
திருக்கார்த்திகை தீபம்..எங்கெங்கு விளக்கேற்றலாம்..இந்த திசை பார்த்து மறந்தும் தீபம் ஏற்றாதீர்கள்
கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தீபத்திருநாளில் தீபம் ஏற்றி வழிபட நம் இல்லத்தில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்பது நிச்சயம். நம்முடைய வீட்டில் எங்கெங்கு தீபம் ஏற்ற வேண்டும் எந்த திசை பார்த்து தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம். இன்றைக்கு பரணி நட்சத்திரம் உள்ளதால் நம்முடைய வீட்டில் இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு மேல் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும்.
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. குத்து விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். தீபம் ஏற்றி வழிபடுபவர்களின் வீடுகளில் மட்டுமல்ல அவர்களின் உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள். செல்வ வளம் பெருகும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்..கிரிவலத்தில் தரிசிக்க வேண்டிய கோவில்கள்

முப்பெரும் தேவியர்கள்
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் உறைவதாக ஐதீகம் எனவேதான் நம்முடைய வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் நாம் பெறலாம்.

கார்த்திகை தீபங்கள்
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கார்த்திகை தீப திருநாள்
கார்த்திகை தீப திருநாள் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நீங்கள் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. மற்ற விளக்குகள் பழையதாக இருக்கலாம் தவறில்லை. விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும். அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். இதன் மூலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தீபத்தில் ஒளி பரவி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும்.

மூன்று நாட்கள் தீபம்
பரணி, கார்த்திகை, ரோகிணி நட்சத்திர நாட்களில் தீபங்கள் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 5,6,7 ஆகிய 3 நாட்களுக்கு தீபம் ஏற்ற வேண்டும். நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையலறையிலும் விளக்கேற்றுவது அவசியம். சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை. தீபத்திருநாளில் தீபம் ஏற்றி வழிபட நம் இல்லத்தில் அன்னை மகாலட்சுமி குடியேறுவாள் என்பது நிச்சயம்.

மறந்தும் இந்த தவறு செய்யாதீர்கள்
கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றினால் துன்பம் நீங்கும், குடும்ப அபிவிருத்தி ஏற்படும். மேற்கு திசை நோக்கி விளக்கேற்றினால் கடன், தோஷம் நீங்கும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு திசை நோக்கி மறைந்த முன்னோர்களுக்கு விளக்கு ஏற்றலாம். வீட்டில் ஒரு போது தெற்கு திசை நோக்கி விளக்கேற்றக்கூடாது அப்படி ஏற்றினால் மரண பயம் ஏற்படும். நாம் ஏற்றும் தீபம் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். பூவால் குளிர்விக்கலாம் அல்லது குச்சியால் மட்டுமே குளிர்விக்க வேண்டும்.