கேரளாவில் மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. மக்கள் அச்சம்.. கர்ப்பிணிகள் உஷார்
கோழிக்கோடு : கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2வது அலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.
இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜிகா வைரஸ் அறிகுறியுடன் பெங்களூருவில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரளாவில் ஓயாத கொரோனா
கொரோனா 2வது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும், கேரளா இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீண்டதாக தெரியவில்லை. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 30க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மீண்டும் ஜிகா வைரஸ்
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு தலைதூக்க தொடங்கி உள்ளது. நேற்று கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து 2 நாட்களுக்கு முன் கோழிக்கோடு வந்த ஒரு பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

நோய் பரவாமல் நடவடிக்கை
இதை அடுத்து கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பும் கொசுக்களால்தான் ஜிகா வைரசும் ஏற்படுகிறது என்றும் ஆனால் இது ஆபத்தானது அல்ல என கூறப்படுகிறது.

பெண்கள் உஷார்
ஆனால் இந்த நோய் பாதிப்பு கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்கலாம் என கூறப்படுகிறது. ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்குதான் அறிகுறிகள் தோன்றுவதாக கருதப்படுகிறது. லேசான காய்ச்சல், கண் சிவத்தல், வீக்கம், தலைவலி, மூட்டு வலி, தற்காலிக பக்கவாதம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Recommended Video

மருந்து இல்லை
ஒருவரின் உடலுக்குள் ஜிகா வந்துவிட்டால் அதிகபட்சம் 2 வாரங்கள் மட்டுமே ஆற்றலுடன் இருக்கும். சிலருக்கு 2வது நாளிலேயே அறிகுறிகள் தென்படும். அதிகபட்சம் 7 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். ஜிகா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை இல்லை என்பதால், கொசுக்கடியை தவிர்க்க முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். சுத்தமான தண்ணீரிலேயே இந்த ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன. எனவே, தண்ணீர் உள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் ஆலோசனை கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications