“ரெட் அலர்ட்”.. பாதுகாப்பு சான்று “லீக்” - 10 லட்சம் ஆண்டிராய்டு போன்களுக்கு "ரிஸ்க்”! வைரஸ் அபாயம்
சென்னை: உலகின் அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களை வைரஸ்கள் மூலம் ஹேக்கர்கள் முடக்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு சான்றிதழ் கசிவு காரணமாக சாம்சங், எல்ஜி ஸ்மார்போன்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டிராய்டு செல்போனை உற்பத்தி செய்த நிறுவனங்களின் பாதுகாப்பு சான்றிதழ்கள் இணையதளத்தில் கசிந்துவிட்டதாக கூகுள் நிறுவனத்தின் ஊழியர் லுகாஷ் சைவெர்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.
இந்த பாதுகாப்பு சான்றிதழ்கள் கசிந்ததன் காரணமாக அந்த ஸ்மார்ட் போன்களை ஹேக்கர்கள் முடக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் ஸ்மார்ட் போன்களில் வைரஸ்களை பதிவேற்றி முடக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஹேக்கர்கள் அபாயம்
இந்த பாதுகாப்பு சான்றிதழில் இடம்பெற்று உள்ள சைன் இன் கீ மூலமாக ஹேக்கர்கள் எளிதில் செல்போன்களை முடக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆண்டிராய்டின் நிறுவனமான கூகுள், செல்போன் நிறுவனம், செயலியை உருவாக்கிய நிறுவனங்களின் அனுமதி இன்றி ஹேக்கர்கள் ஸ்மார்ட்போனுக்குள் ஊடுருவ முடியும்.

வைரஸ் தாக்கலாம்
குறிப்பாக கூகுள் அல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது வைரஸ்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக சாம்சங் மற்றும் எல்ஜி ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்கள் முடக்கப்படலாம் என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

எப்போது தாக்கும்?
இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி மீடியாடெக் சிப்களை கொண்டு இயங்கும் பிற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த வைரஸ் அச்சுறுத்தல் இருக்கிறது. ஆண்டிராய்டு இயங்குதளத்தின் சைன் இன் நேரத்தில் ஹேக்கர்கள் செல்போன்களில் வைரஸ்களை பதிவேற்றி முடக்கலாம் என்று கூறப்படுகிறது.

சைன் இன் கீ
பல நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயலிகளை கொண்டதே ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோர். இதிலிருந்துதான் செயலிகளை மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளை உருவாக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் சைன் இன் கீ என்பது வழங்கப்படும்.

அப்டேட்
தற்போது கசிந்துள்ள பாதுகாப்பு சான்றிதழ்களில் இந்த சைன் இன் கீயும் அடங்கும். ஒவ்வொரு முறை செயலியை நிறுவனங்கள் அப்டேட் செய்யும்போது இந்த கீயைதான் அவர்கள் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் செயலிகளை அப்டேட் செய்யும்போதும் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்கலாம்.

நிறுவனங்கள் புகார்
இது தொடர்பாக ஆண்டிராய்டு பாதுகாப்பு குழுவினர் ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனங்கள் தற்போது வைத்திருக்கும் வெளிப்படையான, ரகசியமான கீஸ்களை மாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இந்த பாதுகாப்பு சான்றிதழ்கள் கசிந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இதர நிறுவனங்கள்
இந்த வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் அந்த அப்டேட் பயனர்களுக்கு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீடியா டெக் சிப்களை பொறுத்தவரை சீன நிறுவனங்களான எம்.ஐ., ரெட் மீ, ரியல் மீ, ஓப்போ, போகோ, விவோ போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த நிறுவனங்களும் ஹேக்கர்களின் இந்த தாக்குதலில் சிக்குவதற்கான அபாயம் உள்ளது.