• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மண்டியிட்டது மரணம்- கல்லறை திறந்தது - காரிருள் மறைந்தது - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து

|

சென்னை: ஈஸ்டர் திருநாள்...

கிறிஸ்தவ விழாக்களிலேயே மிக அற்புதமான விழா என்றால் அது இயேசுவின் உயிர்ப்புதான். மனித குலத்தை ஆழமாக பாதிக்கும் பாவத்தினை தன் சிலுவை சாவினாலும், உயிர்த்தெழுதலினாலும் வென்று உலகுக்கு புதுவாழ்வை பாய்ச்சியவர் இயேசு. ஆனால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளும், பட்ட பாடுகளும் சமூக அழுக்கை துடைத்தெடுத்த பாங்கு அது.

இயேசு நீதி தேடும் போராட்டத்தை ஆயுதங்களுடன் கையில் எடுக்கவில்லை. அன்பின் நீரோட்டமாகவே அது எங்கும் தென்பட்டது. மனதில் அன்பை தேக்கி அதன் பாய்ச்சலில் மனித பாவங்களை கழுவினார். அவரது வாழ்வு முழுவதுமே தரமான வாழ்க்கைக்கான தேடலாக இருந்தது. பெரும்பாலான போதனைகள் அன்பை நோக்கியே பயணப்பட்டன. இதனால்தான் மக்கள் இயேசுவோடு வெகுவிரைவில் அன்னியோனமாகி போனார்கள்.

உன் தாய்-தந்தையரை கணம் பண்ணு என்று மட்டும் இல்லை, உன் சகோதரனை மன்னிக்க கற்றுக்கொள் என்கிறார் இயேசு, எத்தனை தடவை வேண்டுமானாலும் நீ அவனை மன்னிக்கலாம், சண்டையிட்டு தேவாலயம் வந்து பிரயோஜனம் என்ன? சமாதானம் செய்துவிட்டு வா என்கிறார் இயேசு. உறவுகளின் பாச உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் மிக முக்கிய போதனை.

சமூக சமத்துவம்

சமூக சமத்துவம்

இயேசுவின் நீதி சமூக சாதீய ஏற்றத் தாழ்வுகளை தகர்த்தது. ஒதுக்கி அவமானப்படுத்தி வைக்கப்பட்ட விலைமாதர்களையும், ஏழைகளிடம் வரிவசூலித்து ஏய்ப்பவர்களையும் சரிசமமாய் பாவித்தார். ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் ஒரே தராசில் நிறுத்தினார். தொழுநோயாளிகள் தீண்டதகாதவர்களாக இருந்தாலும் அரவணைத்து சென்றார். இதுதான் நமது சமூக கட்டமைப்பு என்று ஒன்றிப்போயிருந்த மக்களுக்கு இயேசுவின் சமூக அக்கறை புதிய கண்ணோட்டத்தை கொடுத்தது.

எல்லோரும் எல்லாமும்

எல்லோரும் எல்லாமும்

2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாத நிலை ஒன்று வரவேண்டும்... என்ற தத்துவத்தை பரப்ப துவங்கிவிட்டார். சாதி-மத-பொருளாதார ரீதியான பின்னடைவின்போது, இயேசுவின் இந்த தத்துவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஒரு கணம் திகைக்க செய்தது-பிரமிக்க செய்தது. பழமைவாதத்தின் உச்சத்திலிருந்தவர்களை மெல்ல... மெல்ல... மனம் மாற செய்தது.

துணிச்சலுடன் எதிர்த்தவர்

துணிச்சலுடன் எதிர்த்தவர்

சக மனிதர்களின் வாழ்வோடும் உணர்வோடும் இணைந்து சமத்துவத்தை காண முயற்சித்தார். போலி மத தலைவர்களையும், ஆளும் வர்க்கத்தையும் துணிச்சலோடு எதிர்த்தார். அதற்காக பலவித வழிகளில் மிரட்டல் வந்தாலும் வளைந்து கொடுக்காமல் இரும்பாக நின்றார் இயேசு. வட்டி கொடுக்கும் செயல் புரையோடியிருந்த நேரமது. ஏழைகளிடம் வட்டி வசூலிப்பது தவறு என்றும், அதை ஏழைகளிடத்திலேயே கொண்டு சேர் எனவும் கடுமையாக சாடினார் இயேசு. மலைப் பிரசங்கத்தின்போது இயேசு ஆற்றிய உரைகள், குறிப்பாக இரண்டில் ஓர் அங்கியை கொடு என்ற அவரது காலத்தால் செதுக்கப்பட்ட வைரவரிகளே அவரது பொதுவுடைமை சித்தாந்தத்தின் வேர் எனலாம்.

போதனைகள்

போதனைகள்

நெடுந்தூரம் காடு, மேடு, வனாந்திரங்களில் ஓடி ஓடி, நாடி நாடி சென்று மக்களை போதனைகள் மூலம் நல்வழிப்படுத்தினார் இயேசு. அதற்கான தூரத்தை அவர் கணக்கிடவில்லை... எத்தனை பேரை சந்தித்தார் என புள்ளிவிவரங்களை வைத்திருக்கவில்லை. பெருந்திரளானோரை உடன்வைத்து கொண்டு ஊழிய பணிகளில் இறங்கவில்லை. ஒரு சிறிய குழு - வெறும் 12 பேர்தான். உலகம் முழுவதும் கிறிஸ்தவ மகிமையை கொண்டு சேர்த்து இவர்கள்தான். இயேசுவின் போதனைகள் தரமானவை, உச்சத்தை தொட்டவை, உதாரணமாக, கொலை, களவு போன்ற குற்றங்களுக்கு காரணமான கோபத்தை உடைத்தெறி என்கிறார், "அடுத்தவனையும் உனைபோல் நினை" என்று வேர் வரை ஊடுருவி அறிவுறுத்துகிறார்.

உயிரும் நானே எனில்

உயிரும் நானே எனில்

பொதுவாக நாம் ஒரு பேச்சுக்கு சொல்வதுண்டு "செத்துப் பொழைச்சேன்"என்று. இது வெறும் வார்த்தை என்பதை உலகறியும். ஆனால் மரணித்து ஜனித்தவர் இயேசு என்பது அனைத்து கிறிஸ்தவர்களாலும் நம்பப்படும் நிஜம்... "உயிரும் நானே எனில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்" என்கிறார் இயேசு.

"நியாயமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை" என்பதன் சாட்சியே இந்த உயிர்த்தெழுதல் நிகழ்வு. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்ற நாளே உயிர்ப்பு... சிலுவையில் அறையப்பட்ட 3-ம் நாள் இயேசுவிடம் மண்டியிட்டு சென்றது மரணம்... சரிந்து விழுந்தது சாவு... இதயமே அவரிடம் அழுதது... கல்லறை திறந்தது... உயிர்த்தெழுந்தார் இயேசு.

சாகாவரத்தின் துவக்கப் புள்ளி

சாகாவரத்தின் துவக்கப் புள்ளி

மீண்டும் உயிர்த்தெழுந்ததன் மூலம், சாகாவரத்தின் துவக்கப் புள்ளியானார் இயேசு. மெய்ஞ்ஞானத்தின் முதல் வித்தானார் இயேசு. தலையில் முள்முடி, பாரமான சிலுவை, அந்த சிலுவையோடு சேர்த்து அடிக்கப்பட்ட ஆணிகள், இந்த நிலையிலும் மன்றாடுகிறார் "பிதாவே இவர்களை மன்னியும்" என்று. தனக்கு தண்டனை அளித்தவர்களையும் மன்னித்துவிடுங்கள் என்று வேண்டுவது இறைகுணத்தின் உச்சம். எதிரிகளையும் நேசிக்கும் இந்த குணம் இயேசுவுக்கு மட்டுமே இருந்தது.

நம்மில் பெரும்பாலான மனிதர்கள் மனக்கசப்பை வளர்த்துக்கொண்டு தங்கள் மரணம் வரையிலும் கூட பிறரை மன்னிக்காமல் வாழ்ந்து மறைகிறார்கள். இயேசுவின் இந்த மன்னிக்கும் குணம் நம் அனைவருக்கும் கட்டாயமான ஒரு தேவை. விரோதத்தின் சிந்தனைகள் சாகடிக்கப்பட்டு, நமது மன்னிப்பின் மகத்துவம் உயிர்த்தெழ வேண்டும் என்பதே இந்த ஈஸ்டர் திருநாளில் நாம் பெறும் உயரிய சிந்தனையாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
On Easter Sunday, Christians celebrate the resurrection of the Lord, Jesus Christ. Christians believe, according to Scripture, that Jesus came back to life, or was raised from the dead, three days after his death on the cross. Through his death, burial, and resurrection, Jesus paid the penalty for sin, thus purchasing for all who believe in him, eternal life in Christ Jesus.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more