For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய இலங்கை ராணுவம்!

By Staff
Google Oneindia Tamil News

Raju Gandhu
சென்னை: இந்தியா - இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் ராஜீவ் காந்தி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவரைக் கொலை செய்ய ராணுவம் திட்டமிட்டிருந்ததாம். இதை இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சிரில் ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கட்டுரையை தமிழக அரசியல் இதழ் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை செயலாளராகவும் சிரில் இருந்துள்ளார். சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம் (From Peac to war, Insurgency to Terrorism) என்ற புத்தகத்தை சிரில் ரணதுங்க எழுதியுள்ளார்.

அதில், ராஜீவ்காந்தியை இலங்கையில் படுகொலை செய்ய நடந்த சதியில் அவர் தப்பிய விதம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவரம்..

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உதவியை 1987-ம் ஆண்டில் நாடினார். இதையடுத்து இந்தியா- இலங்கை ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் இணைந்து தயாரித்தன.

அப்போது ஜெயவர்த்தனே, தனது பாதுகாப்பு ஆலோசகராக அவரது மகன் ரவி ஜெயவர்த்தனேவை நியமித்திருந்தார். முப்படைகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி, ரவி தரும் அறிக்கைகளைப் படித்த பிறகே ஜெயவர்த்தனே எந்த முடிவையும் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1987-ம் ஆண்டு ஜூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனேவும், ராஜீவ்காந்தியும் கையெழுத்திட்டனர். அதற்காக ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றார்.

ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டபோது, சிங்கள ராணுவ வீரரான விஜயமுனி விஜித ரோஹன டி சில்வா, துப்பாக்கியால் ராஜீவ்காந்தியைத் தாக்கினார். அவர் சாதுர்யமாக விலகிக் கொண்டதால் துப்பாக்கியின் பின்புறப் பிடியின் அடியிலிருந்து தப்பினார். இந்தச் சம்பவம் அப்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இச்சம்பவத்தைப் பலநாடுகள் கண்டித்ததால் ராஜீவ்காந்தியிடம் ஜெயவர்த்தனே மன்னிப்புக் கேட்டு வருத்தமும் தெரிவித்தார். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கு இச்சம்பவத்தால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ராஜீவ்காந்தி இதைப் பெரிதுபடுத்தவில்லை.

ஆனால், ராணுவ அணிவகுப்புபின்போது அவரை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

ராஜீவ்காந்திக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரும்போது, ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக் கூடாது. ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறுதான் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.

அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படைவீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். படைவீரர்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்று வீரதுங்கா தெரிவித்ததோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால்தான், ரோஹன டி.சில்வா வேறுவழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ்காந்தியைத் தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணிவகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால், அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார் என்பதை இவரது புத்தகம் மறைமுகமாக விளக்குகிறது.

ரவி ஜெயவர்த்தனே இதுபோன்ற ஆலோசனையை வழங்கியிருக்காவிட்டால், ராஜீவ்காந்தி இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஆலோசனையை ரவி வழங்கியதற்கு கூறிய காரணம், எகிப்து நாட்டின் அதிபர் அன்வர் சதாத் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கையில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுதான் என்றும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிரில்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய வெளியீட்டாளர் விஜிதயாப்பா, ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பிடியால் தாக்கிய ராணுவ வீரன், முக்கியமான சம்பவத்தை நாளை நிகழ்த்த உள்ளேன். ஆகவே வீட்டிற்கு உயிருடன் திரும்பி வராமல் இருக்கலாம் என்று தனது நண்பனிடம் ஏற்கெனவே கூறியுள்ளான் என்ற தகவலையும் வெளியிட்டார்.

அதாவது ராஜீவ்காந்தியை கொல்வதற்கு சிங்களர்கள் தீட்டியிட்டிருந்த திட்டத்திலிருந்து அவர் தப்பிவிட்டார். ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகளைப் போலவே, சிங்களர்களும் கோபமாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதாலும், அவர்கள் தமிழ்ப்பெண்களை கற்பழித்ததாலும் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் 'துன்பியல்" சம்பவத்திற்கு ஆட்படுத்தினர். ஆனால், சிங்களர்கள், ராஜீவ்காந்தி மீது கொண்டிருந்தது கோபமா? அல்லது சர்வதேச சதிகார சக்திகளின் தூண்டுதலா? இதைப்பற்றி இந்தியா இப்போது சிந்தித்தாலும் தவறில்லை.

நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கு அது பயன்படும் என்ற கருத்தும் இலங்கையிலேயே ஒரு தரப்பினரிடம் இருந்து வெளி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X