இந்த தீபாவளிக்கு பட்டாசு விலை குறையலாம்!

ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு விலை உயர்ந்தபடிதான் உள்ளது. இருந்தாலும் என்ன விலை கொடுத்தாவது பட்டாசு வாங்கி வெடிக்காவிட்டால் தீபாவளி நிறைவடையாது. பெரும் பட்டாசுகளை வாங்காவிட்டாலும் கூட கம்பி மத்தாப்பாவது வாங்கிக் கொளுத்திப் போட்டு தீபாவளியை சிறக்கச் செய்வது நம்மவர்களின் வழக்கம்.
ஆனால், தற்போது பட்டாசு உற்பத்தி முன்பு போல இல்லை. மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பட்டாசு உற்பத்தியில் தேக்க நிலை காணப்படுகிறது. இதனால்தான் விலையும் அதிகமாக உள்ளது. மேலும் தொழிலாளர்கள் கிடைப்பதும் முன்பு போல செளகரியமாக இல்லை.
சமீபத்தில் சிவகாசி, மதுரை, கோவில்பட்டி பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துக்கள், வெடி விபத்துக்களால் பலர் உயிரிழந்தனர். இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனையில் சென்னை மொத்த வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் கூடுதலாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கடந்த வருடம் அதிக விலைக்கு பட்டாசு விற்கப்பட்டதால் சரக்குகள் பெருமளவில் தேங்கி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம்.
எனவே இந்த வருடம் விலையை குறைத்து விற்பனையை அதிகரிக்க மொத்த வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர். போதுமான அளவிற்கு பட்டாசுகள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.
சென்னையில் தற்போது பந்தர் தெரு, வடபழனி, கோடம்பாக்கம், மைலாப்பூர், அடையாறு போன்ற பகுதிகளிலும் பட்டாசு விற்பனையாளர்கள் புதிதாக உருவாகி உள்ளனர்.
மேலும் சீனப் பட்டாசுகளும் சட்ட விரோதமாக எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன. இதனால் வழக்கத்தை விட சரக்குகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
தீபாவளி விற்பனை குறித்து பந்தர் தெருவில் உள்ள மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில்,
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு சில தேர்வு செய்யப்பட்ட பட்டாசு வகைகள் கிடைக்கவில்லை. அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சக்கரம், குருவி வெடி, லட்சுமி வெடி போன்ற வெடிகள் தட்டுப்பாடாக உள்ளது. பட்டாசு விலை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த வருடம் குறைவாகத்தான் இருக்கும் 5 முதல் 7 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும். இது வியாபாரத்தை பாதிக்காது.
குறைந்த அளவில் தான் பட்டாசு கொள்முதல் செய்துள்ளோம். சில்லறை வியாபாரிகள், மற்றும் பொது மக்கள் அதிக பட்டாசுகள் வாங்கும் வகையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதனால் சிறிதளவு விலையேற்றத்துடன் விற்க முடிவு செய்துள்ளோம்.
தீபாவளிக்கு நிறைய பேன்சி பட்டாசு வகைகள் வந்துள்ளன. வானத்தில் வண்ணங்களாக வெடித்து சிதறும் 500 சவுண்ட் பட்டாசு, 240 சவுண்ட் பட்டாசு வகைகள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட விற்பனை இந்த வருடம் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம் என்றார்.