For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜசேகர ரெட்டி தன்னிகரில்லாத தலைவர்- பிரதமர், சோனியா புகழாரம்

By Staff
Google Oneindia Tamil News

Rajasekhara Reddy with Sonia Gandhi
டெல்லி: ராஜசேகர ரெட்டி தன்னிகரில்லாத தலைவராக விளங்கினார். மக்களுக்காக வாழ்ந்த அவர், மக்கள் நலனுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தபோது மறைந்துள்ளார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அதேபோல ரெட்டியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது மறைவால் நாங்கள் இதயம் பலவீனமடைந்து போயிருக்கிறோம் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

ரெட்டி மறைவு குறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று செய்தியாளர்களிடம் பேசினர்.

பிரதமர் பேசுகையில், ராஜசேகர ரெட்டியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். அவர் சிறந்த ரோல் மாடலாக திகழ்ந்தார். தன்னிகரில்லாத தலைவராக விளங்கினார்.

மக்களுக்கு பாடுபடுவதற்காகவே பிறந்தவர் அவர். மக்களுக்காக உவைத்தார். ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தவர்களுக்காக உழைத்தார்.

எனக்கு மிகப் பெரிய ஆதரவாகவும், நல்ல யோசனைகளைத் தெரிவிப்பவருமாக விளங்கினார்.

அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது என்றார் பிரதமர்.

இதேபோல ரெட்டியின் மனைவி விஜயலட்சுமிக்கும் இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் பிரதமர்.

இதயமிழந்து போயிருக்கிறோம்.. சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவிக்கையில், மிகச் சிறந்த தலைவர் ராஜசேகர ரெட்டி. மிகச் சிறந்த மனிதரும் கூட. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பாகும். இந்த துயரத்திலிருந்து நாங்கள் விடுபட்ட வர நீண்ட நாளாகும்.

முழுமையாக தன்னை கட்சிக்காக அர்ப்பணித்தவர் ரெட்டி. ஆந்திர மக்களுக்காக அவர் முழுமையாக பணியாற்றி வந்தார். நாடு அவரது இழப்பை மிகப் பெரிய அளவில் உணர்ந்துள்ளது.

மிகச் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட பன்முகம் படைத்த முதல்வராக அவர் விளங்கினார். மக்களுக்கான முதல்வர் அவர்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் அமலாகிக் கொண்டுள்ள நிலையில் அவர் மரணமடைந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரவும், ஆந்திராவில் மிகப் பெரும் வெற்றியைப் பெறவும் ரெட்டி ஆற்றிய பங்கை மறக்க முடியாது என்றார் சோனியா.

தலைவர்கள் இரங்கல்...

இதேபோல ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர் அத்வானி கருத்து தெரிவிக்கையில், மக்கள் தலைவராக விளங்கியவர் ரெட்டி. ஏழைகளின் நலன் குறித்து அவர் சிறப்புக் கவனம் செலுத்தினார்.

அவருடைய மரணத்தின் மூலம் ஆந்திர மக்களும், நாட்டு மக்களும் மிகச் சிறந்த நிர்வாகத் திறமை படைத்த, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரை இழந்துள்ளனர்.

ஆந்திர மக்களுக்காக அவர் ஆற்றியவை பாராட்டுக்குரியவை, மறக்க முடியாதவை.

பல்வேறு நலத் திட்டங்களை அவர் கொண்டு வந்து செயலாற்றினார். கடந்த 25 ஆண்டுகளாக அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அயராமல் பணியாற்றியது இங்கு நினைவு கூறத்தக்கது.

2003ம் ஆண்டு அவர் மேற்கொண்ட 1400 கிலோமீட்டர் பாதயாத்திரை மக்களுக்காக அவர் மேற்கொண்டவற்றிலேயே மிகப் பெரியது என்று கூறியுள்ளார் அத்வானி

எர்ரான் நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் லோக்சபா கட்சித் தலைவர் எர்ரான் நாயுடு கூறுகையில், மிகப் பெரிய தலைவராக விளங்கியவர் ராஜசேகர ரெட்டி. அவரது மரணம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், ரெட்டியின் மரணம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பாகும் என்றார்.

சிரஞ்சீவி

பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில், இது எதிர்பாராதது, மிக மிக துரதிர்ஷ்டவமானது. ஆந்திர மாநிலம் மிகப் பெரிய தலைவர் ஒருவரை இழந்துள்ளது என்றார்.

ராஜ்நாத் சிங்

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ஆந்திர முதல்வரின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் அவர்.

அவரது மறைவு ஆந்திராவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பாகும்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாஜக தலைமையகத்தில் கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றார்.

அரைக் கம்பத்தில் காங். கொடிகள்

ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X