For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேஷன் கடை ஊழியர்கள் 30000 பேருக்கு சம்பள உயர்வு!-கருணாநிதி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: ஏறக்குறைய 30,000 பேர் பயன் அடையும் வகையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன், சம்பள உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு-

2006-ல் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான இந்த அரசு பதவி ஏற்ற பிறகு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பு ஊதியத்திற்குப் பதிலாக, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையுடன் இணைந்த கூட்டுறவு நியாயவிலைக் கடைப் பணியாளர் சங்கமும் மற்றும் சில சங்கங்களும், கூட்டுறவு நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசுக்கு அளித்திருந்தன. அக்கோரிக்கைகளை பரிசீலித்திட, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

சம்பள உயர்வு:

அக்குழு, கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும், எடையாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அளித்துள்ள பரிந்துரையினை ஏற்று; புதிதாக நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் மாத தொகுப்பு ஊதியமான 3 ஆயிரம் ரூபாயை, இனி ரூ.4 ஆயிரமாகவும், எடையாளர்களுக்கு வழங்கப்படும் மாத தொகுப்பூதியத்தை 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும் உயர்த்தியும், இவர்களின் தொகுப்பூதியம் பெறும் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை ஓராண்டாக குறைத்தும், ஓராண்டிற்குப் பிறகு விற்பனையாளர்களுக்குக் காலமுறை ஊதியமாக ரூ.3,300 - ரூ.8 ஆயிரம் என்ற ஊதிய விகிதமும், எடையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம்- ரூ.7 ஆயிரம் என்ற ஊதிய விகிதமும் வழங்கிடவும்; இதுதவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப் படியாக மாதம் 1,000 ரூபாயும்; இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப் படியாக 750 ரூபாயும்; எடையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாதம் 500 ரூபாயும், இதர பகுதிகளில் மாதம் 250 ரூபாயும் வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

மருத்துவ காப்பீட்டுத்திட்டம்:

மேலும் இப்பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல அகவிலைப்படி வழங்கிடவும், அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதத் தொகை ஆண்டு ஊதிய உயர்வாக அளித்திடவும், 15 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு, முறையே தேர்வுநிலையில் ஊதிய உயர்வு அளித்து ஊதியம் நிர்ணயம் செய்திடவும், அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம், வீட்டு வாடகைப் படியாகவும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நகர ஈட்டுப்படியாக அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும், இதர மாநகராட்சிப் பகுதிகளில் 4 சதவீதமும் நகர ஈட்டுப்படியாக வழங்கிடவும், இத்துடன், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் - உயரிய மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தியும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

30000 பேருக்கு பயன்:

இந்த ஆணையின்படி திருத்தப்பட்ட ஊதியங்களை 1.1.2010 முதல் நடைமுறைப்படுத்தி, அதன் பணப்பயன் 1.1.2011 முதல் வழங்கப்படும். இதன்மூலம் 30,000 விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் பயன்பெறுவார்கள்.

-இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu chief minister M Karunanidhi ordered for a hike in the salary of more than 30000 ration shop employees allover the state w.e.f 1.1.2010.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X