டிசம்பர் 8 முதல் 11 வரை பள்ளிகளுக்கு விடுமுறை? மாண்டஸ் புயலின் பயோடேட்டாவை புட்டு வைத்த வெதர்மேன்
சென்னை: மாண்டஸ் புயலால் தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிக்குள் ஒன்று அல்லது இரு நாட்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் பிறகு டிசம்பர் 7ஆம் தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக கடலோரத்தில் புயலாக மாறும். இந்த வடகிழக்கு பருவமழை சீசனின் முதல் புயல் இதுவாகும். இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 3% குறைவு..டிச.8க்கு மேல் அதி கனமழை ஆட்டம் ஆரம்பம்

ஐக்கிய அரபு நாடுகள்
இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரை செய்தது. உலக வானிலை மையத்தின் தலைவராக உள்ள அப்துல்லா அகமது அல் மாண்டஸ் அந்த நாட்டை சேர்ந்தவர். வானிலையியலில் பிஎச்டி முடித்துள்ள அவரை கவுரவிக்கும் விதமாக இந்த பெயரை அந்த நாடு வைத்துள்ளது. கடந்த முறை போல் காற்றழுத்தமாகவே கரையில் காணாமல் போகாது.

நிச்சயம் புயல்
இந்த முறை நிச்சயம் புயலாக மாறி மழையை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதி கனமழை
அது போல் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மாண்டஸ் புயல் கவ்வும் இடம் வடதமிழக கடலோரத்தில் அதாவது கடலூர் டூ பழவேற்காடு இடையே.

மழை பெய்யாமல் இருக்க வாய்ப்பிருக்கா
நாகை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லூர் வரை மழை பெய்யும். மழை பெய்யாமல் இருக்கும் வாய்ப்பு 1 முதல் 10 சதவீதம் மட்டுமே உள்ளது. வடதமிழக கடலோரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்க 80 முதல் 90 சதவீதம் வரை வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் ஸ்ஸ்ஸ் முதல் உஸ்உஸ்உஸ்ஸ்ஸ்ஸ்ஸ என வீசும். அதற்காக தானே அல்லது வர்தா அல்லது கஜா புயல் ரேஞ்சுக்கு இப்போதைக்கு கம்பேர் செய்து கொள்ள வேண்டாம்.

நிவர் புயல் போல் காற்று
நிவர் புயல் போல் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மாண்டஸ் புயலின் எதிரிகள் - கரை பக்கத்தில் வறண்ட காற்று மற்றும் அதிக காற்றின் வேகம். ஆனால் நடு கடலில் மட்டும் மாண்டஸுக்கு எதிரிகளே இல்லை. நண்பர்கள் யார் என்றால் எம்ஜேஓ மற்றும் கடல் வெப்ப நிலை ஆகியவைதான். டெல்டா அருகே மாண்டஸ் கரையை கடக்க வாய்ப்பு குறைவு. இந்த புயல் ஆக்டிவ்வாக இருக்கும் தேதி டிசம்பர் 8 முதல் 11 வரை. இந்த மூன்று நாட்களில் ஒன்று அல்லது இரு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறைக்கு வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

குளிர்ந்த காற்று
பெரும்பாலான இடங்களில் அதாவது கடலோர பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. நாகை முதல் கடலூர் வரை காற்றழுத்தத்தின் வேலையை கடும் குளிர் மூலம் காட்டத் தொடங்கியுள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த முறையை போல் இந்த முறை புயல் புஸ்வானம் ஆகிவிடாது என்பதையும் தமிழ்நாடு வெதர்மேன் தெளிவாக கூறியுள்ளார்.