For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கொடநாட்டில் பதுங்கும் ஜெ.-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஜெயலலிதாவுக்கு கோட்டைக் கதவு தனக்கு எப்போது திறக்கும் என்ற கணக்குத்தான்! கணக்கு கூட அல்ல - கனவு! அந்தக் கனவு பலிக்க வேண்டுமென்பதற்காகத்தான் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார் - பாடாத பாட்டெல்லாம் பாடுகிறார் - போடாத வேஷமெல்லாம் போடுகிறார்! அவரது ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலர்களை எல்லாம் என்ன பாடுபடுத்தினார், நீதிமன்றங்களில் நீதியரசர்கள் எல்லாம் அவரது ஆட்சியைப் பற்றி அப்போது என்னென்ன விமர்சனம் செய்தார்கள் என்பதைப் பற்றி தேவைப்பட்டால் நான் மீண்டும் நினைவு படுத்துகிறேன். இதுபோன்ற பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு பதுங்கிக் கொள்ள அவருக்கு இருக்கவே இருக்கிறது கொடநாடு! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக முரசொலியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏற்கனவே நடந்தவைகளை உதாரணம் காட்டி, அவற்றில் சில, இப்போது நடப்பதைப் பொருத்திச் சொல்வது சரியா என்று ஒரு வாதம் வைக்கப்படும்! முன்பு இருந்தவர்கள் தவறு செய்தால், அதே தவற்றை நாம் செய்யலாமா என்ற கேள்வி எழுப்பப்படும். ஆனால் இவற்றுக்கு இடையே நான் எழுப்பும் பிரச்சினை என்னவென்றால், முன்பு தங்கள் காலத்தில் இருந்த சூழலுக்கேற்ப சில பிரச்சினைகளைக் கையாண்டவர்கள் இப்போது அதே மாதிரியான சூழலுக்கிடையே நாம் ஒரு பிரச்சினையை கையாளும் போது - முன்பு போல இல்லாமல் இப்போது மென்மையாகவும், லாவகமாகவும் அணுகும் போது - அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்தோடு - இன்று நாம் கடைப்பிடிக்கும் மென்மையான அணுகு முறையை ஏதோ ஒரு மிருகத்தனமான அணுகுமுறை என்பது போல பாவித்து- புயல் கிளம்பும் என்று எச்சரிக்கிறார்கள். பூகம்பம் ஏற்பட்டு விட்டது போல புலம்புகிறார்கள்.

இந்தப் பீடிகையெல்லாம் எதற்காக என்று கேட்கத் தோன்றும் உனக்கு! அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட - அரசே முன்னின்று நடத்தும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுடைய போராட்டம் பற்றி - அதைத் தூண்டிவிட்டவர்களுடைய உள்நோக்கம் பற்றி -நீயும் பொதுமக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்!
நமது கழக அரசுக்கு எதிராக எங்கேயாவது ஒரு சலசலப்பு தோன்றினாலும் - அதைப் பெரிய பிரளயமாக ஆக்கி இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு - அந்த இடத்தில் தான் வந்து உட்கார்ந்து விடலாமா என்று கனவு காண்கின்றவர்களில் தலையானவர் ஜெயலலிதா என்பதை நீ அறிவாய்!

அண்மையில் சத்துணவு ஊழியர்கள் சில கோரிக்கைகளை வைத்து - அவற்றைப் பற்றி என்னிடமோ - அந்தத் துறை அமைச்சரிடமோ - விவாதிப்பது கூடத் தேவையில்லை; நேரடியாகப் போராட்டத்திலேயே குதிப்போம்; தலைமைச் செயலகக் கோட்டையையே முற்றுகையிடுவோம் என்று ஆர்ப்பரித்து, அதற்காக பல ஊர்களிலேயிருந்து படையும் திரட்டி, இந்த அரசு பாதுகாப்புக்காக ஏதாவது எதிர் நடவடிக்கை எடுத்தால் அவற்றைப் பூதாகாரமாக ஆக்கி - புயலைக் கிளப்பலாம் என்று சில கட்சியினர் கண்ட கனவு பலிக்காமல் போய் விடவே தூஷணை அகராதியில் என்னென்ன வார்த்தைகள் உண்டோ; அவைகளையெல்லாம் தொகுத்து என் மீதும், என் தலைமையிலே உள்ள இந்த அரசு மீதும் அர்ச்சனையாகப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களாவது தாங்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்பட நியாயம் உண்டு. அதற்காக அவர்கள் நம் மீது கனல் கக்கவும் உரிமை உண்டு. ஆனால் இதில் இடையிலே புகுந்து கொண்டு ஜெயலலிதா என்ற அம்மையார் "குய்யோ முறையோ'' என்று கூப்பாடு போடுவதற்குத்தான் பொருள் நமக்கு விளங்கவில்லை.

சத்துணவு ஊழியர்களையெல்லாம் நான் பழி வாங்குகிறேனாம்! இவர் ஆட்சியில் அவர்களுக்கெல்லாம் பட்டாபிஷேகம் நடத்தியவரைப் போலவும் - அவர்கள் பரவசமடையும் அளவுக்கு, பாதி நாள் வேலைக்கே முழுச் சம்பளம் கொடுத்தவரைப் போலவும் இன்றைக்குப் பசப்புகிறார்! "ஆகா! எங்கள் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டம் என்பதால் தானே; சத்துணவு ஊழியர்களை கருணாநிதி பழிவாங்குகிறார்'' என்று கதறுகிறார்; கண்ணீர் வடிக்கிறார்.

உடன்பிறப்பே! கண்ணீரில் "நீலிக் கண்ணீர்'' என்று ஒரு வகை உண்டு. அந்த வகையில் ஜெயலலிதாவின் கண்ணீருக்கு அந்தப் பெயர் பொருந்தும்! சத்துணவு ஊழியர்கள் இப்போது என்ன கேட்கிறார்கள்? அரை நாள் அதாவது பகுதி நேரம் வேலை பார்த்துவிட்டு, முழு நேரச் சம்பளம் கேட்கிறார்கள்.

அவர்கள் பணியிலே சேரும் போது, அவர்களுடைய பணி "பகுதி நேரப்பணி''தான் என்பதை ஏற்றுக்கொண்டு தானே பணியிலே சேர்ந்தார்கள். அப்போது அரசின் சார்பாக அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக ஆக்கப்படுவார்கள் என்று ஏதாவது உறுதி மொழி அரசின் சார்பில் தரப்பட்டுள்ளதா? அவர்கள் பகுதி நேரப் பணியாற்றுபவர்கள் என்பதற்காகத்தான் அந்தந்த பகுதிகளிலே உள்ளவர்களைத்தான் இந்தப் பணியிலே அமர்த்தப்பட்டது. அவர்களை முழு நேரப் பணியாளர்களாக ஆக்க வேண்டுமென்ற கோரிக்கையை அப்படியே ஏற்கலாம் என்று ஜெயலலிதா சொல்கிறாரா? ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தாரே பத்தாண்டு காலம்! அப்போது, இந்தக் கோரிக்கையை அவரே நிறைவேற்றியிருக்கலாமே? அப்போதும் சத்துணவுப் பணியாளர்கள் இந்தக் கோரிக்கையை வைத்துக் கொண்டுதானே இருந்தார்கள்!

இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கற்றுப்போய் -வகையற்றுப் போய் - திருச்சி கூட்டத்திலே போய் "வனவாசத்தை''த் தேடியிருக்கிறார் ஜெயலலிதா! அதுவும் கண்ணதாசன் எழுதிய "வனவாசத்தை''! கண்ணதாசன் "வனவாசம்'' பற்றி மாத்திரமா எழுதினார். இவரைப் போன்றவர்களின் "சகவாசம்'' எப்படிப்பட்டது என்பதையும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறாரே? அவ்வளவு ஏன்? அதைவிட அதிகமாக - அதைவிட ருசிகரமாக - இவரே கைப்பட எழுதிய கடிதங்கள் இன்றைக்கும் அந்தச் "சகவாச'' சாட்சியங்களாக விளங்குகின்றனவே? சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தாராம்; அதற்காக சத்துணவு ஊழியர்களைப் பழிவாங்குகிறோமாம்!

உண்மை என்ன! எம்.ஜி.ஆருடைய சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கி; அதை உண்மையான சத்துணவாக ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை; சத்துணவு அருந்தும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வாரம் மூன்று முட்டை; முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் என்றாக்கி, அந்தத் திட்டத்தை மேலும் பலன் உள்ளதாக செய்தது யார்? ஜெயலலிதா ஆட்சியா? அல்லது இப்போது நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியா?

சத்துணவு ஊழியர்களின் இன்றைய கோரிக்கைகளை ஜெயலலிதா வாங்கிப் படித்துப் பார்க்கட்டுமே! என்னென்ன கோரிக்கை களை நிறைவேற்றலாம் என்று அவரே சொல்லட்டுமே!

அரசு அலுவலர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு வரும் மிகப் பெரிய சங்கமான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் மாநிலத் தலைவர் கோ.சூரியமூர்த்தி இந்தச் சத்துணவுப் பணியாளர்கள் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு விடுத்துள்ள பத்திரிகை செய்தியில், "மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற (கம்iனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கும்) மாநிலங்களைப் போன்ற நிர்வாகக் குறைபாடுகளும், அகவிலைப்படி மற்றும் ஊதியத்தில் பாதிப்பான நிலையும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை.

சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் அரசுடன் சுமூகமாகப் பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலமாக ஊதிய உயர்வு, பதவி உயர்வு, உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற்றுள்ளார்கள். அதைப் போலவே இன்னும் பெற வேண்டிய சலுகைகளை ஒற்றுமையாக இருந்து அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகி விடாமல் பெற்றுக் கொள்ள முயல வேண்டும்.

மனித நேயத்தோடு பல சலுகைகளை வழங்கிய ஆட்சியாளர்களின் மனதை அரசியல் உள்நோக்கத்தோடு புண்படுத்துவதன் மூலமாகவோ அல்லது போராடுவோம் என்று மிரட்டல் விடுப்பதன் மூலமாகவோ பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியாது. சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களில் பெரும் பகுதியினர் கிராமப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதாலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், வர்க்கப்பற்றோடும், மனிதாபிமானத்தோடும் முதல்வர் கருணாநிதி, 15-9-2008-ம் தேதியன்று இப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வளித்து, ஓய்வூதியம் வழங்கி, பணி மூப்புக்கு ஏற்றவாறு உயர்வான ஊதியத்தையும் வழங்கி சுதந்திர தின உரையில் அறிவிப்புச் செய்தார்.

மேற்கொண்டும் சில சில சலுகைகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து 21-11-2009-ல் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சத்துணவு அங்கன்வாடிப் பணியாளர் சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பதினைந்து கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்புச் செய்தார். அரசும், அதனை வழி நடத்தும் முதல்வரும் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டு ஊதிய உயர்வையும், ஆறு மாதத்திற்கொருமுறை அகவிலைப்படி உயர்வையும் வழங்கி வரும் போது, "கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு'' ஊழியர்கள் நலனுக்கு விரோதமாக போராடுவது தவறானது. போராட்டம் என்ற பெயரில் அரசியல் சூழ்ச்சிக்கு சத்துணவு அங்கன் வாடிப் பணியாளர்கள் பலியாக வேண்டாமென இப்பணியாளர்களுக்காகப் பாடுபட்டு பல சலுகைகள் பெறுவதற்குக் காரணமாக இருந்தவன் என்கின்ற முறையில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

சத்துணவு, அங்கன் வாடிப்பணியாளர் மற்றும் சமையல் உதவியாளர்கள் அனைவரும் உண்மை நிலையை உணர்ந்திருக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இப்பணியாளர்களை எவராவது தூண்டினால் அது எடுபடாது என்பதை உறுதிப் பட தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுப் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள திரு.மு.வரதராசன் எனக்கு எழுதிய கடிதத்தில், "தங்களது பொற்கால ஆட்சியில் "பூவெப்போ மலரும் பொழுதெப்போ விடியும்'' என ஏங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் கட்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய வேளையில் ஒரு அரசியல் கட்சியின் துÖண்டுதலின் பேரில் ஒரு சங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 30-ந் தேதி, கோட்டை முற்றுகை அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயலுகின்ற வேளையில், நன்றி மறப்பது நன்றன்று என நினைக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து திரண்டு தங்களுக்கு நன்றி அறிவிப்பு பேரணி சென்னையில் எதிர்வரும் 17-9-2010 அன்று நடத்தவுள்ளோம்'' என்று தெரிவித்திருப்பது சத்துணவுப் பணியாளர்கள் அனைவருமே நன்றி கெட்டவர்கள் அல்ல என்பதை எனக்குத் தெரிவித்து ஆறுதல் அடையச் செய்கிறது.

பகுதி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு முழு நேரச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கிறாரா? அப்படியென்றால் எத்தனை லட்சம் பேருக்கு அந்த ஊதிய உயர்வு தரவேண்டும்? அந்தக் கணக்கையெல்லாம் அவர் பார்த்தாரா? பார்க்காமலேயே நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களையெல்லாம் முழு நேர ஊழியர்களாக ஆக்குவேன் என்று சொல்கிறார் என்றால், அது ஊரை ஏமாற்றுகின்ற செயல்தானே? ஆட்சியிலே இருந்த பத்தாண்டு காலத்தில் அவர் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன்? அவருக்கு வேண்டிய கணக்கு - கோட்டைக் கதவு தனக்கு எப்போது திறக்கும் என்ற கணக்குத்தான்! கணக்கு கூட அல்ல - கனவு! அந்தக் கனவு பலிக்க வேண்டுமென்பதற்காகத்தான் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார் - பாடாத பாட்டெல்லாம் பாடுகிறார் - போடாத வேஷமெல்லாம் போடுகிறார்!

தரிசனத்துக்காக திருவரங்கத்திற்குப் போகிறார்! அவர் அயர்ந்து நின்ற இடமெல்லாம் முக்காலி போட்டு உட்கார வைக்க காத்திருக்கிறது ஒரு கூட்டம்! அதனால் அவர் எது வேண்டுமானாலும் பேசுவார் - எது வேண்டுமானாலும் செய்வார்! அவரது ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலர்களை எல்லாம் என்ன பாடுபடுத்தினார், நீதிமன்றங்களில் நீதியரசர்கள் எல்லாம் அவரது ஆட்சியைப் பற்றி அப்போது என்னென்ன விமர்சனம் செய்தார்கள் என்பதைப் பற்றி தேவைப்பட்டால் நான் மீண்டும் நினைவு படுத்துகிறேன். இதுபோன்ற பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு பதுங்கிக் கொள்ள அவருக்கு இருக்கவே இருக்கிறது கொடநாடு! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X