For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

By Chakra
Google Oneindia Tamil News

சேலம்: மருமகளிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சேதுபதிராமலிங்கம் (65). இவரது மனைவி ஜோதி.

சேதுபதிராமலிங்கம் துணைவேந்தராக பணியாற்றிய 2002ம் ஆண்டில் அவரது மகன் ராஜவேல் சேதுபதிக்கும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது ரூ.2 லட்சம் பணம், 100 பவுன் நகைகள் வரதட்சணையாக தரப்பட்டது. கூடுதல் வரதட்சணையாக கார் கேட்டு சேதுபதி குடும்பம் நச்சரித்தது. ஆனால், கார் தரப்படவில்லை.

திருமணம் முடிந்த பின்னர், சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் சங்கீதா குடியேறினார்.

திருமணமான 7வது நாளே ராஜவேல் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு அமெரிக்காவில் பணியில் சேர சென்று விட்டார். மாமியார் ஜோதி கோவை உள்ள அவர்களது மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார்.

சேலத்தில் உள்ள வீட்டின் கீழ்பகுதியில் சங்கீதாவும், மேல்பகுதி மாடியில் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கமும் வசித்து வந்தனர்.

வீட்டில் தனியாக இருக்கும்போது சங்கீதாவிடம் தவறாக நடந்து வந்தார் சேதுபதிராமலிங்கம்.

ஒருநாள் இரவில் சங்கீதாவை, பாலியல் பலாத்காரம் செய்ய சேதுபதிராமலிங்கம் முயன்றார்.

சங்கீதா தப்பியோடி ஒரு அறையில் புகுந்து பூட்டிக் கொணடார். இதை வெளியில் யாரிடமும் சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் ஆள்வைத்து கொன்று விடுவேன் என சேதுபதிராமலிங்கம் மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்துபோன சங்கீதா இந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை.

மாமியாரும் உடந்தையாக இருந்த கேவலம்:

இதற்கிடையே கோவையில் மாமியார் ஜோதி சேலத்துக்கு வந்தார். அவர் சங்கீதாவிடம், மாமனார் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும், இல்லாவிட்டால் கூடுதலாக ரூ.2 லட்சம் வரதட்சணையும் காரும் வாங்கி வா.. இல்லாவிட்டால் தாலியை கழற்றி வீசி விட்டு வெளியே போ என்று மிரட்டினார்.

மேலும் சங்கீதாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக பொய் செய்தியையும் உறவினர்களிடம் பரப்பினர். இதற்கு ஈரோட்டில் டாக்டராக சேதுபதியின் மகள் மீனாட்சி அனுராதா, மருமகன் டாக்டர் பரமேஸ்வரன் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். இந்த விவகாரம் எல்லாம் தெரிந்தும் அமெரிக்காவில் ஒன்னும் தெரியாதவர் போல இருந்தார் ராஜவேல்.

தனக்கு வரதட்சனை கொடுமை நடப்பதாகவும், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல காட்ட முயற்சிப்பதாகவும் மட்டும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார் சங்கீதா. இதையடுத்து தந்தை வெங்கடாசலம் மகளை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

அப்போது கூட தன் மீது மாமனார் நடத்திய பாலியல் பலாத்காரத்தை அவர் யாரிடமும் சொல்லவி்ல்லை.

சென்னைக்குச் சென்ற சங்கீதா பெண்கள் விடுதியில் தங்கி எம்.எஸ்.சி (ஐ.டி) படிப்பை தொடர்ந்தார்.

அப்போது சேதுபதிராமலிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது மகனுடனான திருமண பந்தம் நீடிக்க வேண்டுமானால் உடனே சேலத்துக்கு வருமாறு சங்கீதாவை அழைத்தார்.

இதையடுத்த சங்கீதா சேலம் வந்தார். ஆனால், அன்றிரவே சங்கீதாவை, சேதுபதிராமலிங்கம் மானபங்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

இத்தனை நாட்களாக உண்மையை மறைத்த சங்கீதா, இவை அனைத்தையும் தனது தந்தையிடம் தெரிவித்து கதறினார்.

மேலும் ராஜவேல் சேதுபதி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதும், அதை மறைத்து திருமணத்தை சேதுபதி குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.

இது குறித்து சங்கீதா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சேதுபதி ராமலிங்கம், ஜோதி, நாத்தனார் டாக்டர் மீனாட்சி அனுராதா, அவரது கணவர் டாக்டர் பரமேஸ்வரன், சங்கீதாவின் கணவர் ராஜவேல் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவித்யா நேற்று தீர்ப்பளித்தார்.

சேதுபதிராமலிங்கம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு பெண்ணை கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட ஜோதி, மீனாட்சி அனுராதா, பரமேஸ்வரன் ஆகியோர் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கீதாவின் கணவர் ராஜவேல் சேதுபதி அமெரிக்காவில் பதுங்கிக் கொண்டு இதுவரை இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்மீது தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் வரதட்சணை ஜோதி, அவரது மகள் மீனாட்சி, மருமகன் பரமேஸ்வரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசு வழக்கறிஞர் சேகர் மற்றும் சங்கீதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X