For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடுபிடிக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு: ஆகஸ்டில் தீர்ப்பு – பதற்றத்தில் ஜெ.தரப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதிவாதம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா முன் வழக்கறிஞர் குமார் வாதத்தினை தொடங்கினார்.

Court begins final hearing in Jaya case

ஜெயலலிதா தரப்பு இறுதிவாதம் மட்டுமே இன்னும் 2 வாரங்கள் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் இறுதிவாதம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக குறிப்பிடப்பட்டுள்ள சில சொத்துக்கள், தங்களுக்கு சொந்தமானவை என கூறி, லெக்ஸ் பிராப்பர்டி என்ற நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, லெக்ஸ் நிறுவனத்தின் வழக்கு முடியும் வரை, தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதிர்ச்சியில் ஜெ. தரப்பு

தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியதோடு, இதுவரை பிறப்பித்து இருந்த தடை உத்தரவை விலக்கிக்கொண்டனர். இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, 'இறுதி விசாரணை 19-ம் தேதி முதல் தொடங்கும்' என்று அதிரடியாக அறிவித்தார். 'இனி வேறு வழியில்லை' என்ற நிலைமையை அது உருவாக்கிவிட்டது.

5 நிறுவனங்களுக்கு அபராதம்

ஆனால் அதற்குப் பிறகும் ஐந்து நிறுவனங்கள் சார்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அந்த மனு, 18-ம் தேதி சிறப்பு நீதிபதி குன்ஹா முன் விசாரணைக்கு வந்தது. 'தேவையில்லாமல் மனுக்கள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக ஐந்து நிறுவனங்களுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன்' என்றார் நீதிபதி.

ஜெ. தரப்பு இறுதி வாதம்

'அரசு தரப்பு வாதம் முடிந்துவிட்டது. 19-ம் தேதி முதல் குற்றவாளிகள் தரப்பு வாதம் தொடங்கும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதையடுத்து 22 நாட்களுக்குப் பிறகு 19-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சுப்ரமணியசுவாமி போட்ட வழக்கு

இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட முதல் நபர் ஜெயலலிதா என்பதால் அவரது வழக்கறிஞர் குமார் ஆஜராகி தங்களுடைய இறுதி வாதத்தை தொடங்கினார். 'என்னுடைய மனுதாரரான ஜெயலலிதா 1991 - 1996 வரை தமிழக முதல்வராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துக்கள் சேர்த்துள்ளதாக 21.6.1996 அன்று சுப்பிரமணியன் சுவாமி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையை விசாரிக்க ஆணையிட்டது. அதன் பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரண் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது தமிழகத்தில் தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்ததால், திட்டமிட்டு என் மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்துக்கொண்டு திட்டமிட்டே பொய்யான புலன்விசாரணை செய்து ஜோடித்து இந்த வழக்கைப் போட்டார்கள்.

திமுக ஆதரவு அதிகாரிகள்

விசாரணை அதிகாரியாக இருந்த லத்திகா சரணை மாற்றிவிட்டு, தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்ட வி.சி.பெருமாளுக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் பதவி உயர்வு கொடுத்து இந்த வழக்கை விசாரிக்க செய்தது. அவர் இந்த வழக்கை விசாரிக்காமலேயே நேரடியாக ஜெயலலிதா மீது எஃப்.ஐ.ஆர் போட்டு, அதன் பிறகு விசாரணையைத் தொடங்கினார்.

ஜெயலலிதா மீது எப்.ஐ.ஆர்

ஒரு ஸ்டேஷன் அதிகாரிதான் எஃப்.ஐ.ஆர் போட வேண்டும். ஒரு இயக்குநராக இருப்பவர் எப்படி எஃப்.ஐ.ஆர் போட்டார்? நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள் இருக்கும்​போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக ஒரு இயக்குநர் ஜெயலலிதா மீது எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளது அரசியல் காழ்ப்பு உணர்ச்சிதான் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

பொய்ச்சாட்சியம்

249 சாட்சியங்களை பொய்யாக சாட்சி சொல்ல வைத்து, பிறகு மீண்டும் அந்த சாட்சியங்கள் விசாரிக்கும்போது மறுத்திருக்கிறார்கள்' என்றும் தனது தரப்பு வாதத்தில் குறிப்பிட்டார் குமார்.

மீடியாவில் காட்டிய ஏன்?

'ஜெயலலிதா சிறையில் இருக்கும்போது தனிமனித சுதந்திரத்தை மீறி சட்ட விரோதமாக அவர் வீட்டுக்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் பெட்ரூம், பாத்ரூம் வரை சென்று வீடியோ, போட்டோக்களை எடுத்து, அதை மீடியாக்களில் காண்பித்து அசிங்கப்படுத்தினார்கள் என்றார்.

அவப்பெயரை ஏற்படுத்திய திமுக

என் மனுதாரருக்கு பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கைக் குறைத்து, அவர் மீது அவப்பெயரை ஏற்படுத்த தி.மு.க செய்த அரசியல் காழ்ப்பு உணர்ச்சி நடவடிக்கை இது' என்றும் விளக்கினார்.

30 நாட்கள் இறுதி வாதம்

ஜெயலலிதா தரப்பு வாதங்கள் சுமார் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்கிறார்கள். அதன் பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கறிஞர்கள் மொத்தமாக 20 நாட்கள் வரைக்கும் வாதங்களை வைப்பார்கள்.

17 ஆண்டுகால பயணம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 17 ஆண்டுகாலமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை பலமுறை வாய்தா வாங்கப்பட்டுள்ளது. பலமுறை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா பப்ளிகேஷன்ன்ஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஷா, இது வழக்கை தாமதப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி என்று கூறி 5 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பை எதிர்நோக்கி

சொத்துக்குவிப்பு வழக்கில் இனி எந்த தடையும் ஏற்படாது என்று நம்பும் பட்சத்தில் ஜூலை 20-ம் தேதிக்குள் இவை அனைத்தும் முடிந்துவிடும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும்' என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணை கிளைமாக்ஸை எட்டியுள்ளதால் ஜெயலலிதா தரப்பு பதற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The special court in Bangalore on Thursday began the final hearing in the disproportionate assets case against Tamil Nadu Chief Minister J Jayalalitha. After the Supreme Court refused to stay the proceedings against her on June 17, the special court Judge John Micheal D'Cunha resumed full-fledged hearing of the case, which will now be conducted daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X