
குஜராத்தில் “திக்திக்”.. பாஜகவினர் கொல்ல வந்தாங்க! 15 கிமீ ஓடி காட்டில் உள்ளேன் -காங்கிரஸ் எம்எல்ஏ
காந்திநகர்: குஜராத்தில் பாஜக வேட்பாளருடன் சேர்ந்துகொண்ட அக்கட்சியினர் தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் நள்ளிரவில் விரட்டி வந்ததாகவும், உயிரை காப்பாற்ற 15 கிலோ மீட்டர் ஓடியதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு புகாரை தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் கண்டி கராதி. பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த இவர் வடக்கு குஜராத்தின் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள டண்டா தனித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் லது பார்கி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பாஜக வேட்பாளரால் தான் தாக்கப்பட்டதாக கண்டி கராதி தெரிவித்து உள்ளார்.
குஜராத்தில் கடைசி கட்ட தேர்தல்.. நேருக்கு நேர் மோதல்.. இந்த தொகுதிகள் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

காங்கிரஸ் எம்.எல்.ஏ
இதுகுறித்து பேசிய அவர், "வாக்காளர்களை சந்திப்பதற்காக நான் சென்றுகொண்டு இருந்தேன். அப்போது பாஜக வேட்பாளர் லது பார்ஜி, எல்.கே. பராத் மற்றும் அவரது சகோதரர் வதான் ஜியுடன் அங்கு வந்து என்னை கொடூரமாக தாக்கினார். அவர்கள் பயங்கர ஆயுதங்களை அங்கு கொண்டு வந்தனர்.

கொடூர தாக்குதல்
அவர்கள் வைத்திருந்த வாள்களை கொண்டு என்னை கொடூரமாக தாக்கினார்கள். எங்கள் வாகனங்கள் பமோதரா 4 வழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது பாஜக வேட்பாளர் லது பார்கி தனது ஆட்களுடன் வந்து எங்களை வழி மறித்தார். இதனால் பிரச்சனை வேண்டாம் என்று நாங்கள் திரும்பிச் செல்ல முயன்றோம்.

தப்பிச்செல்ல முயற்சி
அப்போது பாஜக வேட்பாளரின் ஆட்களில் மேலும் பலர் அப்பகுதிக்கு வந்து எங்களை சுற்றி வளைத்தனர். அனைவரும் கும்பலாக சேர்ந்து எங்கள் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்தினர். என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமான ஒன்று. தேர்தல் நடைபெறும் எனது பகுதிக்கே நான் சென்றேன். அங்கு நிலைமை சரியில்லாததை உணர்ந்த நான் தப்பித்து செல்ல முயன்றேன்.

கொலை முயற்சி
எனவே எனது காரை எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டேன். அப்போது சில கார்கள் எனது காரை விரட்டி வந்தன. பாஜக வேட்பாளர் லது பார்கி 2 நபர்களுடன் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வாள்களுடன் எங்களை கொலை செய்ய வந்தார். எனவே அங்கிருந்து தப்பிக்க முயன்று, 10 முதல் 15 கிலோமீட்டர் தூரம் வரை தப்பித்து ஓடினோம். 2 மணி நேரம் அவர்கள் எங்களை விரட்டி வந்தார்கள். தற்போது காட்டிற்குள் உள்ளோம்.

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு
4 நாட்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போதே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இருக்காது. பாஜக வேட்பாளர் இப்பகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே மிரட்டினர்." என்று கூறி இருக்கிறார்.

ஜிக்னேஷ் மேவானி
இதுவரை கராதி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி தெரிவித்து உள்ளார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு முதல்நாள் இரவு பாஜக குண்டர்கள் காங்கிரஸ் வேட்பாளர் கராதியை தாக்கி இருக்கிறார்கள். இதுதான் சுதந்திரமாகவும், தூய்மையாகவும் தேர்தல் நடத்தும் முறையா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.