For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார்? அவிழாத மர்மமுடிச்சுகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மேலும் அவகாசம் அளித்துள்ளது. மூன்றரை வருடங்களாக கொலையாளியின் நிழலைக்கூட நெருங்காத சிபிசிஐடி போலீசார், டிசம்பர் 18ம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக கூறிய நீதிபதிகள் இதுதான் இறுதிக்கெடு என்றும் தெரிவித்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் முதுகெலும்பே ராமஜெயம்தான். திருச்சி மாவட்டத் தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கே.என்.ராமஜெயம். திருச்சியில் திமுகவின் மூன்று மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியது, திருச்சியில் கட்சிக்கு சொந்தமாக அறிவாலயம் கட்டியது என்று பல செயல்களை அசால்டாக செய்வதில் கைதேர்ந்தவர்.

Unsolved mystery in Ramajeyam murder case

2012ம்ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் சம்பவம் நடந்த தினத்தன்று அதிகாலையில் வாக்கிங் சென்றவர், 8.30 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேட ஆரம்பித்தனர். அடுத்த சில மணி நேரங்களில், கை-கால்கள் கம்பிகாளால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி திணிக்கப்பட்டு, ரத்தக்காயங்களுடன் போர்வை சுற்றப்பட்ட நிலையில் ராமஜெயத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மூன்றரை வருடங்களுக்கு மேலாகியும் கொலை வழக்கில் மர்மமுடிச்சுகள் எப்போது அவிழ்க்கப்படும் என்பது எதிர்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

• ராமஜெயத்திற்கு ஆந்திராவில் சுரங்கத் தொழில், இந்தோனேஷியாவில் நிலக்கரி குவாரி, புதுக்கோட்டை எல்லையோரம் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என்று மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்தவர்.

• அண்ணன் அமைச்சராக இருந்தாலும் இன்றைக்கும் ராமஜெயத்தை ‘எம்.டி' என்று மரியாதையுடன் திருச்சிவாசிகள் அழைப்பார்களாம்.

• கடந்த 2006ம் நடந்த சட்டசபை தேர்தலில் தீவிரமாக களமிறங்கினார் ராமஜெயம். 2009 லோக்சபா தேர்தலில் ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் அவரை பெரம்பலூரில் போட்டியிடும்படி வற்புறுத்தவே, அவருக்கும் அரசியல் எட்டிப்பார்த்தது.

• உறவுக்காரரான நடிகர் நெப்போலியன் எம்.பியாகி அமைச்சராகவே, ராமஜெயத்துக்கு அரசியல்ரீதியான மோதல் வெடித்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

• 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. இதனால் ராமஜெயம் தலைமறைவானார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்ப முயன்றபோது இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து திருச்சிக் காவல் துறை வசம் ஒப்படைத்தனர். சில நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்த பின்னர், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

• ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு, ரவுடி என்கவுண்டர் வழக்கு ஆகியவை ராமஜெயத்தின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

• ராமஜெயத்தின் உடல் இருந்த நிலையைப் பார்த்தால் அவர் கைதேர்ந்த தொழில் முறை கொலையாளிகளால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதைப் போல் தெரிகிறது. அதனால், வெளிமாநிலத் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்குமா என்றும் அலசப்பட்டது.

• மூன்றரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கில் குற்றவாளி யாரும் சிக்கவில்லை. இந்த நிலையிலேயே தனது கணவர் கொலை வழக்கை சிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

• அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிகளைக் கண்டறிய அக்டோபர் 28ம் தேதி வரை சிபிசிஐடி போலீசாருக்கு அவகாசம் கொடுத்திருந்தனர்.

• இதனையடுத்து விசாரணையின் போக்கை மாற்றிய சிபிசிஐடி போலீசார், சிலருக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி எஸ்.பி. அன்பு நேரில் ஆஜராகி, ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தொடர்பான ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தார்.

• அந்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள், ‘சிபிசிஐடி போலீஸார் அறிக்கையில் ராமஜெயம் கொலை தொடர்பாக பல தகவல்களைக் கூறியுள்ளனர். அந்தத் தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்குள் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். அதையேற்று சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் அவகாசம் வழங்கலாமா? அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமா என ராமஜெயத்தின் மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் கேட்டனர்.

• அதற்கு, ‘சிபிசிஐடி போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. சரியான பாதையில் விசாரணை செல்வதாக தெரியவில்லை' என்றார் சண்முகசுந்தரம்.

• இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் அவர்கள் முதலில் இருந்தே விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணை முடிய மேலும் 3 மாதம் ஆகும். இதனால் சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் அவகாசம் வழங்கலாம் என்றனர்.

• சிபிசிஐடி எஸ்.பி. அன்பு கூறும்போது, குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, மேலும் அவகாசம் தரவேண்டும் என்று கேட்டார்.

• இதையடுத்தே சிபிசிஐடி போலீசாருக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை டிசம்பர்.18ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

• மூன்றரை வருடங்களாக கண்டுபிடிக்காத கொலைக் குற்றவாளிகளை இன்னும் இரண்டு மாதத்தில் கண்டுபிடிப்பார்களா? என்பது அந்த ஸ்ரீரங்கநாதருக்கே வெளிச்சம்.

English summary
There are unsolved mysteries in Ramajeyam murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X