For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமச்சீர் கல்விக் குழுவை கலைக்க தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சமச்சீர் கல்விக்கு எதிரான குழுவைக் கலைத்து விட்டு புதிய குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆட்சிக்கு வந்தவுடனேயே சமச்சீர்க்கல்வித் திட்டத்தைக் கைகழுவ முனைப்புக் காட்டினார் முதல்வர் செயலலிதா. தி.மு.க ஆட்சியில் சமச்சீர்க் கல்வியைச் செயல்படுத்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாததாக்கும் வகையில், சட்டப்பேரவையில் புதிய திருத்தம் ஒன்றை நிறைவேற்றினார். அத்திருத்ததிற்கு இடைக்காலத் தடை வழங்கி, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை இவ்வாண்டு செயல்படுத்துமாறு 10.6.2011 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் செயலலிதா. உச்ச நீதிமன்றம் 14.6.2011 அன்று அளித்த இடைக்கால ஆணையில் தமிழக அரசுத் தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்து, அக்குழுவின் பரிந்துரையை சென்னை உயர் நீதி மன்றத்தில் அளிக்குமாறும், அதன் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி செயல்படுமாறும் கூறியிருந்தது.

இதற்காக 17.6.2011 அன்று செல்வி செயலலிதா தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் அமைத்த குழுவில் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகளான சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த விசயலட்சுமி சீனிவாசன், சென்னை டி.ஏ.வி. மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த சி. ஜெயதேவ் ஆகியோரைச் சேர்த்துள்ளார். அத்துடன் சமச்சீர்க் கல்வியில் எவ்வகைத் தொடர்புமில்லாத சி.பி.எஸ்.இ. பிரிவைச் சேர்ந்த சென்னை பத்மா சேசாத்திரி பள்ளிகளின் நிர்வாகியான ராஜேஸ்வரி பார்த்தசாரதியை இக்குழுவில் சேர்த்துள்ளார்.

மற்றொருவர் நடுவண் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) முன்னாள் இயக்குநர் ஜி. பாலசுப்பிரமணியன் ஆவார். இன்னும் இருவர் நடுவண் அரசின் உயர் கல்விக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பி. திரிபாதி, அனில் சேத்தி ஆகியோர். அடுத்தவர் தமிழகப்பள்ளிக் கல்வி செயலாளர் டி. சபீதா. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆவார். சாரங்கி உள்ளிட்ட இம் மூவரும் செயலலிதாவின் கீழ் பணியாற்றுவோர் ஆவர்.

இக்குழுவில் தமிழக அரசின் பள்ளிகள் சார்பாக ஆசிரியர் யாரும் சேர்க்கப்படவில்லை.

சமச்சீர்க் கல்விக்கு எதிராகப் பரிந்துரை பெறுவதற்காகத் திட்டமிட்டு இக்குழுவை அமைத்துள்ளார் செயலலிதா.

தமிழகக் கல்வி வளர்ச்சியிலும், மாணவ்ர் நலனிலும், சமூக நீதியிலும் அக்கறையுள்ள மக்கள் இக்குழுவை ஏற்க மாட்டார்கள்.

தமிழக முதல்வர் இக்குழுவைக் கலைத்து விட்டு, இலாப நோக்கில்லாத கல்வியாளர் களையும், தமிழக அரசுப் பள்ளிகள் சார்பாக பிரதிநிதிகளையும் சேர்த்து புதிதாகக் குழு அமைக்குமாறு தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Desiya Poduvudamai Party general secretary P.Maniarasan has asked the TN govt to dissolve the panel on USE. He said in a statement that, this panel does not have a single educationist. So TN govt should dissolve the panel and form a new one, he requested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X