உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு - 11,500 விமானங்கள் ரத்து - பயணிகள் தவிப்பு
ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் பயணிகள் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பல நாடுகளில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பண்டிகை கொண்டாட சொந்த நாடுகளுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தவர்கள் பலரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது. இத்தாலி, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் ஓமிக்ரான் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் பயணிகள் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவது அல்லது பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்புடைய காரணத்தால் தனிமைப் படுத்தி கொள்வது போன்ற பிரச்சினைகளால், விமான சேவையை தொடர்ந்து நடத்த போதிய அளவில் ஊழியர்கள் கிடைக்கவில்லை எனவும் அதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிறுவனங்கள் கூறுகின்றன.

6 ஆயிரம் விமானங்கள் ரத்து
அந்த வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள், கிறிஸ்துமஸ், கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் ஆகிய 3 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பண்டிகை கொண்டாட சொந்த நாடு செல்ல இருந்த பல பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை வரை 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் யூனைடெட், டெல்டா மற்றும் ஜெட்பூளு ஆகிய 3 விமான நிறுவனங்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 690 விமானங்களும், சனிக்கிழமை சுமார் 1,000 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று 250க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சீனாவைச் சேர்ந்த 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம்தான் ஞாயிறன்று அதிக விமானங்களை ரத்து செய்தது, ஒரே நாளில் அந்த நிறுவனம் 350க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இப்படி ஒட்டுமொத்தமாக உலக அளவில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரையில் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கட்கிழமையன்று 3000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ப்ளைட் அவேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை 11500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் மருத்துவ ஆலோசகர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் அறிகுறியற்ற கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைத்துள்ளனர். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. நோய் பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அதிபர் ஜோ பிடன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications