For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்ட மதுரை விமான நிலையம்

Google Oneindia Tamil News

Madurai Airport
டெல்லி: சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு, பெரும் பொருட் செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாகியுள்ள மதுரை விமான நிலையம் செப்டம்பர் 11ம் தேதி திறக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மிகப் பழமையான விமான நிலையங்களில் ஒன்று மதுரை விமான நிலையம். வெள்ளையர் ஆட்சியில் இந்த விமான நிலையம் ராணுவப் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் இது சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது.

தமிழகத்தின் மிகப் பழமையானதும், பல்வேறு பெருமைகளை உள்ளடக்கியதுமான மதுரை வி்மான நிலையம், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெறவில்லை. காரணம், பயணிகள் போக்குவரத்து பெருமளவில் இல்லாததே. அதேசமயம், மல்லிகைப் பூ ஏற்றுமதி காரணமாக மதுரை விமான நிலையம் நஷ்டத்தை சந்திக்காமல் தொடர்நது இயங்கி வந்தது.

இருப்பினும் சமீப காலமாக தமிழகத்தின் பிசியான விமான நிலையங்களில் ஒன்றாக மதுரை மாறியது. ஏராளமான விமானங்கள் தற்போது இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதையடுத்து மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சர்வதேச தரத்திலான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தலைமையில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்தார்.

தற்போது தரம் உயர்த்தப்பட்டு, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெறவுள்ளது மதுரை விமான நிலையம். இதன் திறப்பு விழா செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான டாக்டர் ராஜேஸ்வரன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக் கோரிக்கை வைத்துள்ளோம்.

மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் அளித்ததற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரமாண்ட பேரணி ஒன்றை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

புத்தம் புதிய மதுரை விமான நிலையம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ. 150 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ரன்வே 12,500 அடி கொண்டதாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தின் பரப்பளவு 610 ஏக்கராக பிரமாண்டமாக விரிவடைந்துள்ளது.

எஸ்கலேட்டர், குளிர்சாதன வசதி, உலகத்தரத்திலான டெர்மினல் உள்ளிட்டவை மதுரை விமான நிலையத்தின் முகத்தையே மாற்றி விட்டது.

மதுரைக்குப் பல பெருமைகள் உண்டு. இனி அதில் மதுரை விமான நிலையமும் இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X