For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், திருமணமாகாமல் பிறந்த குழந்தை...நான் வாழத்துணிந்தது எப்படி?’ #HerChoice

By BBC News தமிழ்
|

ஓர் உறவு முறிந்த பிறகு, அந்த உறவின் மூலம் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவள் என்ன முடிவெடுப்பாள்? உடைந்து போவாளா அல்லது தைரியமாக முடிவெடுப்பாளா? அவளை இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்?

#HerChoice
BBC
#HerChoice

நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

"நாங்கள் காதலில் மயங்கியபோது அவர் என்னோட நாட்டைச் சேர்ந்தவரா, என்னோட சாதியையோ, என்னோட மதத்தையோ சேர்ந்தவரா என்ற உண்மை எல்லாமே எனக்குத் தெரியும். ஆனா அதைப் பற்றிக் கவலைப்படல. எங்களோட லிவ்-இன் உறவு முறிந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, அவரோட குழந்தையை நான் என் வயித்துல சுமக்கத் துவங்கினேன்; ஆமாம், நான் கர்ப்பமாக இருந்தேன்.

என்னோட தோழிகள், நான் பைத்தியமாயிட்டேன்னு நெனச்சாங்க...திருமணமாகாத 21 வயது பெண்ணான நான் எனது வயித்துல வளர்ற குழந்தை எனக்கு வேணும்னு நினைச்சேன்.

நான் எனது அறிவை இழந்துட்டு வர்ற மாதிரி உணர்ந்தேன். ஏதோ தப்பு நடக்கபோவதாக எனது உள்மனசு சொன்னது. ஆனா, உண்மையிலயே எனக்கு நடந்ததைவிடவா மோசமான ஒன்று நடக்கமுடியும்?

நான் முஸ்தஃபாவை சந்தித்தபோது என்னோட வயசு 19. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து அழைப்பு மையம் ஒன்றில் வேலைல சேருவதற்காக ஒரு பெரிய நகரத்துல நான் அப்பத்தான் குடியேறினேன்.

முஸ்தஃபா ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆப்ரிக்கர்களுக்கே உரித்தான, உயரமான, கருப்பு நிறம். களையான தோற்றம் கொண்டவர். பிறகு என்ன, சொல்லணுங்கற அவசியமே இல்லை. அவர் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டார்.

நாங்கள் நண்பர்களானோம்; உருகினோம். இறுதியில் காதலிக்கத் தொடங்கினோம். விரைவில் ஒன்றாக வாழவும் ஆரம்பிச்சோம்.

நான் ஒரு கிறிஸ்தவப் பெண். அவர் இஸ்லாமியர். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிச்சோம், ஆனா திருமணம் செய்துக்கலாம்னு நினைக்கக்கூட எங்களுக்கு தைரியமில்லை. நாங்கள் எங்களது கனவுலகத்தில் எங்கள் எதிர்காலம் குறித்து சிந்தித்து, திட்டமிடுவதுகூட நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தாதது போலவே தோன்றியது.உறவைக்குலைத்த சந்தேகம்

அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க. எங்களை அடிக்கடி வந்து சந்திப்பார்கள்; காலம் போகப்போக நானும் அவர்களுடனும் நட்பு கொண்டேன்.

சில காரணங்களால் முஸ்தஃபா என்மேல சந்தேகப்பட ஆரம்பிச்சார். அவரது நண்பர்களில் யாரோ ஒருத்தரோட நான் உறவு வெச்சிருக்கறதா நெனச்சாரு. இதனால எங்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள்.

#HerChoice
BBC
#HerChoice

மெல்ல மெல்ல அது வெறுப்பா மாறிடுச்சு; தினமும் கூச்சல்... வாக்குவாதம்... ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்துவது என எங்களது நாட்கள் கசப்பாக நகர்ந்தது. இறுதியாக நாங்கள் பிரிஞ்சுடலாம்னு முடிவெடுத்தோம்.

அந்த நேரம் ரொம்ப மோசமான காலகட்டம். நான் பல மணி நேரம் தொடர்ந்து அழுவேன்; அது எனது வேலையையும் பாதித்தது; இதனால் இருந்த வேலையும் போயிடுச்சு.

எனது சொந்த கிராமத்துக்கே திரும்பிப் போயிடலாம்னு முடிவெடுத்தேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த சின்ன வீட்டை விட்டும் அது தொடர்பான நினைவுகளை விட்டும் நான் வெளியேற விரும்பினேன்;

ஆனா, எனது மாதவிடாய் தள்ளிபோனதும் எனது எல்லா திட்டமும் வீணாப் போயிடுச்சு. அருகில் உள்ள கடை ஒன்றில் கர்ப்ப பரிசோதனை பெட்டியை வாங்கி வந்தேன்; பயந்தது நிஜமாயிடுச்சு. நான் கருவுற்றிருப்பது உறுதியானது. முஸ்தஃபாவால் நான் கருவுறுவது இது இரண்டாவது முறை. முதல் முறை அவர் கட்டாயப்படுத்துனதால நான் கருவைக் கலைத்தேன். ஆனால் இந்த முறை என்னால் நிச்சயம் முடியாது.

நான் முஸ்தஃபாவை தொடர்புகொண்டு என்னை வந்து சந்திக்கும்படி கேட்டேன். நேருக்குநேர் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்; நான் கருவுற்றிருப்பதை அவர்கிட்ட சொன்னேன்.

ஏன் கவனமாக இல்லைனு என்னை அதட்டினார்; கருவைக் கலைக்க நூற்றுக்கணக்கான நியாயங்களைச் சொன்னார்.

'இது என்னுடைய குழந்தைதான்னு நான் எப்படி நம்பறது?' என்று கேட்டார். ஆனா நான் உறுதியா இருந்தேன்; என்னுடைய முதல் குழந்தையை கருவிலேயே கலைத்தபோது, கொலை செய்ததைப் போல் இருந்தது. எனது இரண்டாவது குழந்தையையும் கொல்ற அளவுக்கு எனக்கு துணிச்சல் இல்லை.

என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனக்கு திருமணமாகவில்லை. நல்ல வேலைகூட இல்லை. எல்லாத்துக்கும் மேல, எனது குழந்தையின் தந்தையும் அதைத் தன்னுடையதாக ஏற்கத் தயாரில்லை.

இப்படி இடிமேல இடி விழுந்தாக்கூட என் மனசுல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. கடவுள் எனக்கு புது வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்னு தோனுச்சு...

இப்போதுவரை என்னை கவனிக்க என்மீது அக்கறை காட்டறதுக்குனு யாருமில்லை. என் குழந்தையை என்னால நன்றாக வளர்க்கமுடியுமானு எல்லாரும் சந்தேகத்தோடு கேட்டாங்க.

நான் முன்னேறிச் செல்லவேண்டிய பாதை அவ்வளவு சுலபமானது இல்லைங்கறது எனக்குத் தெரியும். ஆனா இப்போ நான் பொறுப்பாக வாழறதுக்கு ஒரு காரணம் இருக்கு.

வயிற்றில் இருக்கும் என்னோட குழந்தைமீது எனக்கு இருக்கற அதீத அன்பு அவனை பத்திரமா இந்த உலகத்துக்குக் கொண்டுவரணுங்கற உந்துதலை எனக்கு ஏற்படுத்திச்சு.

எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு. கடைசியா, தைரியத்தை வரவழைச்சுட்டு எல்லா விஷயத்தையும் என் குடும்பத்தார்கிட்ட போட்டு உடைச்சுட்டேன்.

அவருடன் எனக்கிருந்த உறவு குறித்து அவங்களுக்குத் தெரியும். ஆனா நான் கருவுற்றிருக்கிறேங்கற செய்தியைக்கேட்டு கொதிச்சுப் போயிட்டாங்க.

திருமணமாகாத தாய் என்ற எனது பட்டத்தை ஏத்துக்கறது கூட அவர்களுக்கு பெரிய கவலையா தெரியலை; ஆனா என்னோட சாதியையோ மதத்தையோ சேராத ஒரு கருப்பு நிற குழந்தைக்கு நான் தாயாகப்போறேங்கறதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்துச்சு.

எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு நான் அவங்களை சமாதானம் செஞ்சேன். ஆனா, இதப் பத்தி பேசறதை அவங்க நிறுத்தலை. இந்த கஷ்டமான நேரத்துல, என்னுடைய தோழி ஒருத்திதான் தேவதை மாதிரி எனக்கு பக்கபலமா இருந்தாள்.

மருத்துவப் பரிசோதனைகளுக்காக நான் மருத்துவமனைக்குப்போக அவள் தனது ஸ்கூட்டியை தருவாள். பிறகு, கடையொன்றில் விற்பனையாளராகவும் வேலைக்கு சேர்ந்தேன்.

இதற்கிடையில முஸ்தஃபா மீண்டும் வந்தார்; இழந்த அன்பைத் திரும்பப் பெற முயற்சி பண்ணினார். ஆனால் நான் எனது முடிவில தெளிவா இருந்தேன்.

#HerChoice
BBC
#HerChoice

நான் பிரசவித்த நாளில், எனது தோழி என்னை அதே ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனா. சிசேரியன் மூலம் எனக்கு குழந்தை பிறந்தது. மயக்கம் தெளிந்து நான் கண் விழிச்சுப் பார்த்தப்போ, எனது மகன் என் தோழியின் மடியில தூங்கிட்டிருந்தான்; டாக்டர் என் பக்கத்துல நின்னு என்னைப் பார்த்து சிரிச்சார்.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லாம் சரியாயிடும்கற நம்பிக்கை எனக்குள் முளைவிட்டது. முஸ்தஃபா அன்று மாலை மருத்துவமனைக்கு வந்தார். எங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சினார்; அவரது நண்பர்களை தொலைபேசியில் அழைச்சு, தான் ஒரு மகனுக்குத் தந்தையான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்ததும் நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். ஆனா அவரோட குடும்பத்தார் கிட்ட சொல்ற அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை. மறுபடியும் சேர்ந்து வாழலாம்கற எண்ணத்தை அவர் என்கிட்ட வெளிப்படுத்தினாரு.

எங்கள் குழந்தைக்கு ஒரு இஸ்லாமிய பெயர் வைக்கனும்னு அவர் விருப்பப்பட்டார். நான் முடியாதுனு உறுதியா மறுத்துட்டேன். அவனுக்கு ஒரு கிறிஸ்தவ பெயரைத்தான் வெச்சேன். முஸ்தஃபாவை என்னால இதுக்கு மேலயும் நம்பமுடியாது.

சில நாட்களுக்குப் பிறகு எனது தாயும் உறவினரும் என்னோட இருக்க வந்தாங்க. இதற்கு மேலும் நான் தனியாக இருக்கபோவதில்லை. அதற்கு அடுத்த ஆண்டு முஸ்தஃபா அவரோட சொந்த நாட்டுக்குப் போய்ட்டார். திரும்பவேயில்லை.

எனக்கு இப்போ 29 வயசு; என் மகனுக்கு ஆறு வயசு. நான் ஒரு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்துட்டேன், ஆனாலும்கூட எனது மகனை வளர்க்கும்போது, எனக்கு பலமும் தைரியமும் பலமடங்கு அதிகரிக்கறதை என்னால உணர முடியுது.

எனக்கு இன்னும் திருமணமாகலைங்கறதையும் எனது மகன் லிவ்-இன் உறவால் பிறந்தவன் என்பதையும் எல்லார்கிட்டயும் சொல்றதுல எனக்கு தயக்கமே இல்லை. யாராவது அவனோ அப்பாவைப் பற்றிக் கேட்டால் அவனுடைய பெயருக்குப் பின்னால் முஸ்தஃபாவின் பெயரைச் சேர்ப்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.

நான் எனது வேலை சார்ந்த குறிக்கோளை அடைய கடினமாக உழைச்சுகிட்டிருக்களதால, எனது மகன் இப்போ என் தாயாருடன் இருக்கிறான். நான் இப்போது பார்ட்டிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடிகிட்டிருக்கிறேன். எனது மகனோட வருங்காலத்துக்காக நான் இப்போதிருந்தே சேமிக்கிறேன். அவன் திறமையான உற்சாகமான சிறுவன்.

முஸ்தஃபாவுடனான என்னுடைய உறவு முற்றிலுமாக முடிஞ்சுபோச்சு. ஆனா, எப்பவுமே எனக்கு அது சிறப்பானதுதான். எப்படி வாழணும்கறதை எனக்கு கற்றுகொடுத்த உறவல்லவா அது!

இவை எல்லாத்தையும் கடந்து, ஒரு புது வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கிறேன். திரும்பவும் காதலிக்க, திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனா, எனக்கு இதுல அவசரம் இல்லை. அப்படி நடக்கனும்னு எனக்கு விதிப்பலன் இருந்தா அதுவும் நிச்சயமா நடக்கும்."

(பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி திரிபாதியால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
வயிற்றில் இருக்கும் என்னோட குழந்தைமீது எனக்கு இருக்கற அதீத அன்பு அவனை பத்திரமா இந்த உலகத்துக்குக் கொண்டுவரணுங்கற உந்துதலை எனக்கு ஏற்படுத்திச்சு. எனக்கு இன்னும் திருமணமாகலைங்கறதையும் எனது மகன் லிவ்-இன் உறவால் பிறந்தவன் என்பதையும் எல்லார்கிட்டயும் சொல்றதுல எனக்கு தயக்கமே இல்லை.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X