சோனியாவிடம் விசாரணை.. தமிழகத்தை போல் டெல்லியில் பறந்த கருப்பு பலூன்கள்.. காங்கிரஸ் நூதன எதிர்ப்பு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்றும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நூதனமான முறையில் இன்று கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பை காட்டினர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக்கோரி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கபிரிவு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு மூலம் மத்திய பாஜக அரசு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை பழிவாங்குகிறது என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சோனியா காந்திக்கு சம்மன்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு கடந்த மாதம் விசாரணையில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. கொரோனாவில் இருந்து சோனியா காந்தி குணமடைந்த நிலையில் ஜூலை 21ல் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜரானார். 3 மணிநேரம் விசாரணை நடந்தது. இதையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு சம்மன் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்
இந்த வழக்கில் கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 2வது நாள் விசாரணைக்காக சோனியா காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் விசாரிக்க காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகும்போது டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பறந்த கருப்பு பலூன்கள்
அதன்படி இன்று சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரஹ போராட்டத்தை துவங்கி உள்ளனர். ராஜ்காட்டில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிற இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் திமுக சார்பில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு அமலாக்கப்பிரிவுக்கு காங்கிரஸ் மகளிர் அணியினர் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அமலாக்கப்பிரிவு மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

சோனியா 2வது முறையாக ஆஜர்
இதற்கிடையே 2வது முறையாக சோனியா காந்தி இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக டெல்லி வீட்டில் இருந்து புறப்பட்ட சோனியா காந்தியுடன் காரில் அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications