For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கேப்டன்" ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்க்கையை உயர்த்துவோம்: பிரேமலதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: விவசாயிகளை தமிழகத்தில் முதலாளிகளாக ஆக்கியே தீருவது என்ற சவாலை நாங்கள் எடுத்துள்ளோம். விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்துள்ளோம். விவசாயிகளும், நெசவாளர்களும் 2 கண்கள். இவர்கள் வளர்ச்சிதான் தமிழகத்தின் வளர்ச்சி என்று தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து போட்டியிடுகின்றன. தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை கடந்த 25ம் தேதி நெல்லையில் தொடங்கிய பிரேமலதா, மதுரை, தஞ்சை என பயணம் செய்து மக்களிடம் விளக்கி பேசி வருகிறார்.

தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கேப்டன் தலைமையில் ஆட்சி அமைந்தால், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறினார்.

We will improve the lifestyle of the farmers and weavers, Premalatha

கடந்த 60 ஆண்டுகால தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி உருவாகி உள்ளது. இது தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து உள்ளது.

காவிரி டெல்டாவிற்கு வந்தாலே எனக்கும், விஜயகாந்திற்கும் மிகப் பெருமையாக இருக்கும் ஏனென்றால் நாங்கள் இருவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

விவசாயிகளை தமிழகத்தில் முதலாளிகளாக ஆக்கியே தீருவது என்ற சவாலை நாங்கள் எடுத்துள்ளோம். விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்துள்ளோம். விவசாயிகளும், நெசவாளர்களும் 2 கண்கள். இவர்கள் வளர்ச்சிதான் தமிழகத்தின் வளர்ச்சி என்று கூறினார்.

தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றி இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காகத்தான் தேமுதிகவும் மக்கள் நல கூட்டணியும் இணைந்துள்ளோம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எங்கள் கூட்டணியை பற்றித்தான் தினமும் விமர்சிக்கின்றன. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் இந்தியாவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் ஒரத்தநாடு அருகே பாலன் என்ற விவசாயி கடன் பாக்கிக்காக போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். அது வாட்ஸ்-அப் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதேபோல தமிழகம் முழுவதும் பல விவசாயிகள் நிலைமை இப்படித்தான் உள்ளது.

அரியலூரில் விவசாயி தற்கொலை, கும்பகோணம் அருகே ஒரு விவசாயி தற்கொலை என்று தினமும் கடன் பாக்கிக்காக சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நாள்தோறும் ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். டெல்லியிலும் போராட்டம் நடத்தினார்கள். ஒன்றும் பயன் இல்லை.

மே மாதம் 19ம்தேதி தமிழகத்தில் ஒரு திருப்புமுனை நாளாக, சரித்திரத்தை மாற்றுக்கூடிய திருநாளாக அமையும். தேமுதிக மக்கள் நல கூட்டணியை பற்றி மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். எனவே அந்த கூட்டணிக்கு மக்கள் அதிக ஆதரவு கொடுக்க வேண்டும்.

தலைவர் விஜயகாந்த் 3 தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். 4, 5வது அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும். விவசாயிகளுக்காக நம்மாழ்வார் விவசாய திட்டம் என்ற பெயரில் நாற்று நடுவதற்கான கருவிகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தரமான நெல் விதைகளை வழங்கி 3 மடங்கு நெல் விளைச்சலை ஏற்படுத்துவோம். விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 விவசாயிகளை தமிழக அரசு செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்போம். அதன்மூலம் நமது நாட்டு விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியாகும் நிலை உருவாகும்.

விவசாயிகள் வருமானத்தை பெருக்குவதற்காக தமிழகத்தில் வெண்மை புரட்சியும், பசுமை புரட்சியும், விஜயகாந்த் ஏற்படுத்துவார்.
கீழவெண்மனி ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் 60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 வீடுதேடி வழங்கப்படும். இதன்மூலம் 30 லட்சம் விவசாய தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

இதேபோல மீனவர்கள், நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றுவோம். மாணவர்களுக்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும். இதன்மூலம் தண்ணீரில்லாத நிலை மாற்றப்படும். மழைநீரை முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தேர்தலில் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி மகத்தான வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பொறுப்பு ஏற்பார். கேப்டன் ஆட்சி அமைந்தால்
ரேசன் பொருட்கள் வீடுதேடி வரும். மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தடுப்போம். அதற்குபதில் செயற்கை மணல் தயாரிப்போம்.

தேமுதிக கடந்த 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்து தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்களையோ, மாவட்ட செயலாளர்களையோ, கடைக்கோடி தொண்டனையோ காசு, பணத்தை வைத்து விலை பேச முடியாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்று முடித்தார் பிரேமலதா.

English summary
DMDK leader Premalatha Vijayakanth has said that her party will improve the lifestyle of the farmers and weavers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X