• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜேபிசி தலைவர் சாக்கோவை நீக்க திமுக கோரிக்கை.. சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ்!

By Chakra
Google Oneindia Tamil News

PC Chacho with Sonia
சென்னை & டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் திமுக தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தான் எல்லா தவறுகளையும் செய்தார், இதில் பிரதமருக்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் எதுவுமே தெரியாது என்று தன்னிச்சையாக அறிக்கை தந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) தலைவரும் காங்கிரஸ் மூத்த எம்பியுமான பி.சி.சாக்கோவை ஜேபிசி தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீல் திமுக முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் காங்கிரசுடன் அடுத்தகட்ட மோதலுக்கு திமுக தயாராகி வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இது குறித்து திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அடங்கிய தொலைத் தொடர்புத்துறைக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது.

இதன் தலைவராக உள்ள கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சாக்கோவின் செயல்பாடுகள் ஆரம்பம் முதலே விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

2ஜி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்டே எல்லாம் செய்தேன் என்று ஆ.ராசா கூறி வருவதோடு, இந்த விவகாரத்தில் ஜேபிசி முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.

ஆனால், மடியில் கனம் இருப்பதால் அச்சத்தில் உள்ள காங்கிரஸ் இதைத் தவிர்த்து வருகிறது. ராசாவை நேரில் அழைத்து விசாரிக்காமல் ஒரு கேள்விப் பட்டியலை மட்டும் அனுப்பி விடைகளைக் கேட்டார் சாக்கோ.

இதை திமுக கடுமையாக எதிர்த்தது. ராசாவை நேரில் அழைத்து விசாரித்தால் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் மீது புகார் சொல்லிவிடுவார் என்பதால் காங்கிரஸ் அதைத் தவிர்த்துவிட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் மற்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தானாகவே ஒரு வரைவு அறிக்கையையும் வெளியிட்டுவிட்டார் சாக்கோ. அதில் முழுக்க முழுக்க ராசா மீது எல்லா தவறும் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை தயாரிக்கும் முன் ஜேபிசியில் உள்ள பிற கட்சிகளுடன் அவர் ஆலோசிக்கவில்லை.

இந் நிலையில் சாக்கோவை ஜேபிசி தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கோரி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்படவுள்ளது. இன்று தொடங்கும் நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை சபாநாயகர் மீரா குமாரிடம் திமுக இந்த உரிமை மீறல் நோட்டீஸைத் தரவுள்ளது.

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், ஜேபிசி முன் ராசா ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும். இல்லாவிட்டால் உண்மை மறைக்கப்பட்டுவிடும். இந்த விவகாரத்தில் சாக்கோவின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை. அவர் நிறைய உண்மைகளை மூடி மறைக்க முயல்வதாகத் தெரிகிறது. இதனால் அவரை நீக்கக் கோரி உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகரிடம் தருவோம். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் கிளப்புவோம்.

மேலும் இது தொடர்பாக ஜேபிசியின் வரைவு அறிக்கையை லீக் செய்துள்ளனர். ஜேபிசியில் உள்ள உறுப்பினர்களுக்குக் கூட கிடைக்கும் முன் அதை லீக் செய்துள்ளனர். இதனால் சாக்கோவின் செயல்பாடுகள் பல சந்தேகங்களைக் கிளப்புவதால் உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வரப் போகிறோம் என்றார்.

பாஜகவும் கிடுக்கிப்படி:

மேலும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில், பி.சி. சாக்கோ தயாரித்துள்ள அறிக்கையில் 2ஜி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்றபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 48,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரின் பெயரையும் இந்த விவகாரத்தில் ஜேபிசி தலைவர் சேர்த்துவிட்டுள்ளார்.

அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்ற நற்பெயரை பெற்றுள்ள வாஜ்பாய் மீது களங்கம் கற்பிக்க நினைத்தால் பாஜக சும்மாயிருக்காது. இந்த அறிக்கை குறித்து கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுடன் சாக்கோ கலந்தாலோசிக்கவில்லை.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தன்னை ஜேபிசி முன்பு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை சாக்கோ நிராகரித்துவிட்டார்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன், நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று ஜேபிசி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதையும் கண்டுகொள்ளாமல் இருவருக்கும் வரைவு அறிக்கையில் நற்சான்று வழங்கியுள்ளார் சாக்கோ. அவரை சும்மா விடமாட்டோம் என்றார்.

English summary
The DMK decided to have another pow-wow with the UPA government saying it will approach Lok Sabha Speaker Meira Kumar and demand the removal of Congress leader PC Chacko as chairman of the Joint Parliamentary Committee on telecom. The party condemned the JPC draft report on the 2G spectrum allocation controversy and demanded its withdrawal, according to DMK parliamentary party leader T R Baalu, on the eve of the second phase of the budget session. "Raja should be allowed to depose before JPC. Until he is allowed to depose, the truth will not come out. We are not satisfied with the way the committee chairman has acted so far. There is no truth in the draft report. The real truth will come out in the final report with Raja's deposition. We will raise the issue in Parliament on Monday and approach the Speaker in this regard," Baalu said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X