For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்த ரணில் போடும் 4 புதிய நிபந்தனைகள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த நான்கு புதிய நிபந்தனைகளை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி்த் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே விதித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக அவர்கள் பொன்சேகாவை தேர்வு செய்து வைத்துள்ளனர். இருப்பினும் பொன்சேகாவுக்கு தமிழர்கள் மத்தியில் சுத்தமாக ஆதரவு இல்லை. மேலும் தமிழ்க் கட்சிகளும் கூட ஆதரவு தர தயக்கம் காட்டுகின்றன.

இதையடுத்து அவருக்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் சில உத்தரவாதங்களைத் தர வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே கூறி வருகிறார்.

இதுதொடர்பாக அவர் நான்கு புதிய நிபந்தனைகளை பொன்சேகாவுக்கு விதித்துள்ளார்.

- அளவுக்கு அதிகமாக குவித்து வைக்கப்பட்டுள்ள அதிபரின் அதிகாரங்களை வெகுவாக குறைக்க வேண்டும்.

- என்னை பிரதமராக நியமிக்க வேண்டும்.

- அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு அளிக்க வேண்டும்.

- அரசியல் சட்டத்தின் 17வது திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இந்த உத்தரவாதங்களை பொன்சேகா தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ரணில்.

ஆனால் பொன்சேகா இவற்றை எப்படி ஏற்றுக் கொள்வார் என்று கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மை பலத்துடன் இல்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடக்காத நிலையில் அதிபர் தேர்தல் முடிந்தவுடன் எப்படி ரணிலை பிரதமராக்க முடியும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.

மேலும், தமிழ் தேசியக் கூட்டணியை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தால், தமிழர்களுக்கு என்ன மாதிரியான வாக்குறுதியை பொனசேகா தர முடியும். தமிழ் மக்களின் தற்போதைய ஒரே கோரிக்கை - சுதந்திரமான நடமாட்டம், அதிகாரப் பகிர்வு ஆகியவைதான். இவற்றைத் தர பொன்சேகா ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுப்ப்படுகிறது.

இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் ஊடுறுவலைத் தடுக்க போதிய பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்தாமல், தமிழ் மக்களை சொந்த கிராமங்களில் குடியமர்த்தக் கூடாது என்று ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியவர் பொன்சேகா.

அதேபோல, முன்பு அளித்த ஒரு பேட்டியில், இலங்கை இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தீர்வு அல்ல என்றும் கூறியவர் இந்த முன்னாள் தளபதி. மேலும் இலங்கை, சிங்கள பெளத்தர்களுக்கே சொந்தமானது என்றும் முழங்கியவர் இந்த முன்னாள் கூட்டுப் படைத் தலைவர்.

இப்படிப்பட்டவர் தமிழர்களுக்காக தாராளமாக இறங்கி வருவாரா என்பதும் பெரும் கேள்விக்குறிதான்.

ஒரு வேளை தமிழர்களுக்கு சாதகமாக நடக்க பொன்சேகா ஒப்புக் கொண்டால், அதை நிச்சயம் ஜனதா விமுக்தி பெரமுனா ஏற்காது. காரணம், தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது இந்த சிங்கள இனவாத கட்சி. அப்படி இருக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அமைச்சரவையில் இணைந்து இடம் பெற ஜேவிபி எப்படி சம்மதிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இப்படி பெரும் குழப்பத்தி்ற்கு மத்தியில் அதிபர் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது எதிர்க்கட்சிக் கூட்டணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X