For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானாமதுரை மக்கள் நல்லவர்கள்… டி.எஸ்.பி. வெள்ளைத்துரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Velladurai
-ஜெயலட்சுமி

மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளைத்துரையின் விசாரணையே தனி ஸ்டைல்தான். குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் மட்டுமல்லாது. குடும்ப பிரச்சினை, நிலமோசடி பிரச்சினைகளுக்காகவும் ஏராளமானோர் அவரை அணுகிவருகின்றனர்.

பிரச்சினை என்று அவரிடம் போகிறவர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு நிச்சயம் என்பதால் தினசரி கூட்டம் படையெடுக்கிறதாம்.

எஸ்.ஐ ஆல்வின்சுதன் கொலைக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறை, மானாமதுரை சுற்றுவட்டார பகுதி மக்களின் தூக்கத்தை கெடுத்தது. தினந்தோறும் ஏதாவது பிரச்சினையை முன்வைத்து நடக்கும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரகளை என அதகளப்பட்டுக் கிடந்தது.

எஸ்.ஐ. கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டாலும் அமைதி திரும்பிய நிலை இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் மானாமதுரை வட்ட டி.எஸ்.பியாக நவம்பரில் பொறுப்பேற்றார் வெள்ளைத்துரை.

பிரபு, பாரதி ஆகியோரின் என்கவுண்டர் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியதோடு, நிலப்பிரச்சினை, குடும்பப்பிரச்சினைகளையும் தீர்த்துவைத்து அமைதிப்பூங்காவாக மாற்றியிருக்கிறார்.

சாலைமறியல், சாதிச் சண்டை, உண்ணாவிரதம், போராட்டம் என எதுவுமே இவரது எல்லைக்குள் நடக்கவில்லை. இதற்கு பாராட்டி மக்கள் போஸ்டர் அடித்து வாழ்த்தியிருக்கின்றனர். ஞாயிறன்று காலை நேரத்தில் அவரை பேசியில் தொடர்பு கொண்டோம். சந்தோசமாக பேட்டிக்கு சம்மதித்தார்.

மானாமதுரை இப்போ எப்படி இருக்கு?

இப்பதான் ரொம்ப அமைதியா இருக்கு எந்த பிரச்சினையும். ரவுடிகள் நடமாட்டத்தை சுத்தமாக ஒழித்துவிட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஸ்டேசனுக்கு உங்களைத் தேடி அதிக அளவில் கூட்டம் வருதாமே?

கோர்ட்டுக்குப் போய் பணம் செலவு செய்யமுடியாத ஏழைகள் என்னைத் தேடி வருகின்றனர். நிலத்தை ஏமாந்தவர்கள், கணவனால் துன்பத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு என்னால் ஆன தீர்வுகளை சொல்கிறேன். பிரிய நினைத்த கணவன் மனைவியைக் கூட சேர்த்து வைத்திருக்கிறேன். நிலங்களை இழந்தவர்களுக்கு அவர்களுக்காக இடத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

உங்களின் நடவடிக்கைக்கு மக்களின் சப்போர்ட் எப்படி இருக்கு?

மக்கள் ரொம்ப நல்லவங்க. ஒருசிலர்தான் அவர்களை தூண்டிவிடுறாங்க. இப்ப எல்லா சாதி சங்க பலகைகளையும் எடுக்கச் சொல்லிட்டேன். சாதியை குறிப்பிடும் படியாக இருந்த தெருவின் பெயரைக்கூட மாற்றியிருக்கிறார்கள். மக்கள் இப்பொழுது ரொம்ப அமைதியா இருக்காங்க.

போலீஸ் ஸ்டேசன்ல பிரச்சினையை தீர்ப்பதால கட்டப்பஞ்சாயத்து பண்றதா சொல்ல மாட்டாங்களா?

காசு வாங்கிட்டு செய்தால்தான் அது கட்டப் பஞ்சாயத்து. நான் பணம் செலவழிக்க முடியாத ஏழைகளின் பிரச்சினைகளைத்தான் தீர்த்து வைக்கிறேன்.

உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கா? புராண கதைகளை நிறைய உதாரணமாக சொல்றீங்களாமே?

கடவுள் நம்பிக்கை இருக்கு. மதுரையில மீனாட்சி அம்மான் கோவிலுக்கு போவேன். அதற்காக கண்மூடித்தனமாக மூடநம்பிக்கை கிடையாது. புராணங்களுக்கு வாழ்க்கையோடு தொடர்பு இருக்கு. நான் படித்தவைகளை மக்களுக்கு சொல்கிறேன்.

பழைய செல் நம்பரை ஏன் மாற்றினீர்கள்? ஏதாவது விசேசமான காரணம் இருக்கா என்ன?

அதெல்லாம் ஒன்னுமில்லை. 666 என்ற நம்பர் வேண்டாமே என்று நிறைய பேர் சொன்னார்கள், அதனால் 8888 வரும்படியாக வைத்திருக்கிறேன்.

உங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறீர்களா?

இதுவரைக்கும் எந்த நெருக்கடிக்கும் ஆளானதில்லை. டிரான்ஸ்பர் போன்ற அச்சுறுத்தல்கள் எனக்கு வந்ததில்லை. நான் செய்வது சரி என்று எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

உயரதிகாரிகளின் சப்போர்ட் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

எனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் அனைவருமே எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். என்னுடைய நடவடிக்கைக்கள் மக்களுக்கு நன்மை தரக்கூடியதாகத்தான் இருக்கிறது என்று அவர்களும் என்னை பாராட்டியிருக்கின்றனர். அதனால்தான் அதிரடியாக சில முடிவுகளை எடுக்க முடிகிறது என்றார். டி.எஸ்.பி ரவுண்ட்ஸ் கிளம்பும் நேரம் என்பதால் நன்றி கூறி நாமும் விடைபெற்றோம்.

English summary
Here is an interview of DSP Velladurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X