For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

365 கதவுகள் கொண்ட பங்களா... தினமும் ஒரு கார்...!’ - எப்படி வாழ்ந்தார் ஹாஜி மஸ்தான்?

By BBC News தமிழ்
|

ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் காலா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம். அதன் நிறைவுப் பகுதி இது.

ஹாஜி மஸ்தானுக்கும், வரதராஜ முதலியாருக்குமான நட்பு இந்த பகுதியில் விரிவாக பேசப்பட்டுள்ளது. வரதராஜ முதலியார் கதைதான் நாயகன் திரைப்படம் என்ற பேச்சு பரவலாக உள்ளது.

இரண்டு பகுதிகள் கொண்ட இந்தக் கட்டுரையின் முதல் பகுதியைப் படிக்க கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்

முந்தைய பகுதி: காலா திரைப்படமும், ஹாஜி மஸ்தானும் - சுவாரஸ்ய கதை

நாணயம்… நம்பிக்கை

மூன்று ஆண்டுகளுக்கு பின், கலீப் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஒரு காலத்தில் தங்கத்தில் புரண்ட அவரிடம், இப்போது ஒரு ரூபாய் கூட இல்லை. இனி அனைத்தும் அவ்வளவுதான். வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால், அவர் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்தது.

மஸ்தான் கலீபை, மதன்புராவில் உள்ள ஒரு குடிலுக்கு அழைத்து சென்றார். அங்கு கலீப் பார்த்த ஒரு விஷயம் அவரை ஆச்சர்யப்பட வைத்தது.

ஆம். மஸ்தான் அந்த தங்க பிஸ்கட் பெட்டியை திறந்துக் கூட பார்க்கவில்லை. அவரிடம் எப்படி கொடுத்தாரோ அது அப்படியே பாதுகாப்பாக இருந்தது.

டோங்கிரி டு துபாய் புத்தகத்தில், அதன் ஆசிரியர் எஸ். ஹுசைன் சையதி அப்போது நடந்த்தை விளக்குகிறார், ஆச்சர்யமடைந்த அந்த அரபி மஸ்தானிடம், 'இந்த இந்த தங்க பிஸ்கட்டுகளுடன் என்னை ஏமாற்றி எங்காவது தப்பி சென்று இருக்கலாம் அல்லவா? என்றார். அதற்கு மஸ்தான், 'நீ யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி தப்பி செல்லலாம். ஆனால், இறைவனை ஏமாற்றி தப்பி செல்ல முடியாது. யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதே என்று என் தந்தை என்னிடம் கூறி இருக்கிறார்' என்றார்.

இதை கேட்டதும், அந்த அரபி கலீபின் கண்கள் குளமாகின. இந்த தங்க பிஸ்கட்டுகளை விற்றது, அதில் கிடைக்கும் லாபத்தில் நீ பாதியை பெற்றுக் கொள்வாய் என்பதை உறுதி அளித்தால் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார் கலீப். அதன் பிறகு மஸ்தானும் கலீபும் கடத்தல் தொழிலில் கூட்டாளி ஆனார்கள்.

அந்த ஒற்றை தங்கப் பெட்டிதான் மஸ்தானின் வாழ்க்கையையே மாற்றியது. ஓர் இரவில் அவரை கோடீஸ்வரனாக மாற்றியது.

மஸ்தானும், அமிதாப் திரைப்படமும்

கோடீஸ்வரனாக மாறுவதற்கு முன்பே சுமைதூக்கும் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு கதாநாயகன் போலதான் இருந்தார் மஸ்தான்.

மஸ்தான் பிரபலமடைந்தது உள்ளூர் ரவுடியான ஷேர் கான் பதானை தாக்கித்தான். ஷேர் கான் பதான், துறைமுகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களின் வார அடிப்படையில் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கினார். இந்த சம்பவம், பின்னர் அமிதாப் நடித்த திரைப்படமான தீவார் திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது.

ஹுசைன் தனது புத்தகத்தில் இவ்வாறாக குறிப்பிட்டு உள்ளார், 'மஸ்தான் தைரியமாக இந்த விஷயத்தை அணுகினார். எப்படி ஒரு வெளியாள் சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் மாமூல் வசூலிக்க முடியும் என்று நினைத்தார். வழக்கமாக நீண்ட வரிசையில் நின்றுதான் ஷேர் கானுக்கு மாமூல் கொடுப்பார்கள். ஆனால், அந்த வாரம் வரிசையில் மஸ்தானும் அவரின் நண்பர்களும் நிற்கவில்லை. இதனை கவனித்த ஷேர் கான்… எங்கே அந்த பத்து பேர் என்று தேடிக் கொண்டிருக்கும் போதே…மஸ்தானும் அவரது நண்பர்களும் வந்து சரமாரியாக இரும்பு கம்பிகளை கொண்டு சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மத்தியில் கதாநாயகனாக மஸ்தான் மாறினார்.

வரதராஜ முதலியாருடனான நட்பு

ஹாஜி மஸ்தான் பம்பாய் மாநகரத்தின் பிரபலமான டானாக இருந்தாலும், அவர் துப்பாக்கியை தொட்டதே இல்லை.

அவருக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர் வரதராஜ முதலியார் மற்றும் கரீம் லாலா ஆகியோரின் உதவியைதான் எடுத்துக் கொண்டார். இவர்களும் அப்போது மும்பையில் கோலோச்சிய பிரபலமான தாதாக்கள்தான்.

வரதராஜ முதலியாரும், மஸ்தானை போல தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் மும்பையின் வர்சோவா, வசய் மற்றும் விரார் ஆகிய பகுதிகளில் பிரபலமானவராக இருந்தார்.

மஸ்தானுடன் எப்படி வரதா நட்பானார் என்பதே சுவாரஸ்யமான ஒன்று.

பிற செய்திகள்:

வரதராஜ முதலியார் ஒரு முறை துறைமுகத்தின் கஸ்டம்ஸ் பகுதியில் இருந்து ஆன்ட்டனா திருடியதாக கைது செய்யப்பட்டார். அவர் திருடிய பொருளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் மோசமான சித்தரவதையை சந்திக்க நேரிடும் என்று போலீஸார் மிரட்டினர். வரதராஜருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கவலையுடன் போலீஸ் லாக் அப்பில் அமர்ந்து இருந்தார்.

அப்போது வெள்ளை நிற ஆடை அணிந்த ஒரு உருவம் 555 சிகரெட் புகைத்துக் கொண்டே தன்னை நோக்கி வருவதை பார்த்தார். காவல் நிலையம்தான் அது. ஆனால், எந்த காவலரும் அவரை தடுக்கவில்லை. அருகே வந்தப்பின் தான் தெரிந்த்து, வந்திருப்பது ஹாஜி மஸ்தான் என்று. மும்பையின் ஒரு பெரிய டான் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மஸ்தான் வரதராஜ முதலியார் அருகே வந்து, 'வணக்கம் தலைவரே என்று தமிழில் கூறினார்.

வரதன் வியப்படைந்தார் மும்பையின் ஒரு முக்கியமான நிழலுலக தாதா தன்னை இவ்வாறாக அழைக்கிறாரே என்ற வியப்பு அவருக்கு.

மஸ்தான், திருடிய பொருளை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். உங்களின் வளமான எதிர்காலத்திற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்றார். வரதன் உடனே ஒப்புக் கொண்டார். வரதன் விடுவிக்கப்பட்டார். பின் மஸ்தானுடன் சேர்ந்து அனைத்து சட்ட விரோத காரியங்களிலும் ஈடுப்பட்டார்.

மஸ்தான் குறித்த சுவாரஸ்ய கதைகள்

எண்பதுகளில், மஸ்தானின் செல்வாக்கு வெகுவாக குறைந்தது. ஆனால், அதன் பின்னும் அவர் குறித்த கதைகள் குறைவதாக இல்லை. ஆனால், அதில் பெரும்பாலானவை பொய்யானவை.

பிற செய்திகள்:

பிரபல உருது ஊடகவியலாளரான, கலீத் ஜஹீத், மஸ்தானை நெருக்கமாக அறிந்தவர். மஸ்தானுடன் பனாரஸ் சென்ற போது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான கதையை பகிர்ந்துக் கொள்கிறார்.

அந்த பயணத்தின் போது நாங்கள் தலமந்தி பகுதியில் சாதாரண ஒரு விடுதியில் தங்கினோம்.

மக்களுக்கு ஹாஜி மஸ்தான் அங்கு வந்தது தெரிந்துவிட்டது. மூன்று நிமிடங்கலின் ஏறத்தாழ 3000 பேர் அங்கு கூடிவிட்டார்கள். நான் ஒரு பத்திரிகையாளர். ஏன் கீழே இறங்கி மக்களுடன் கலந்து, மக்கள் அவரை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க கூடாது? என்று நினைத்தேன்.

அவர்களுடன் மஸ்தான் குறித்து உரையாடவும் செய்தேன். மக்கள், 'ஹாஜி மஸ்தான் 365 கதவுகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதவின் வழியாக வருவார். ஒரு காரை ஒரு முறைதான் பயன்படுத்துவார். பின் அந்த காரை விற்று அதிலிருந்து வரும் தொகையை ஏழை மக்களுக்கு கொடுத்து விடுவார். என்று மக்கள் அவரை பற்றி என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் இது எதுவும் உண்மை இல்லை. அவர் ஒரு பழைய ஃபியட் காரை பயன்படுத்துகிறார். அவர் பெரிய பங்களாவில்தான் வசிக்கிறார். ஆனால், அந்த பங்களாவிற்கு 365 கதவுகள் எல்லாம் இல்லை.

பிற செய்திகள்:

பின் அலுவலகத்திற்கு வந்தப்பின் உண்மையையும், அவர் குறித்து கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பத்தையும் குறித்து விரிவாக எழுதினேன். ஆனால், அந்த கட்டுரை மஸ்தானுக்கு பிடிக்கவில்லை; அவர் கோபித்துக் கொண்டார்.

நடிகையுடன் திருமணம்

பாலிவுட் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்தார் ஹாஜி மஸ்தான். அவர் பல படங்களை மட்டும் தயாரிக்கவில்லை. கஷ்டப்படும் ஒரு நடிகையை திருமணம் செய்துக் கொண்டார்.

டோங்கிரி டூ துபாய் புத்தக்கத்தில் ஹூசைன் குறிப்பிடுகிறார், 'பருவ வயதில் மஸ்தான் மதுபாலாவின் தீவிர விசிறி. அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினார். அனால், மதுபாலா மரணித்துவிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் கூட, மஸ்தானை திருமணம் செய்திருக்க மாட்டார். அந்த சமயத்தில் ஒரு நடிகை சிரமத்தில் இருந்தார். அவர் பார்ப்பதற்கு மதுபாலா சாயலில் இருந்தார். அவர் பெயர் சோனா எனும் வீணா சர்மா. மஸ்தான் அவரிடம் தன் விருப்பத்தை கூறினார். உடனே சோனா ஒப்புக் கொண்டார். சோனாவிற்காக ஜுஹுவில் ஒரு வீட்டை வாங்கி, அவருடன் இணைந்து வாழ தொடங்கினார்.'

திரைப்பட ஆளுமைகளுடனான தொடர்பு

மும்பையின் முக்கிய புள்ளிகளுடன் மஸ்தான் தொடர்பை வளர்த்துக் கொண்டார். கடத்தல்காரனாக வாழ்ந்த நாட்களை மெல்ல மறக்க தொடங்கினார். ஹாஜி மஸ்தானுக்கு முதல் மனைவி மூலமாக மூன்று குழந்தைகள் பிறந்தன. பின் அவர் சுந்தர் சேகரை தத்தெடுத்துக் கொண்டார்.

சுந்தர் சேகர், "திரைப்படத் துறையில் இருக்கும் பலர் அப்பாவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். ராஜ் கபூர், திலீப் குமார் மற்றும் சஞ்சீவ் குமார் எல்லாம் அப்பாவுக்கு பழக்கம்தான். தீவார் படம் தயாரிப்பில் இருந்த போது, எழுத்தாளர் சலீமும், நடிகர் அமிதாபும் அப்பாவை சந்திக்க அடிக்கடு வருவார்கள். அப்போதுதான், அந்த கேரக்டரை முழுமையாக உள்வாங்க முடியும் என்பதுதான் காரணம். அப்பாவிடம் யாராவது ஆங்கிலம் பேச தொடங்கினால், அவர் ya', 'ya' என்று மட்டும்தான் தொடர்ச்சியாக சொல்வார்." என்கிறார்.

சரிந்த செல்வாக்கு

எண்பதுகளின் தொடக்கத்தில், ஹாஜி மஸ்தானின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. புதிய நபர்கள் நிழலுலகத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள்.

கலீத் ஜஹீத், 'நிழலுகத்தின் புதியவர்களின் ஆதிக்கம் பரவ தொடங்கியது. நான் அவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், இந்த புதிய குழுக்களால், ஹாஜி மஸ்தானின் ஆதிக்கமும், செல்வாக்கும் சரியத் தொடங்கியது.' என்கிறார்.

1974 ஆம் ஆண்டு ஹாஜி மஸ்தான் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 1975 ஆம் ஆண்டு, எமர்ஜென்சி காலக்கட்டம் முழுவதும் அவர் சிறையில்தான் இருந்தார். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிகூட, அவரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். ஆனால், அது எந்த பலனையும் கொடுக்கவில்லை.

ஹாஜி மஸ்தான்
SUNDAR SHAEKHA/BBC
ஹாஜி மஸ்தான்

சிறையிலிருந்து வெளியே வந்ததும். ஜெயபிரகாஷ் நாராயணை சந்தித்தார் மஸ்தான். இந்த சந்திப்புதான் மஸ்தானின் அரசியல் பிரவேசத்திற்கு காரணமாக அமைந்தது. தலித் முஸ்லிம் சுரக்‌ஷா மஹாசங் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், அந்த கட்சி சோபிக்கவில்லை.

ஹூசைன் சொல்கிறார், 'எல்லா குற்றவாளிகளும் ஒரு கட்டத்தில் புனிதமடைய விரும்புவார்கள். ஹாஜி மஸ்தானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சிவசேனாவுக்கு மாற்றாக தம் கட்சி இருக்கும் என்று மஸ்தான் நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. 1994 ஆம் ஆண்டில் தனது 68 வயதில் அவர் மாரடைப்பால் இறந்தார். ஆனால், அவரை பார்க்க பாலிவுட்டிலிருந்து முக்ரியை தவிர யாரும் வரவில்லை. பாலிவுட்டுடன் நெருக்கமாக இருந்தவரின் வாழ்வு இப்படித்தான் முடிந்தது

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
'ஹாஜி மஸ்தான் 365 கதவுகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதவின் வழியாக வருவார். ஒரு காரை ஒரு முறைதான் பயன்படுத்துவார். பின் அந்த காரை விற்று அதிலிருந்து வரும் தொகையை ஏழை மக்களுக்கு கொடுத்து விடுவார். என்று மக்கள் அவரை பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X