For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்- மோடியின் அரசு ஆங்கிலேயே அரசை விட மோசம்!- ஹஸாரே

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று தொடங்கினார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. அப்போது மோடியின் அரசு ஆங்கிலேய அரசை விட மோசம்.. மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது, என்று கடுமையாக தாக்கினார்.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக பிரபல காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான 77 வயது அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார்.

அதன்படி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அவர் தனது போராட்டத்தை தொடங்கினார்.

இதில் அன்னா ஹசாரேயுடன் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்களும் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். நர்மதா நதி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மேதா பட்கரும் போராட்டத்தில் பங்கு கொண்டார். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசும் பங்கேற்றார்.

போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசுகையில் மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.

அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஜனநாயகத்துக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. அதனால்தான் அந்த சட்டத்தை எதிர்க்கிறோம். இந்த சட்டம் தொடர்பான மசோதா ஏற்கனவே 2013-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகளில் 70 சதவீதம் பேர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அரசாங்கம் அங்கு நிலத்தை கையகப்படுத்த முடியாது. ஆனால் அவசர சட்டத்தில் இந்த அம்சம் நீக்கப்பட்டு உள்ளது. இது கம்பெனிகளுக்கு ஆதரவான நடவடிக்கை ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசம்

ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசம்

முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது அரசாங்கம் விவசாயிகளின் நிலத்தை பறித்தது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியை விட இப்போதைய அரசாங்கம் மோசமாக நடந்து கொள்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட விவசாயிகளுக்கு இந்த அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டது கிடையாது.

விவசாயிகள் நலனுக்கு எதிராக

விவசாயிகள் நலனுக்கு எதிராக

இந்தியா ஒரு விவசாய நாடு. அப்படி இருக்கும் போது விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக அவர்களுடைய நிலத்தை அரசாங்கம் எப்படி எடுக்க முடியும்? இது இங்கிலாந்து அரசாங்கமோ அல்லது அமெரிக்க அரசாங்கமோ அல்ல; இந்திய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை மக்கள்தான் ஏற்படுத்தினார்கள். எனவே விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு செயல்படக்கூடாது.

இதுவா நல்ல எதிர்காலம்?

இதுவா நல்ல எதிர்காலம்?

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, ‘‘உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்து இருக்கிறது எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்'' என்று கூறி பிரசாரம் செய்தார்கள். அதை நம்பி மக்களும் ஓட்டுப் போட்டனர். இப்போது கட்டாயப்படுத்தி அவர்களுடைய நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. நல்ல எதிர்காலம் என்பது சாமானிய மக்களுக்கு அல்ல, கம்பெனிகளுக்குத்தான் என்பது தெளிவாகி இருக்கிறது.

இறுதி மூச்சு வரை

இறுதி மூச்சு வரை

எனவே நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களின் உரிமைகளுக்காக நான் போராடி வருகிறேன். கடைசி மூச்சு வரை நான் தொடர்ந்து போராடுவேன்.

4 மாதங்கள்.. நாடு முழுவதும்

4 மாதங்கள்.. நாடு முழுவதும்

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பற்றி மக்கள் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பாதயாத்திரையாக சென்று 3 முதல் 4 மாதங்கள் போராட்டம் நடத்த தீர்மானித்து இருக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாவட்டத்துக்கும் சென்றும் இதுபற்றி எடுத்துக் கூறுவோம். விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால், டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு வந்து மீண்டும் போராட்டம் நடத்துவேன். இந்த போராட்டம் சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும்.

அனுமதிக்க மாட்டேன்

அனுமதிக்க மாட்டேன்

இங்கு தற்போது நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினரோ அல்லது காங்கிரஸ்காரர்களோ என்னுடன் மேடையில் கலந்து கொள்ள அனுமதிக்கமாட்டேன். ஆனால் பொதுமக்கள் என்ற முறையில் யார் வேண்டுமானாலும் எங்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளலாம்," என்றார்.

English summary
Anna Hazare strongly criticised Modi Govt in a protest against the Land Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X