For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: சில சங்கங்கள் புறக்கணிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்களின் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். ஊழியர்கள் போராட்டத்தால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும்,பிப்ரவரி 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழ்ச்செல்வி அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததால் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்க மாட் டோம் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் 10,61,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உண்ணாவிரதம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமையன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போராட்டத்தை அறிவித்த அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் 5 அமைச்சர்களை கொண்ட குழுக்களை அமைத்தது. இந்த குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன், உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முதல்வரின் கவனத்திற்கு

முதலில் ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவான ஜேப்டோ மற்றும் ஜப்டா ஆகிய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வருகிற 16ம் தேதி சட்டசபை, இடைகால பட்ஜெட் தாக்கலின் போது உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் தங்களது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர்.

உடன்பாடு எட்டப்படவில்லை

இதனை தொடர்ந்து தமிழ்நாடு வணிக வரிச் சங்க நிர்வாகிகள், அதேபோன்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடனும் அமைச்சர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் போராட்டத்தை அறிவித்தவர்களின் கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற உறுதி மட்டும் தரப்பட்டது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

போராட்டம் தொடரும்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், தங்களுடைய போராட்ட அறிவிப்பில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடரும் என்றும், இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த அளவுக்கு முடிவு எட்டப்படாததால் அவர்கள் அடுத்தடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான அறிவிப்பை வரும் நாட்களில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறக்கணிக்கும் சங்கங்கள்

இதனிடையே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன், தலைமைச் செயலக சங்க தலைவர் கணேசன் உள்ளிட்ட 5 அமைப்புகளின் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்கள் கோரிக்கைகளை விளக்கினர். பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்த காரணத்தால் நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று இந்த சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் 3 சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள 15 லட்சம் அரசு ஊழியர்களில் 8 லட்சம் பேர் அலுவலர் ஒன்றியத்திலும், 3 லட்சம் பேர் அடிப்படை பணியாளர்கள் சங்கத்திலும் உள்ளனர் என நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

எப்படியோ அரசு ஊழியர்கள் சங்கத்தினரை தனித்தனியாக பேசி பல லட்சம் பேரை வேலை நிறுத்தம் செய்ய விடாமல் தடுத்து விட்டனர் அமைச்சர்கள்.

English summary
With an indefinite strike called by the Tamil Nadu Government Employees Association (TNGEA) kick started on Wednesday, members affiliated to the association staged a demonstration at Chepauk in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X