தண்டவாளத்தில் படுத்து 2வது நாளாக விவசாயிகள் மறியல்- சீர்காழியில் சோழன் எக்ஸ்பிரஸ் சிறைபிடிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை மாவட்டம் சீர்காழியில் ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோழன் விரைவு ரயிலை சிறைபிடித்து விவசாயிகள் போராடுவதால், மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் 48 மணிநேர ரயில் மறியல் போராட்டம் நேற்று காலையில் தொடங்கியது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மதுரை, புதுக்கோட்டை என பல்வேறு முக்கிய நகரங்களிலும் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகள் அரசியல் கட்சித்தலைவர்கள் கைதாகி பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ரயில் மறியல் காரணமாக ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. ஒரு சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டன.

நாற்று நட்ட விவசாயிகள்

நாற்று நட்ட விவசாயிகள்

திருச்சி குடமுருட்டி ரயில் நிலையத்தில் திரண்ட விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் மாவட்டம் மேச்சேரி செல்ல வேண்டிய சரக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டவாளத்தில் படுத்த விவசாயிகள்

தண்டவாளத்தில் படுத்த விவசாயிகள்

திருவாரூரில் சீராங்குடி, மன்னார்குடி, நன்னிலம், முடிகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இதில், சீராங்குடி மற்றும் முடிகொண்டான் பகுதிகளில் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் இரவு வரை போராட்டத்தை தொடர்ந்தனர். சிலர் தாண்டவாளத்தில் படுத்தனர். பாதுகாப்பு கருதி இன்று காலைக்கு மறியல் ஒத்தி வைக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நள்ளிரவில் வீடு திரும்பினர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 4 பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது.

ரயில் சிறைபிடிப்பு

ரயில் சிறைபிடிப்பு

இதைப்போல நாகையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டங்களால், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் போராடிய விவசாயிகள் நேற்று சோழன் விரைவு ரயிரை விவசாயிகள் சிறைபிடித்தனர். 2ம் நாளாக சோழன் விரைவு ரயில் சீர்காழியில் நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

கம்பன் விரைவு ரயில், வேளாங்கன்னி - சென்னை விரைவு ரயில் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. முன்பதிவு செய்த முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரயில் நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்பட 16 ரயில்கள் நேற்றும், இன்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாற்றுப்பாதையில் இயக்கம்

மாற்றுப்பாதையில் இயக்கம்

சென்னையிலிருந்து புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் ‌மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

பயணிகள் மறியல்

பயணிகள் மறியல்

செந்தூர் அதிவிரைவு ரயில் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டதால் அவதியடைந்த பயணிகள், விருத்தாசலத்தில் மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லவேண்டிய ரயில், விருத்தாசலம் மார்க்கமாக மாற்றி விடப்பட்டது. ரயில்வே சார்பில் பேருந்து இயக்கப்படும் என்றும், பயணச்சீட்டுக்கு பணம் திரும்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் பயணிகள் ரயில் மறியல் செய்தனர். இதையடுத்து, அங்குவந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Normal life in TamilNadu delta district continued to remain affected for the second consecutive day today due to the ongoing 48hour ‘rail roko’ call given by the farmers demand for Cauvery water Management board.
Please Wait while comments are loading...