உட்கட்சித் தேர்தல்... எந்த கோஷ்டிக்கு எத்தனை சதவீதம்? அதிமுகவில் புதியதாக வெடித்த பஞ்சாயத்து!
சென்னை: அதிமுகவில் உட்கட்சித் தேர்தலில் எந்த அணிக்கு எத்தனை சதவீதம் இடங்களை ஒதுக்குவது? மாவட்ட செயலாளர்கள், மாஜி அமைச்சர்களுக்கு எத்தனை சதவீத இடங்கள் தருவது? என்கிற பஞ்சாயத்துதான் அதிமுகவில் இப்போது பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 7-ந் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும்; உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியின்றி ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

கிளை கழகம் முதல் மாநகராட்சி வார்டுகள் வரை
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் கிளைக்கழகம் உள்ளிட்ட உட்கட்சித் தேர்தல் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 13,14; 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 22, 23 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. கிளைக் கழகச் செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள், பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள், நகர வார்டு கழக செயலாளர், செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள், மாநகராட்சி வட்டக் கழக செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

ஓபிஎஸ் யோசனை
இந்த தேர்தலில் தங்களின் ஆதரவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அதனால், அந்த பதவிகளில் 50: 50 என்கிற சதவீத கணக்கில் பிரிக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், எப்போதும் போல இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் எடப்பாடி. அதாவது, 70: 30 என்கிற சதவீதத்தில் பதவிகள் பிரிக்கப்பட்டு அதில் அவரவர்களின் ஆதரவாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என சொன்னாராம் எடப்பாடி.

மாஜி அமைச்சர்கள், மா.செக்கள் போர்க்கொடி
ஆனால், இதனை ஓபிஎஸ் ஏற்காததால் கடந்த 3 நாட்களாக அதிமுகவின் மேல் மட்டத்தில் பஞ்சாயத்து நடக்கிறது. இது ஒருபுறமிருக்க, நீங்க ரெண்டு பேரும் 50 க்கு 50 என கணக்குப் போட்டால், நாங்க எங்கே போறது என மாஜி அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். அப்போது, அந்த அந்த மாவட்டத்தில் நடக்கும் உள் கட்சி தேர்தலில் நாங்கள்தான் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்போம். இதில் தலைமை தலையிடாமல் இருப்பது நல்லது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
Recommended Video

உள்ளடி நடக்குமோ?
அத்துடன் மாவட்டத்தில் நாங்கள் தானே உழைக்க வேண்டியது இருக்கிறது என்கிற ரீதியில் பெரும்பாலான மாஜிக்களும், மா.செ.க்களும் அலப்பறையை கூட்டியிருக்கிறார்கள். இதனையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பதவிகளில், அந்த மாவட்ட மாஜி அல்லது மா.செ.வுக்கு 40 சதவீதம் என்றும், மீதமுள்ள 60 சதவீதத்தில் ஓபிஎஸ்சுக்கு 30%, இபிஎஸ்சுக்கு 30% என்றும் பிரித்துக் கொள்ளலாம் என எடப்பாடி ஆதரவாளர் ஒருவர் யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த கணக்குகள் தான் தற்போது அதிமுக மேல் மட்டத்தில் ரகசியமாக விவாதிக்கப்பட்டு வருகிறதாம். இதனை மாஜிக்களும் மா.செ.க்களும் ஏற்பார்களா? அல்லது உள்கட்சி தேர்தலில் உள்ளடிகள் நடக்குமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications