For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆனந்த விகடன் விவகாரம்: சட்டநியாயத்தை நிலைநாட்ட புதிய அவதூறு வழக்கையும் சந்திப்பேன்... கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆனந்த விகடன் கட்டுரையை முரசொலியில் வெளியிட்டதற்காக தொடரப்பட்ட புதிய அவதூறு வழக்கையும் சந்தித்து சட்ட நியாயத்தை நிலைநாட்டுவேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம்:

ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாகக் கூறி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவருடைய துணைவியார் திருமதி பிரேமலதா, அந்தக் கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின், முரசொலி ஆசிரியர் செல்வம், "நக்கீரன்" இதழ் ஆசிரியர் கோபால் போன்றவர்கள் மீதும், பல பத்திரிகைகள் மீதும், தமிழகத்தின் பல்வேறு நீதி மன்றங்களில் தமிழக அரசு அவதூறு வழக்குகளைத் தொடுத்துள்ளது. தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதி மன்றத்திலேயே மனு தாக்கல் செய்து அது விசாரணையிலே உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு

வழக்கு விசாரணையின் போது, அவதூறு சட்டப் பிரிவுகளை தமிழக அரசு அரசியல் பழி வாங்குவதற்கு மட்டுமே பயன் படுத்துகிறது என்ற வாதமும் வைக்கப்பட்டது. அப்போது இதைக் கேட்ட நீதிபதிகள், பல வழக்குகளில் அவதூறு தொடர்வதற்கான காரணங்களே இல்லை என்று கூறினார்கள். மற்றொரு அவதூறு வழக்கில், உச்ச நீதி மன்ற நீதியரசர் தீபக் மிஸ்ரா கூறும்போது "முதலமைச்சரை ஊழல் வாதி என்று குறிப்பிடுவதே அவதூறு என்றால், எதிர்க் கட்சிகள் எதையுமே விமர்சிக்க முடியாதே" என்று வினவியிருந்தார்.

அந்தி அர்ஜூனா வாதம்

அந்தி அர்ஜூனா வாதம்

மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா உச்ச நீதி மன்றத்தில் வாதாடும்போது, "இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500 பல இடங்களில் ஆட்சியில் இருப்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்றோர் தொடரும் தேவையற்ற அவதூறு வழக்குகளால் தற்போது அவதூறு வழக்குகளுக்கான சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிராக இருப்பவர்கள் மீதும், எதிர்க்கட்சிகள் மீதும் தேவையற்ற அவதூறு வழக்குகளைத் தொடருகின்றனர். இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது என்று வாதிட்டார்.

நீதிபதி கருத்து

நீதிபதி கருத்து

அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும்போது, "அவதூறு வழக்குகளை அரசு வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்வதால், வழக்குகளுக்கு மக்களின் வரிப்பணம் தேவை யில்லாமல் செலவிடப்படுவது வருத்தம் அளிக்கிறது" என்றும் தெரிவித்தார். இப்போது மட்டுமல்ல; 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த ஐந்தாண்டு காலத்தில் 180 அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது தொடுத்தார். அந்த வழக்குகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நீதிமன்றம் அப்போது கண்டனம் செய்தது.

ராமதாஸின் அறிக்கை...

ராமதாஸின் அறிக்கை...

அதற்குப் பிறகு அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தார். மேலும் ராமதாஸ் அவர்கள், அவரது அறிக்கையில், "கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, ஜெயலலிதா பல குற்றச்சாட்டுகளை கூறினார். அதற்காக கருணாநிதி அவதூறு வழக்கு போடவில்லை" என்றே குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் ராமதாஸ் அவர்கள் 17-9-2013 அன்று வெளியிட்ட தனது அறிக்கையிலேயே, அவதூறு வழக்குகளின் மூலம் எதிர்ப்புக் குரலை அடக்க முடியாது; இதுவரை (இரண்டே ஆண்டுகளில்) ஒட்டு மொத்தமாக 130 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கிறது; முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது கடந்த இரு ஆண்டுகளில் 12 அவதூறு வழக்குகளும், எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்குகளும், தி.மு.க. பொருளாளர், மு.க. ஸ்டாலின் மீது 5 அவதூறு வழக்குகளும் தொடரப் பட்டுள்ளன" என்றும் தெரிவித்திருக்கிறார்.

30 வாரமாக ஏன் போடவில்லை?

30 வாரமாக ஏன் போடவில்லை?

முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி "ஆனந்தவிகடன்" எழுதியதும், அவதூறு வழக்கு போடுகிறார்களே, கடந்த 30 வாரங்களாக, வாரந்தோறும் ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும், பல்வேறு குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி அந்த இதழ் விமர்சனம் செய்தது பற்றி ஜெயலலிதா எந்த வழக்கும் போடவில்லையே? அதையெல்லாம் ஜெயலலிதா உண்மை என்று ஏற்றுக் கொள்கிறாரா?

ஆனந்த விகடன் விவகாரம்

ஆனந்த விகடன் விவகாரம்

என் மீதும், "ஆனந்தவிகடன்" மீதும் வழக்கு போட்டது மட்டுமல்ல; "ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டிருக்கிறதாம்". அது மாத்திரமல்ல; ஆனந்தவிகடன் பத்திரிகையின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைக் காவல் துறையினர் தொடர்பு கொண்டு "ஆனந்தவிகடன்" இதழை விற்கக் கூடாது, மீறி விற்பனை செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருவதாகவும், எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும் என்றும் "ஆனந்த விகடன்" ஆசிரியர் திரு. ரா. கண்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக "ஆனந்த விகடன்" இதழ், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்த பத்திரிகை அல்ல. ஆனால் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரைக்காக இந்த அரசு அவர்களை மிரட்டுவதும், பயமுறுத்துவதும் நியாயம் தானா என்பதை நடுநிலையாளர்கள் தான் சிந்திக்க வேண்டும். மற்றுமோர் செய்தி எனக்கு கிடைத்துள்ளது.

தி.மு.க.வினர் கைது

தி.மு.க.வினர் கைது

வள்ளியூர் தி.மு.க. நகரச் செயலாளர், சேதுராமன், நெல்லை மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் "ஆனந்தவிகடன்" இதழை விநியோகம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சர்வாதிகாரம் எந்த அளவுக்கு நீளுகிறது என்பதற்கு இவை சான்றுகள்.

ஜெயலலிதா என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

இதுவும் ஒன்று....

இதுவும் ஒன்று....

அவதூறாக தகவல்களை வெளியிட்டதாகக் கூறி தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறாராம்! அப்படி என்ன இந்த ஆட்சியாளர்களை விட அவதூறாகவா நாம் எதுவும் கருத்து வெளியிட்டு விட்டோம் என்று பார்த்த போது, "ஆனந்த விகடன்" இதழில், ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று வெளி வந்த கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து வெளியிட்டிருந்தது தெரிந்தது. நடுநிலை இதழ் என நாட்டினரால் கருதப்படும் ஒன்றில் வெளி வந்த கட்டுரையை எடுத்துக் காட்டியதற்காக, என் மீது அவதூறு வழக்காம்! இந்த ஆட்சியில் என் மீது போடப்பட்ட எத்தனையாவது அவதூறு வழக்கோ இது?

அவங்க பேசுறதைவிடவா

அவங்க பேசுறதைவிடவா

இவர்களது கட்சிக்காரர்கள் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆகியோரை விடவா வேறொருவர் அவதூறாகப் பேசிட முடியும். எதிர்க் கட்சியினரைப் பற்றி, குறிப்பாக என்னைப் பற்றி அ.தி.மு.க. வினரும், அவர்களது அதிகாரப் பூர்வமான நாளேடும் செய்யாத தரக் குறைவானதும் அவதூறு நிறைந்ததுமான விமர்சனமா? அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதை உணர்ந்தவன் நான்.

ஜெயலலிதாவின் அவதூறு நடவடிக்கை வந்தவுடன் "ஆனந்த விகடன்" எழுதியுள்ள பதிலில், "கடந்த தி.மு.க. ஆட்சியின் போதும் கருணாநிதி தலைமை யில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதே போல் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது. அப்போதெல்லாம் தி.மு. கழக அரசு அந்தப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடுத்து விடவில்லை.

மறுப்பு தெரிவிக்கலாமே

மறுப்பு தெரிவிக்கலாமே

பொதுவாக "ஆனந்தவிகடன்" இதழ் வியாழக்கிழமை காலையிலேயே வந்து விடும். அந்த இதழில் வெளி வந்த செய்தி அவதூறானது என்றால், அப்போதே, அன்றையதினமே அரசின் சார்பில் மறுப்பு தெரிவித்திருந்தால், மற்றவர்கள் அதையெடுத்து எழுத வாய்ப்பில்லாமல் போயிருக்குமல்லவா? அதைச் செய்யாமல், பத்திரிகையைப் பல்லாயிரக்கணக்கானோர் படித்தறிந்த பிறகு, வழக்கு தொடுப்பதில் என்ன பயன்? அந்தக் கட்டுரையில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானவை என்றால், அரசு தரப்பில் அதற்கு விளக்கமாக பதில் அளிக்கலாமே? ஜனநாயகத்தில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் முறை தானே அது?

அ.தி.மு.க. ஆட்சி அதிகாரம் கையிலே இருக்கிறது என்பதற்காக இவ்வாறு எதிர்க்கட்சியினரையும், ஆளுங்கட்சியை ஆதரிக்காத நடுநிலைப் பத்திரிகைகளையும் பயமுறுத்துகின்ற வகையில் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடுப்பது முறையல்ல!

அஞ்சுபவர்கள் அல்ல

அஞ்சுபவர்கள் அல்ல

முதல் அமைச்சர் ஜெயலலிதா நாகரிகமற்ற முறையில், எதிர்க்கட்சியினரைப் பற்றியும், இந்த நாட்டின் மூத்த தலைவர்களைப் பற்றியும் பேசாத, தெரிவிக்காத கருத்துக்களையா நாங்கள் தெரிவித்து விட்டோம்? அதுவும் தற்போது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்திருக்கின்ற யாரும் ஜெயலலிதாவின் மிரட்டலுக்கோ, அவதூறு வழக்குகளுக்கோ அஞ்சி ஒதுங்கி விடுகின்றவர்கள் அல்ல!

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா போடாத அவதூறு வழக்குகளா? தற்போது ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கினை சட்ட ரீதியாக எதிர் கொள்ளப் போவதாக ஆனந்த விகடன் அறிவித்து விட்டது!

என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதா என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has slammed TN CM Jayalalithaa for one more defamation case against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X