For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்ய உத்தரவு..பொங்கல் நாளில் சிவன்மலை ஆண்டவர் உணர்த்துவது என்ன?

Google Oneindia Tamil News

திருப்பூர்: சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் நெற்கதிர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை நடைபெற உள்ள நிலையில், நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்ய ஆண்டவர் உத்தரவிட்டு உள்ளதால் நடப்பாண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும். இந்த தலத்தில் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.

Rice bran in the Tirupur Sivanmalai Aandavar Utharavupetti

சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார்."சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்." என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது. இங்குள்ள நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.

Rice bran in the Tirupur Sivanmalai Aandavar Utharavupetti

மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள், இந்தப் பெட்டியில் வைத்து பூஜிப்பது, வழக்கமாக உள்ளது. இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே.

இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

இதில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதற்கு முன்பு ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கி தோட்டாக்கள் வைத்து பூஜை செய்த போது இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படைந்தது. மற்றொரு முறை மண் வைத்து வழிபட்ட போது குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உருவானது.

மஞ்சள் வைத்து பூஜை செய்த போது தங்கம் போல மஞ்சள் விலை உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

Rice bran in the Tirupur Sivanmalai Aandavar Utharavupetti

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது.

அம்பு செம்பு, நிறைநாழி, வேல் வைத்தும் பூஜிக்கப்பட்டது. கடந்த ஆண்டு திருக்கைலாய காட்சியில் அம்மை அப்பரின் திருமண கோலத்தில், விநாயகர் மற்றும் முருகன் உடன் இருக்கும் அற்புத காட்சியும், சிவனின் அருள் பெற்ற அகஸ்திய முனிவரின் ஜாதகம், அகோர வீரபத்திரர், ஒரு திருமாங்கல்யம் மற்றும் 32 ரூபாய்க்கான ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கடைசியாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி பக்தரின் கனவில் தோன்றியதாக இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு வைத்து பூஜை செய்து, கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கேயம் அருகே உள்ள காடையூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றியதாக இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு நெற்கதிர்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, கண்ணாடி பெட்டிக்குள் இருந்த இளநீர், ஈக்குமாறு ஆகியவை அகற்றப்பட்டு, நெற்கதிர்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று உள்ளதால், நடப்பாண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் விவசாயம் செழிக்கும் என உணர்த்தியுள்ளார் சிவன்மலை ஆண்டவர் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Sivan Malai Andavar Utharavu Petti Special poojas were performed with rice brans paddy in Shivanmalai Murugan temple. As the harvest festival of Pongal is about to take place, the farmers are happy that the paddy production will increase this year as the rice grains are placed in the Aandavar Utharavu Petti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X