For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடத்தை விதிமுறையை மீறவில்லை: தேர்தல் ஆணைய நோட்டீஸுக்கு முதல்வர் ஜெ. பதில்

By Mathi
Google Oneindia Tamil News

Jaya replies to EC notice, says didn't violate code of conduct
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.

ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் அளித்தது..

இந்த புகாரின் அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு செவ்வாய்க்கிழமை மாலைக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஜெ. பதில்

இதைத் தொடர்ந்து இன்று தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளரின் நேற்றைய தேதியிட்ட கடிதத்துடன், நேற்று மாலை 3.30 மணிக்கு நோட்டீஸ் கிடைத்தது. அதற்கான பதிலை தற்போது அனுப்புகிறேன்.

தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள நோட்டீஸில், புகார்தாரரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த கடிதத்தின் 2-வது பத்தியில் இடம்பெற்றுள்ள புகார்களை வைத்து பார்க்கும்போது, அ.இ.அ.தி.மு.க.வின் அரசியல் எதிரியான தி.மு.க.தான் இந்தப் புகாரை அளித்துள்ளது என்பதை யூகிக்க முடிகிறது

புதிய திட்டம் அறிவிப்பு இல்லை

ஏற்காடு தொகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது, புதிய திட்டங்கள் எதையும் அறிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடையே தமிழில் பேசினேன். கடந்த மாதம் 28-ந் தேதி நிகழ்த்திய எந்த உரைகளிலும், புதிய திட்டங்கள் குறித்து வாக்குறுதியோ அல்லது அறிவிப்போ வெளியிடவில்லை.

தமிழகத்தில் 3-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பற்றி மட்டுமே சுட்டிக்காட்டினேன். ஏற்காடு தொகுதியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மற்றம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் குறிப்பிட்டேன். புதிய சுகாதார மையங்களை திறப்பது போன்ற பல்வேறு சமூக மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டதாக சொல்லப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.

ஏற்காடு தொகுதி மேம்பாட்டுக்கு தேவையானவை பற்றி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதை மட்டுமே உரையில் குறிப்பிட்டேன். அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்னென்ன தேவையோ, அவை நிறைவேற்றப்படும் என்று பொதுவாக மட்டுமே குறிப்பிட்டேன்.

நடத்தை விதிமீறல் இல்லை

பொதுவாக பேசிய விஷயத்தை, என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி தேவைகளுடன் தொடர்புபடுத்துவது சரியாக இருக்காது. குறிப்பிட்ட எந்த திட்டமும் நிறைவேற்றப்படும் வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை.

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், எனது உரையில் எந்த இடத்திலும், எந்த வடிவத்திலும் நிதி மானியம் எதையும் அறிவிக்கவில்லை. அதுபற்றிய வாக்குறுதியும் அளிக்கவில்லை. சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் போன்றவற்றை வழங்குவது குறித்து வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை.

அப் பகுதி தேவைகள் மற்றும் அரசு இப்பகுதியின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியையும் இணைத்து, அதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் இக்கடிதத்தை எழுதியிருப்பதாக தெரிகிறது. நோட்டீசில் உள்ள 4-வது பத்தியில் கண்டுள்ளபடி முடிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெயரை தவறாக எழுதிய தேர்தல் ஆணையம்

இரண்டு விஷயங்களை ஒன்றாக இணைத்து, இதுபோன்ற முடிவுக்கு வருவது வெறும் அனுமானமாகவும், சந்தேகமாகவும் மட்டுமே இருக்கும். சட்டப்படி இது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்கீழ் வராது.

தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள விளக்கம் கேட்கும் நோட்டீசுக்கு பதில் அனுப்பியுள்ளதால் உத்தேச நடவடிக்கை எதையும் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமது பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்

இவ்வாறு ஜெயலலிதா அந்த பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa on Tuesday replied to the Election Commission notice denying the charge of violating the model code of conduct in Yercaud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X