For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை துறைமுக மாஜி தலைவர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம், நகை, ஆவணங்கள் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் நடந்த ரெய்டின் இறுதியில் ரூ. இரண்டே முக்கால் கோடி நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவராக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009 ஜுன் வரை பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ். கடந்த ஜுன் மாதம் இவர் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். ஆனால் அந்த பணியில் சேராமல் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள தலைவருக்கான பங்களாவில் தொடர்ந்து வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்தன.

சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனிக்கு சொந்தமான எம்வி ஷான் ஜியார்ஜியோ' என்ற பயன்படுத்த முடியாத கப்பல் ஒன்று கடந்த 2007-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தது. பயன்படாத இந்த கப்பலை மீண்டும் சிங்கப்பூர் கொண்டு செல்ல முடியாத நிலைமை. எனவே, இந்த கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்த முயற்சித்தார்கள்.

தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் இதற்கு அனுமதி தரவில்லை. ஆனால் சென்னை துறைமுகத்தில் இதை நிறுத்திக் கொள்வதற்கு சுரேஷ் முறைகேடாக அனுமதி அளித்துள்ளார்.

இந்தக் கப்பல் இன்னும் சென்னை துறைமுகத்தில்தான் நின்று கொண்டுள்ளது. இக்கப்பலை இனி உடைத்துத்தான் அப்புறப்படுத்த முடியும். சுரேஷின் இச்செயலால் துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கு, ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இதையடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சுரேஷ் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் துணை பாதுகாவலர் சின்கா மீதும் சி.பி.ஐ. குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் அடிப்படையில்தான் சுரேஷ் வீடு, துறைமுக வளாகத்தில் உள்ள வீடு, உறவினர்கள் வீடு, சின்காவின் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், சுரேஷ் வீட்டில் நடந்த சோதனையில் நகரும், நகரா சொத்துகளுக்கான ஆவணங்கள், 3.5 கிலோ தங்க நகைகள், வங்கி கையிருப்பு, ரூ.9 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ. இரண்டே முக்கால் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில், அமெரிக்க டாலர் 6 ஆயிரத்து 443-ம் அடங்கும். சுரேசுக்கு சொந்தமாக கொடைக்கானல், சென்னை ஈ.சி.ஆர். ரோடு ஆகியவற்றில் நிலங்கள் உள்ளன. பெங்களூரில் ஒரு வீடு உள்ளது. 4 வங்கிகளில் லாக்கர் வசதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லாக்கரை திறந்தும் சோதனை நடத்தப்படும்.

தீவிர விசாரணைக்கு பிறகு சுரேஷ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் தனியாக வழக்கு போடப்படும் என்றார்.

முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பு?:

இதற்கிடையே, சுரேஷின் பல்வேறு மோசடிகளுக்கு முன்னாள் அமைச்சரின் தொடர்பு இருப்பதாக சிபிஐ சந்தேகப்படுகிறது.

சுரேஷ் மிகப் பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரது வீடுகளை உயர் ரக தேக்கு மரங்களால் செய்யப்பட்ட கதவு, ஜன்னல் உள்ளிட்ட பர்னிச்சர்கள் அலங்கரிக்கின்றன. இவற்றை கப்பல் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருப்பதாக தெரிகிறது.

நீலாங்கரையில் ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டு மனை வாங்கப்பட்டிருக்கிறதாம். இவருக்கு 4 வங்கிகளில் லாக்கர்கள் உள்ளன. அவற்றை சிபிஐ அதிகாரிகள் இன்று திறந்து சோதனை நடத்த இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் அவருக்கு கணக்கு இருப்பதாகவும், வெளிநாடுகளிலும் அவர் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுரேஷின் மோசடிச் செயல்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X