For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மேலவை ஏன்?-கருணாநிதி விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் மீண்டும் மேலவையை அமைப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் கருணாநிதி சட்டசபையில் விளக்கம் தந்தார்.

சட்டசபையில் இன்று மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்து அதன் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இவ்வளவு நாள் பொறுத்திருந்து, இப்போது இதை, கடைசி காலத்திலே கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று செங்கோட்டையன் கேட்டார். இது யாருக்குக் கடைசி காலம் என்பதை இந்த நாட்டு மக்கள், வாக்காளப் பெருமக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று.

எனவே, நானோ, செங்கோட்டையனோ வருத்தப்பட வேண்டியதில்லை, ஆத்திரப்படத் தேவையில்லை, அவசரப்படத் தேவையில்லை. மேலவை என்பது தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகள் இயங்கி வந்த ஒரு அமைப்பு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 23 ஆண்டுகளுக்குப் பின்னர்- தற்போது மீண்டும் மேலவை தேவை என்று சொல்கின்ற அளவிற்கு மூன்றாவது முறையாக இந்த அரசால் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கர்நாடகம், மராட்டியம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பேரவை, சட்ட மேலவை என்ற இரண்டு அமைப்புகளும் இருக்கின்றன.

இவ்வளவு நாள் பொறுத்து திடீரென்று இதைக் கொண்டு வருவதாக ஒரு வாதம் வைக்கப்பட்டது. இது திடீரென்று கொண்டு வரப்படவில்லை. பல நாட்கள், பல மாதங்கள், இன்னும் சொல்லப்போனால், மூன்று, நான்கு ஆண்டுகள் இதற்காக முயற்சி மேற்கொண்டு இந்த அரசு இன்றைக்கு இதைக் கொண்டு வந்ததற்குக் காரணம், இந்தப் புதிய சட்டப்பேரவை மண்டபத்தைப் பார்த்த பிறகு, உருவாக்கிய பிறகு, இது அமைந்த பிறகு, இதிலே மேலவையையும் வைப்பதற்கான இடம் இருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் மேலவைக்கு எங்கே இடம் என்று தேட வேண்டிய அவசியமில்லை.

இடம் இங்கேயே இருக்கிறது என்று யோசித்து, அந்த இடத்தை இங்கே குறிப்பிட்டு, அதைத் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்குச் சென்று, அங்கிருந்து ஆதரவான நிலை ஏற்பட்ட பிறகு, அதிலே வந்து அமரக்கூடியவர்கள் யார், யார் என்பதை, நாங்களல்ல.. ஜனநாயகரீதியிலே ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்களை, ஆசிரியர்களானால் அந்தப் பிரிவிலே உள்ளவர்களை, தொழிலாளர்களானால் அந்தப் பிரிவிலே உள்ளவர்களை, கல்வியாளர்களானால் அந்தப் பிரிவிலே உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, மேலவைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பை அந்த வாக்காளப் பெருமக்கள் எதிர்காலத்திலே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள், செய்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அவையில் மேலவையைக் கலைக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானம் 1986ம் ஆண்டு வாக்கில் வந்தபோது தோழர் ப. மாணிக்கம் கூறிய கருத்தை இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அந்தக் கருத்தை நம்முடைய கோ.க. மணி முழுமையாக இங்கே குறிப்பிடவில்லை என்று கருதுகிறேன்.

பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த ஒரு தோழர் குறிப்பிட்டதை இங்கே எடுத்துக் காட்டி, இதற்கு என்ன விளக்கமென்று இங்கே கேட்கப்பட்டது. அதற்கான விளக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளர் ப. மாணிக்கம் அன்றைக்கே இந்த அவையிலே எடுத்துச் சொல்லியிருக்கின்றார். அது என்ன?.

படித்த பட்டதாரிகள், அறிவாளிகள் ஆகியோருடைய அறிவு, மேலவைக்குத் தேவை. அவர்களின் அறிவு தமிழ்நாட்டினுடைய நிர்வாகத்திற்குத் தேவை. அதனால்தான் அறிவுத் துறையில் உள்ளவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இங்கே பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்கிறது. அதைப்போலவே உள்ளாட்சித் துறையில் உள்ளவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலவை கலைக்கப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வரக்கூடியவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ப.மாணிக்கம் சொல்லியிருக்கிறார்.

மேலவையைக் கலைக்கின்ற தீர்மானத்தை இங்கே கொண்டு வந்தபோது, இந்தக் கருத்தை மிக அழுத்தந்திருத்தமாக அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதுமாத்திரமல்ல, மேலவை கலைப்புத் தீர்மானம் குறித்து 14-5-1986 அன்று இந்த அவையில் விவாதிக்கப்பட்டபோது, தோழர் சுப்பராயன் பின்வருமாறு குறிப்பிட்டார்.

இங்கே முன் மொழியப்பட்டிருக்கின்ற இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரையில், ஆளுகிற கட்சியால் இதுவரையில் மக்களிடத்திலே இது சொல்லப்படவில்லை. மேலவையை ஒழிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட கட்சியாக ஆளுங்கட்சி இல்லை. திடீரென்று ஏதோ போதி மரத்திற்குக் கீழே உட்கார்ந்த பிறகு ஞானம் வந்தது போல், உள்ளாட்சித் தேர்தல்களின் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், மக்களின் தீர்ப்பு வெளிப்பட்டவுடன், ஒரு புதிய ஞானம் தோன்றித்தான் இப்படிப்பட்ட நடைமுறை இந்த மாநில அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது, மக்கள் தங்கள் எண்ணத்துக்கு தக்கபடி தீர்ப்பளிக்க வேண்டும்; அப்படி தீர்ப்பு அளிக்கவில்லை என்றால், தங்கள் அதிகாரத்தையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அந்தத் தீர்ப்புக்குச் சேதாரம் ஏற்படுத்தி விடுவது என்ற மன இயல்பு வாடிக்கையாக உள்ளது என்று நண்பர் திரு. சுப்பராயன் அவர்கள் இந்த அவையில் அன்றைக்குப் பேசியிருக்கிறார்.

நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய சகோதரி பாலபாரதி நான் வெளிநடப்புக் கூட செய்ய மாட்டேன்; உள்ளேயிருந்து எதிர்த்து வாக்களிப்பேன் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார். ஒருவேளை வெளிநடப்புச் செய்தால், வாக்கு வித்தியாசத்திலே இந்தத் தீர்மானம் ஜெயித்துவிடும் என்ற அந்த எண்ணத்தில், நான் இங்கேயிருந்து வாக்களிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த தோழர்- என்னுடைய தோளோடு தோள் நின்று தொழிலாளர் வர்க்கத்திற்காக, கோவை மாவட்டத்திலே போராடிய தோழர் ரமணி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அந்தத் தோழர் ரமணி 20-2-1989 அன்று இந்தத் தீர்மானம் வந்தபோது, அதை எதிர்த்தவர். அந்தத் தீர்மானத்தை ஆதரிக்காதவர். அதாவது, மேலவை வரவேண்டும் என்ற தீர்மானத்தை விரும்பாதவர். அவர் சொன்னார்..

இந்த அரசு தங்களுக்கு நன்மைகள் பல செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், இந்த அரசிற்கு ஒரு இடையூறோ, தோல்வியோ ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஆகவே, இதை ஆட்சேபித்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அந்த வெளிநடப்பு ஓரளவு எங்களுக்கு உதவிகரமாக இருந்தது என்பதை பாலபாரதி அவர்கள் அறிவார்கள். எங்கே அப்படி உதவியாக ஆகிவிடப் போகிறதோ என்பதால்தான், நாங்கள் வெளிநடப்புச் செய்யமாட்டோம் இங்கேயிருந்து வாக்களிப்போம்; அதிமுகவுடன் சேர்ந்து உங்களுக்கு எதிராக வாக்களிப்போம் என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார். நான் அதற்காக நன்றி கூற விரும்புகிறேன்.

அவர்களுடைய வைர நெஞ்சத்திற்கும், உறுதிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால், அவர்களுடைய தலைவர்களிலே ஒருவரான திரு.ரமணி எப்படி நடந்து கொண்டார் என்பதையும், அவர்களுடைய மனதிலே பசுமையாக பதிய வைப்பதற்காகத்தான் நான் அதைப் படித்துக்காட்டினேன்.

இன்னொரு கருத்து- இங்கே மதிமுக உறுப்பினர் பேசினார் என்று கருதுகிறேன். அவர்களுக்கு மேலவை, ராஜ்யசபா, இவைகளெல்லாம் பிடிக்காது. (சிரிப்பு).

அவர் பேசும்போது, இது வீண் செலவு என்று குறிப்பிட்டார். இது வீண் செலவு என்று வேறு சில பேரும் சொன்னார்கள். இந்த மேலவை மீண்டும் வர வேண்டுமென்பதற்கு எதிரான கருத்துக்களைச் சொன்ன வேறு சில நண்பர்களும், மேலவையால் வீண் செலவு என்று சொன்னார்கள். அதையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மேலவைக்கு 1985-86ல் ஆன செலவு 13 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்தான். அப்போது மேலவைச் செயலகத்தின் செலவு 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் செலவு கொஞ்சம் அதிகமாக ஆகலாமே தவிர வேறல்ல.

கணக்கிட்டுப் பார்த்தால், இன்றைக்கு உறுப்பினர்களுக்கு நாம் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டிற்காக அளிக்கின்ற தொகையைவிட இதுவொன்றும் அதிகமல்ல என்பதையும், மேலவை வருகிற காரணத்தால், பல கோடி ரூபாய்ச் செலவாகிவிடும் என்று கருதத் தேவையில்லை. அதிகச் செலவு ஆகின்ற விஷயத்திலே நாங்கள் ஈடுபடுவதில்லை.

1985-86லேயே 13 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய்தான். செயலகத்திற்கு 18 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான். இப்போது நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல, மேலவையை அமைக்க புதிய மண்டபம் எதுவும் கட்டத் தேவையில்லை. நான்கூடக் கருதினேன். மேலவை வந்தால், நம்முடைய பழைய சட்ட மண்டபத்திற்குச் சென்று விடலாமா என்றுகூட ஒரு யோசனை இருந்தது. அங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே மேலவையை வைத்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம் இருந்தது.

ஆனால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி தமிழ் மத்திய அமைப்பு நிறுவன அலுவலகத்தை அங்கே அமைப்பது என்கின்ற ஒரு கருத்து உருவாகியிருப்பதால் அதை அங்கே அமைத்து விட்டு இங்கே இரண்டு பெரிய கூடங்கள் இருக்கின்றன. ஒரு மிகப் பெரிய கூடம் - இன்னொன்று நடுத்தரமான கூடம். அந்த நடுத்தரமான கூடத்திலே நாம் இங்கே வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, மத்திய அரசு விரைவாகச் செயல்பட்டு நமக்கு அனுமதி தருவதிலே வெற்றி பெற்று அந்த மேலவை அமையுமேயானால் அதை இங்கேயிருக்கின்ற இரண்டு கூடங்களிலே ஒன்றிலே அமைப்பதென்றும் முடிவு செய்திருக்கிறோம் என்று நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம், எத்தகைய இயலாதோருக்கெல்லாம் மேலவையில் இடம் தர முடியுமென்றார். தந்த உதாரணங்களைச் சொல்ல வேண்டுமேயானால் கழக ஆட்சியில் மேலவையில் சமுதாயத்தின் அடித்தளத்திலே உள்ளவர்களை இடம் பெறச் செய்தோம் உதாரணம் வேண்டுமேயானால்- சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கோலப்பன் இருந்தார். அதற்கு முன்பே சீர்காழியைச் சேர்ந்த எத்திராஜ் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் இடம் பெற்றிருந்தார். அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் புதிரை வண்ணார் என்கிற அந்தக் கூட்டத்தோடு எங்களை இணைத்து அவர்களுக்குள்ள உரிமைகளை வழங்க வேண்டுமென்று பேசிக் கொண்டிருக்கக் கூடியவர். பின்னர் கழக ஆட்சியிலே மாசிலாமணி என்ற தோழர் - ஏன் ஆதி ஆந்திரா சமுதாயத்தைச் சேர்ந்த எலமந்தா அவர்களுக்கு இடம் தந்தோம். தமிழ் மொழிக் காவலர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு இடம் தந்தோம். அண்ணா அவர்கள் காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களே மேலவையிலே இடம் பெற்று இருந்தவர் தான்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி மேலவையில் கழக ஆட்சியில் இடம் பெற்றார். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலே இருந்த போது நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களும் கொடுமுடிக் கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

எனவே யார் யாருக்கு இடம் பெறுவது என்பதிலே எந்தவிதமான கருத்து வேறுபாடும் எழுவதற்கு வகையில்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X