மாறாத பாசம்! மறையாத நேசம்! விவாகரத்து மனைவியுடன் மீண்டும் திருமணம்... பில்கேட்ஸின் புதிய விருப்பம்
வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கடந்த ஆண்டு விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர் பில்கேட்ஸ். உலக கோடீஸ்வரர்களில் டாப் 5க்குள் உள்ளார். இவரது மனைவி பெயர் மெலிண்டா. 2 பேரும் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் 2 பேரும் 1994 ஜனவரி 1ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜெனிபர், ரோரி, போபி என 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் 27 ஆண்டு இல்லற வாழ்க்கைக்கு பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி விவாகரத்து பெற முடிவு செய்தனர். இதுதொடர்பாக 2021 மே மாதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

விவாகரத்து
அதன்பிறகு அமெரிக்க வாஷிங்டனில் உள்ள கிங் கவுன்டி நீதிமன்றத்தில் மெலிண்டா 2021 மே மாதம் விவாகரத்து மனு செய்தார். இதையடுத்து 2 பேரும் பிரிந்து செல்லலாம் எனக்கூறி நீதிமன்றம் 2021ல் ஆகஸ்ட் மாதம் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து இருவரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கூட அவர்களின் அறக்கட்டளை தொடர்பான விஷயங்களில் இருவரும் சேர்ந்தே பயணிக்கின்றனர்.

பில்கேட்ஸ் விருப்பம்
இந்நிலையில் தான் விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‛தி சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

சிறந்த திருமணம்
கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டு காலம் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. இது எனக்கு சற்று வித்தியாசமான காலமாகும். சிலவற்றை உணர்த்திய காலம் இது. எனக்கும் எனது மனைவிக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. விவாகரத்து ஆனாலும் எங்கள் திருமணம் சிறந்த திருமணம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் வளர்ந்த பிறகு திருமண வாழ்க்கை மாற்றம் காண்கிறது. என்னை பொறுத்தவரை அது விவாகரத்தாக மாறியுள்ளது.

அதிர்ஷ்டமாக கருதுகிறேன்
நாங்கள் ஒன்றாக அறக்கட்டளையை உருவாக்கினோம். முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நாங்கள் சேர்ந்து உருவாக்கிய அறக்கட்டளையில் ஆண்டு ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. மெலிண்டாவும் நானும் ஒன்றாக இந்த கூட்டத்தை நடத்துகிறோம். மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன். அவருடன் எனக்கு மிக முக்கியமான, நெருக்கமான உறவு இருந்தது. அதேசமயம் சில சமயம் உறவு சிக்கலானதாக மாறியது. இருப்பினும் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தோம்.

மீண்டும் திருமண விருப்பம்
எங்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பற்றி இனி ஆராய்வது வீணானது. யாருடைய திருமணமாக இருந்தாலும் கூட இதை ஆராய்வது என்பது சிக்கலானதாக இருக்கும். விவாகரத்தின் விஷயத்தில் இருந்து இருவரும் மீண்டு வருகிறோம். நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஆனால் நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். மெலிண்டா என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா என்பது எனக்குத் தெரியாது. என் எதிர்காலத்தை பொறுத்தவரை சிறப்பு திட்டம் எதுவுமில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications