்.

தனக்கு அதிமுகவினரால் ஆபத்து இருப்பதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளதையடுத்து அவருக்கு எந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீ்ஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...