திருவள்ளுவர் சிலை உரிய மரியாதையோடு நிறுவப்படும்: உத்தரகாண்ட் முதல்வர் உறுதி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை அவமரியாதைக்கு உள்ளானது குறித்து அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் விளக்கம் அளித்துள்ளார். வள்ளுவர் சிலையை மீண்டும் உரிய மரியாதையோடு, உரிய இடத்தில் நிறுவ ஃபர்துவா மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கப்படும் என்று கூறியுள்ள ஹரீஷ் ராவத், திருவள்ளுவர் மீது உத்தரகாண்ட் மக்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிலை நிறுவ முயற்சி செய்தவர் உரிய இடத்தை உறுதி செய்யாததால் குழப்பம் ஏற்பட்டு விட்டது, ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு பெருமையடைகிறோம் என்றும் ஹரீஷ் ராவத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும், திமுக தலைவர் கருணாநிதி இந்த விவகாரத்தில் ஆதங்கப்பட தேவையில்லை என்று ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள், சிலை நிறுவப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று, எழுதிய கடிதத்தில், திருவள்ளுவர் சிலை கேட்பாரற்று விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.